ஏதேனும் ஒரு ஹோட்டலுக்கு சென்றால் ‘ஆயிப் போச்சு..’ என்று சொல்வதையும் கேட்டிருப்போம், ‘ஆறிப் போச்சு.. பரவாயில்லையா’ என்ற வார்த்தைகளோடு சூடாக இல்லாத உணவு பரிமாறப்படுவதையும் பார்த்திருப்போம்.
சுந்தர்.சியின் ‘காபி வித் காதல்’ இதில் இரண்டாவது ரகம். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த உணர்வு எழுவதுதான், இன்னும் பெரிய சோகம். இதற்கு என்ன காரணம்?
பழைய பாட்டில்.. பழைய ஒயின்..!
ஊட்டி மலைப்பகுதியில் வாழும் ஒரு பெற்றோர். அவர்களுக்கு 1 மகள், 3 மகன்கள். இரண்டாவதாகப் பிறந்த ஒரு மகனும் மகளும் இரட்டையர்கள் (உணர்வுப்பூர்வமாக இருவரும் ஒரேமாதிரியாகச் சிந்திப்பவர்கள்).
மூத்த மகனுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உண்டு. ஆனால், மனைவியுடன் நெருக்கமான பிணைப்பு இல்லை. திடீரென்று அறிமுகமான ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவர் மனதில் சபலம் பிறக்கிறது.
கர்ப்பிணியாக இருக்கும் மகளோ, எந்நேரமும் பிஸியாக இருக்கும் கணவனை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் இருக்கிறார். வயிற்றில் இருக்கும் குழந்தையோடு தனது உறவுகளின் வருத்தங்களையும் சுமக்கிறார்.
ஒருநாள் அந்தப் பெண் அவரைவிட்டுப் பிரிந்து ஒரு ஹீரோவுடன் சென்றுவிடுகிறார்.
இளைய மகனுக்கு ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசை. அதற்காக, ஒரு இடமும் பார்க்கிறார்.
அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் அது தங்கள் குடும்பச் சொத்து என்று சொல்ல, அதனை அடைவதற்காக அவரது பெண்ணைத் திருமணம் செய்யத் தயாராகிறார்.
தன்னோடு நெருங்கிப் பழகும் தோழி தன்னை ரொம்பவும் நேசிக்கிறார் என்ற உண்மை தெரியாமலேயே இருக்கிறார் அவர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு சிக்கல் என்றிருக்கும் இக்கதையில், அந்த பிரச்சனைகள் எல்லாம் எவ்வாறு பூதாகரமாகிப் பின்னர் தீர்ந்தது என்பதைச் சொல்கிறது ‘காபி வித் காதல்’.
பிரச்சனைகளும் தீர்வுகளுமாக இருக்கும் ஒரு கதை ‘பீல் குட்’ வகையறாவில் சேரும் என்று இயக்குனர் சுந்தர்.சி நம்பியதில் தவறில்லை.
ஆனால், இதன் கதை அரதப்பழசான பல இந்திப் படங்களை நினைவுபடுத்துவதோடு, ‘பழைய பாட்டில்.. பழைய ஒயின்..’ என்ற உணர்வையும் உருவாக்குகிறது. பருகினாலும் ருசிக்கவில்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.
லிட்டில் மிஸ் சன்ஷைன்!
மறைந்த பிரதாப் போத்தன் – அருணா பால்ராஜின் பிள்ளைகளாக ஸ்ரீகாந்த், ஜீவா, திவ்யதர்ஷினி, ஜெய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இவர்களது ஜோடிகளாக சம்யுக்தா சண்முகம், மாளவிகா, ஆர்யா, அம்ரிதா ஆகியோர் வந்திருக்கின்றனர்.
கிளைமேக்ஸில் ஆர்யாவின் வருகை உண்மையிலேயே கலகலப்பூட்டுகிறது. ’இவ்ளோ நேரமும் இதைத்தானடா எதிர்பார்த்தோம்’ என்று ரசிகர்களையும் புலம்ப வைக்கிறது.
ஐஸ்வர்யா தத்தாவும் ரைசா வில்சனும் கவர்ச்சிப் பதுமைகளாக வந்து போயிருக்கின்றனர்.
நகைச்சுவை என்ற பெயரில் யோகிபாபுவும் ரெடின் கிங்ஸ்லியும் நம்மை ரொம்பவே சோதிக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து ஸ்ரீராம், விச்சு விஸ்வநாத் என்று ஏறக்குறைய ஒரு டஜன் பாத்திரங்கள் திரையில் வந்து போகின்றன.
’வேறேதோ படங்களில் இதே மாதிரி பார்த்திருக்கிறோமே’ என்ற உணர்வை அனைவருமே ஏற்படுத்துவதை என்னவென்று சொல்வது?
ஸ்ரீகாந்த் – சம்யுக்தாவின் மகளாக வரும் விருத்தி விஷால், கிளைமேக்ஸில் டான்ஸ் ஆடி கலகலப்பூட்டுகிறார்.
