தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு அரசு மரியாதை செலுத்தவேண்டும் என பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழறிஞர் பேரா. க. நெடுஞ்செழியன் அவர்கள் காலமான செய்தி தமிழர்களுக்குப் பெருந்துயரத்தை அளித்துள்ளது.
அவரின் மறைவின் மூலம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பிற்குத் தமிழ் ஆளாகியுள்ளது.
ஆசீவக சமயம், தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயம் என்பதை முதன்முதலாகத் தக்கச் சான்றுகளுடன் நிறுவிய பெருமைக்குரியவர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராக விளங்கியதோடு, அப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருக்கான பட்டியலில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்த வேளையில்,
கர்நாடகக் காவல்துறையால் பொய்யான குற்றச்சாட்டில் கொடிய தடாச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுப் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்.
அவர் படைத்த நூல்கள் அனைத்தும் சிறந்த ஆய்வு நூல்களாகும். அவற்றை தேசியமயமாக்க வேண்டும் என்றும்.
அவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்” என்று பழ. நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.