‘காந்தாரா’ படத்தில் வராஹ ரூபம் பாடலுக்குத் தடை!

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘காந்தாரா’. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பழங்குடியின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக பாராட்டப்படுகிறது. தேசிய அளவில் வசூலில் சக்கைப்போடு போடுகிறது.

படத்தின் இறுதிக் காட்சியில் ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் பாடல், கேரளாவை சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற இசைக்குழு சார்பில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘நவரசம்’ என்ற பாடலுடன் ஒத்துப்போவதாகக் குற்றாம்சாட்டப்பட்டது.

வராஹ ரூபம் பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் காந்தாரா படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு தெரிவித்திருந்தது.

காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று கோழிக்கோடு நீதிமன்றத்தில் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வராஹ ரூபம் பாடலுக்கு தடை விதித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் அமேசான், யூ டியூப், ஸ்பாட்டிபை, விங்க் மியூசிக், ஜியோசான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Comments (0)
Add Comment