அந்த இடம், 2006-ல் வெளியான ‘லிட்டில் மிஸ் சன்ஷைன்’ எனும் படத்தை நினைவூட்டுகிறது. மொத்தக் கதையும் அதை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டதோ எனும் எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ ஒரு சோகத்தை தாங்கிக் கொண்டு வாழ்வது போன்ற அமைக்கப்பட்ட ‘லிட்டில் மிஸ் சன்ஷைன்’ கதையின் முடிவு, அவரவர்களின் குறைகளை அப்படியே மனதார மற்றவர்கள் ஏற்பதாக அமைந்திருக்கும்.
அதோடு, ‘இதுதான் சிறந்தது’ என்று உலகம் வகுத்துள்ள வரையறைகளையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கும்.
ஆனால், ‘காபி வித் காதல்’ அப்படி எந்த உடைப்புகளையும் நம் மனதில் நிகழ்த்துவதில்லை. மாறாக, இதுவரை தமிழ் திரையுலகம் கண்ட பல ‘க்ளிஷே’க்களின் தொகுப்பாகவே உள்ளது.
வீணான கூட்டுழைப்பு!
பெரும்பாலான பிரேம்களில் அரை டஜன் முதல் ஒரு டஜன் கலைஞர்கள் இடம்பெற்றாலும், அவர்களைத் திரையில் காண்கையில் நெருடலை உருவாக்கவில்லை கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு.
மலைப்பிரதேசத்து அழகை அள்ளித் தந்திருப்பதோடு, உள்ளரங்க காட்சிகளிலும் கூட பளிச்சென்று இருக்கிறது ஒளிப்பதிவு.
பென்னி ஆலிவரின் படத்தொகுப்பு பாடல் காட்சிகளில் பாய்ந்தோடினாலும், உரையாடல்களை மிகநேர்த்தியாகச் செதுக்கியிருக்கிறது.
யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் போரடிக்கவில்லை. அதேநேரத்தில், திரையரங்கில் முதன்முறையாக கேட்டவுடனே சட்டென்று ஈர்க்கும் வகையிலும் இருக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆனாலும், திரும்பத் திரும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் தரத்துடன் பாடல்களும் காட்சியமைப்பும் இருப்பதை மறுக்க முடியாது.
நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் கலைஞர்களும் பேருழைப்பை இதில் கொட்டியிருக்கின்றனர். அது எல்லாமே வீணாகியிருக்கிறது.
உடனே, இதன் திரைக்கதை ‘மொக்கை’ என்று சொல்வது அபத்தமாகிவிடும். முடிந்தவரை திரைக்கதையாசிரியர்கள் நறு.நாராயணன், மகாகீர்த்தி இருவரும் அத்தனை கதாபாத்திரங்களையும் வைத்துக்கொண்டு சிறப்பான திரைக்கதையையே தந்திருக்கின்றனர்.
அடிப்படைக் கதையே ‘இதெல்லாம் ரொம்ப பழசு’ என்ற எண்ணத்தை ஆழப்படுத்துவதால் ‘ட்ராமா’ பாணியில் அமைந்த திரைக்கதையால் எவ்வித மாயாஜாலத்தையும் நிகழ்த்த இயலவில்லை.
மிக முக்கியமாக, சுந்தர்.சியின் ட்ரேட்மார்க் படங்களான ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘ஜானகிராமன்’, ‘முறைமாமன்’, ‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களில் இருந்த நகைச்சுவை இதில் சுத்தமாக இல்லை.
அதை முற்றிலுமாகத் தவிர்த்து, சோகமும் கொண்டாட்டமும் சம அளவில் நிரம்பிய ஒரு ‘பீல் குட்’ படம் தர வேண்டுமென்று மெனக்கெட்டது ஏன் என்று தான் தெரியவில்லை.
ஏனென்றால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி அப்படியொரு படைப்பைத் தரும்போது, அதில் புதுமை என்று சில அம்சங்கள் இருக்க வேண்டும்.
அப்படி எதுவும் ‘காபி வித் காதல்’ படத்தில் இல்லை. அதனால் ஒட்டுமொத்தப் படமும் ஒருவித ‘பிளாஸ்டிக்’ தன்மையை கொண்டிருக்கிறது.
சுந்தர்.சி இயக்கிய படங்களில் ‘உள்ளம் கொள்ளை போகுதே’, என்னைப் பொறுத்தவரை அற்புதமான ‘பீல் குட்’ திரைப்படம். அதில் நகைச்சுவையையும் மீறி காதல் மேலோங்கியிருக்கும்.
ஆனாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த நகைச்சுவை குறைவாக இருந்ததால் அப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
அதோடு ஒப்பிடுகையில், ‘காபி வித் காதல்’ ஒரு மெகா பட்ஜெட் சீரியல் போன்றே தோற்றமளிக்கிறது.
எதிர்காலத்தில் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதற்கு வேண்டுமானால் அத்தகுதி பயன்படலாம்.
தனது ரசிகர்களுக்குத் திருப்தி தரும் படைப்புகளைத் தருவதை சுந்தர்.சி தொடர்ந்தாலே போதும்; அவை தானாகவே ‘பீல் குட்’ திரைப்பட அந்தஸ்தை எட்டிவிடும். அதனைப் புரிந்துகொள்வது அவருக்கும் நல்லது; நமக்கும் நல்லது!
-உதய் பாடகலிங்கம்