தண்ணீரை சேமிக்க விழிப்புணர்வு தேவை!

– குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பிந்தைய பயணத்திலும் முக்கியமானதாக உள்ளது.

ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகையால், நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது.

கிராமங்களில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன. பல உள்ளூர் ஆறுகள் அழிந்து வருகின்றன.

விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளால் தண்ணீர் அதிகமாக சுரண்டப்படுகிறது.  சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைந்து, வானிலை மாற்றம் ஏற்படுவதுடன் பருவம் தவறி அதிகப்படியான மழை பெய்வது அதிகரித்துவிட்டது.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தூய குடிநீரை விநியோகிப்பது வருங்காலங்களில் பெரிய சவாலாக இருக்கும்.

தண்ணீரை பயன்படுத்துவது மற்றும் மறு சுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மூலமே நீர்வளத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைக்க முடியும்.

நீர் வளத்தை கவனமாக கையாள அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நீர் சேமிப்பு குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள் மற்றும் குழந்தைகள் நீர் சேமிப்பை தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும்.

அப்போது தான் இனிவரும் தலைமுறையினருக்கு சிறப்பான, பாதுகாப்பான எதிர்காலத்தை நாம் பரிசளிக்க முடியும்” என அறிவுறுத்தினார்.

Comments (0)
Add Comment