– உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவருடைய தலைமுடியை வெட்டியும், கால்சட்டையை கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும்,
சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், மாணவரின் தாய் கலா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் மாணவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் நடந்து கொண்டதாகவும்,
அவர் பணியில் இருந்த போது சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவர் 45 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், இந்த குற்றச்சாட்டுகள் தவறு என்று அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமை ஆசிரியர் ராபர்ட் தரப்பில், தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பள்ளி வருகைப் பதிவு ஒவ்வொரு மாதமும் 50 சதவீதம் தான் இருந்ததாகவும், தனக்கு எதிரான புகார் ஆதாரமற்றது என்றும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, “மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மாணவனின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை.
மேலும் போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது.
மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை ஆசிரியர்கள் மீறும் போது தான் அவர்களை தண்டிக்க முடியும்.
ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது.
பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், சம்பந்தப்பட்ட ஆசியரின் பெயரும் மட்டுமல்லாது, பிற மாணவர்களுடைய நலனும் பாதிக்கப்படுகிறது.
மாணவர்களை நன்றாக படிக்கச் செய்வது, ஒழுக்கத்தைப் பேணச் செய்வது ஆசிரியர்களின் கடமை.
அதை ஊக்கக் குறைவுபடுத்தும் போது, அவர்களால் அற்பணிப்பு உணர்வுடன் தங்கள் பணியைச் செய்ய முடியாது.
வீட்டிலும், சமூகத்திலும் குழந்தைகளை பாதுகாத்து கண்காணிப்பது பெற்றோரின் கடமை” என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.