என் நண்பர்கள் என்னை கேட்பதுண்டு வேகமாக வாசிப்பதற்கு என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் என்று. அதாவது அதிக புத்தகங்களை படிப்பதனால் நான் வேகமாக வாசிப்பவன் என்று அவர்களாக கருதிக்கொண்டதன் விளைவு தான் இந்தக் கேள்வி.
உண்மையில் அதிக புத்தகங்களை வாசிக்க ரகசியம் எதுவும் தேவையில்லை. மாதம் நான்கைந்து புத்தகங்களை வாசித்தாலும், அவை அனைத்தையும் நான் மிகவும் பொறுமையாகவே வாசிப்பேன்.
ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது எனக்கு பிடித்த வரிகளை அடிக்கோடிடும் வழக்கம் கொண்டவன்.
அந்த புத்தகத்தை படித்த பின்னர் அடிக்கோடிட்டதை வேறொரு நோட்டுப் புத்தகத்தில் எழுதும் பழக்கமும் உள்ளது என்னிடம். இது அனைத்தையும் செய்ய அதிக நேரம் பிடிக்கும்.
எனது வேலையை முடித்து விட்டு இது அனைத்தையும் செய்ய என்னால் நேரம் எப்படி ஒதுக்க முடிகிறது?
7 மணி நேரம் உறங்க எங்கிருந்து நேரம் கிடைக்கிறது?
திரைப்படங்கள் அல்லது தொடர்கள் பார்க்க எங்கிருந்து நேரம் கிடைக்கிறது?
எங்கிருந்தும் நேரம் கிடைப்பதில்லை. அதற்கு நாம் நேரம் ஒதுக்குகிறோம் ஏனென்றால் அதை முக்கியமென்று நாம் கருதுவதால்.
அதேபோல் தான் புத்தகத்தின் அருமையை உணர்ந்த நபர் ஒருவர் வாசித்தலுக்கும் நேரம் ஒதுக்குவது பெரிய விடயமாக இராது.
வாசிப்பை தொடங்குவதற்கு முன்பு ஒரு நபருக்கு மூன்று தடைகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.
அந்த தடைகளையும் அதற்கு தீர்வுகளையும் முன் வைக்கிறேன். இந்த தீர்வுகளை பயன்படுத்தி நீங்களும் வாசித்தல் எனும் மிக உயரிய பழக்கத்தை தொடங்குங்கள்.
நேரம்
புத்தகம் வாசித்தலை ஒரு செயலாக எண்ணுவதற்கு பதில் சாப்பிடுவதைப் போல், மூச்சு விடுவதைப் போல் ஒரு இயற்கையாக நடக்கும் நிகழ்வைப் போல் கருதுங்கள். வாசித்தல் என்பது ஒரு நிர்பந்தமான இயல்பு நிலையாக இருக்க வேண்டும்.
எப்பொழுதும் ஒரு புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசியுங்கள்.
உங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உதவாத தொலைக்காட்சி தொடர்கள், வாக்குவாதங்கள் போன்றவற்றிற்கு பதில் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுவாருங்கள்.
பணம்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
கற்பதற்காக பிச்சை எடுத்தாலும் தவறில்லை என்று ஒளவைப்பாட்டி பல காலங்களுக்கு முன்பே பாடி வைத்துள்ளாள்.
இன்றைய டிஜிட்டல் உலகில் நமக்கு தேவைப்படும் புத்தகம் எங்கிருந்தாலும் அதை நம் வீட்டு வாசலிற்கே கொண்டு வந்து தருமளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதுவும் மிக குறைந்த பணத்தில்.
புத்தகம் என்று வந்துவிட்டால் பணத்தைப் பற்றி மறந்து விடுங்கள். உங்களுக்கு ஒரு புத்தகம் பிடித்துள்ளது என்றால் சிறிதும் யோசிக்காமல் அதை வாங்கிவிடுங்கள். ஏனென்றல் புத்தகம் வாசிப்பது என்பது ஒரு தேவை.
16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் எராஸ்மஸ், என்னிடம் சிறிது பணமிருந்தால், நான் அதில் புத்தகங்களை வாங்குவேன். அது போக மீதி ஏதாவது இருந்தால் அதில் உணவு மற்றும் துணிகளை வாங்குவேன் என்று கூறியுள்ளார்.
புத்தகம் வாங்குவது ஒரு செலவல்ல, அது நாம் செய்யும் ஒரு சிறந்த முதலீடு. ஒரு புத்தகம் உங்களுக்கு உதவுமென்று நீங்கள் கருதினால் பணமோ, நேரமோ அல்லது நம் சோம்பேறித்தனமோ எதுவும் நம்மை தடுத்த நிறுத்த அனுமதிக்கக்கூடாது.
நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தை வாங்க தள்ளுபடி வரும் வரை காத்திருக்காதீர்கள். ஒரு 20 – 30 ரூபாயில் நாம் கோட்டை கட்ட போவதில்லை.
நோக்கம்
வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போனதற்கு மிக பெரிய காரணம் அதன் நோக்கத்தை நாம் மறந்ததால் தான். புத்தகத்தின் பயன் பள்ளியோடோ அல்லது கல்லூரியோடோ முடிந்து விடுகிறது என்று நாம் கருதுகிறோம்.
புத்தகம் என்பது மதிப்பெண்களை பெறுவதற்கு மட்டுமே என்று எண்ணுகிறோம். புத்தகம் என்பது படிப்பதற்காக மட்டுமல்ல கற்பதற்காகவும். படித்தல், கற்றல் இரண்டிற்கும் வித்தியாசமுண்டு.
மனித இனம் 5000-ம் வருடங்களுக்கு மேலாக தனது ஞானத்தை புத்தக வடிவில் பதிவு செய்து வந்துள்ளது.
அதாவது இப்பொழுது நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு உங்களை விட புத்திசாலியான நபர், பல வருடங்களுக்கு முன்பே அதை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்.
தோல்வியை சந்தித்து கற்பதற்கு பதில் புத்தகத்தைப் படித்துக் கற்றுக்கொள்வது நம் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.
புத்தகம் வாசிப்பதன் மூலம் பலர் செல்வந்தர்களாக உள்ளனர்.
வாசித்தலின் மூலம் அடிமை சங்கிலியிலிருந்து பலர் வெளிவந்துள்ளனர்.
மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்த பலரை புத்தகம் தான் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.
எனவே அதிக புத்தகங்களை வாசிக்க ரகசியமென்று ஒன்றில்லை. உங்கள் முன்னுரிமைகள் தான் அந்த ரகசியம் என்று கூட சொல்லலாம்.
உங்கள் முன்னுரிமை கற்றலுக்கா? அல்லது நேர விரயத்துக்கா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
– நன்றி: முகநூல் பதிவு
–