இளம் சிறார் வழக்குகளில் வழிகாட்டுதல் தேவை!

– உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே குப்பம்பட்டி ராஜ்குமார். இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, வடமதுரை போலீசார் 2017-ல் வழக்குப் பதிந்தனர்.

சம்பவத்தின்போது ராஜ்குமாருக்கு வயது 16. அவருக்கு 2019-ல் திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராஜ்குமார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது.

அப்போது, “விசாரணையில் சட்ட மீறல்களைக் கண்டறிந்தோம். மனுதாரரை மேஜராக கருதி கீழமை நீதிமன்றம் விசாரித்திருந்தாலும், 21 வயது பூர்த்தியாகும் வரை காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும். சிறைக்கு அனுப்ப முடியாது என சட்டம் கூறுகிறது.

கல்வி, திறன் மேம்பாடு, ஆலோசனை, மனநல மருத்துவரின் உதவியுடன் நடத்தையை மாற்றியமைத்தல் உள்ளிட்ட சீர்திருத்த சேவைகளை பெற உரிமை உள்ளது.

இந்த வழக்கில் இந்நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என உறுதியாக தெரியவில்லை. கீழமை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நேரத்தில், மனுதாரர் 18 அல்லது 19 வயதுடையவராக இருக்கவில்லை. இருப்பினும் உடனடியாக மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அவருக்கு 21 வயது பூர்த்தியாகும் வரை காப்பகத்தில் தங்க வைக்கவில்லை என மனுதாரர் தரப்பு கூறுகிறது. இது உண்மையாக இருந்தால், வழக்கில் நடந்த மற்றொரு சட்ட மீறலாகும்.

மனுதாரர் சிறையில் கடும் குற்றவாளிகளுடன் உள்ளார். அவரை அங்கிருந்து விடுவித்தால் எவ்வளவு துாரம் பாதுகாப்பானது என்பது குறித்து எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. அது மனுதாரர் மற்றும் சமூக நலனுக்கு உகந்ததாக இருக்காது. மனுதாரருக்கு தற்போது 22 வயது பூர்த்தியாகியுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற வழக்குகளை கையாள சில வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டியுள்ளது.

இளம் சிறார் வழக்குகள் விசாரணையில், எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்து சிறை ஏ.டி.ஜி.பி., நவம்பர் 8-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

Comments (0)
Add Comment