தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
முன்னதாக இந்த ஆண்டில் (2022) இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல், பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை மற்றும் வைபவின் காட்டேரி உள்ளிட்ட படங்களில் மிக முக்கிய வேடங்களில் வரலக்ஷ்மி நடித்திருந்தார்.
பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக கலர்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கில் ஹனுமன், வீர சிம்ம ரெட்டி மற்றும் சபரி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் வரலக்ஷ்மி கன்னடத்தில் லகாம் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார்.
முன்னதாக நடிகை சமந்தா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி இருக்கும் யசோதா திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் கொன்றால் பாவம்.
சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கொன்றால் பாவம் திரைப்படத்தை EINFACH STUDIOS மற்றும் D PICTURES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்று அக்டோபர் 28-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று (28.10.22) காலை சென்னையில் உள்ள வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு நவம்பர் 1-ம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.
1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையான இந்த திரைப்படம், மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குநர் தயாள் பத்மனாபன், இந்தக் கதையை முதலில் கன்னடத்தில் இயக்கினார். கன்னடத்தில் இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துனை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது.
பிறகு, பிரபல தயாரிப்பாளாரான அல்லு அரவிந்தின் தயாரிப்பில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அதை இயக்கிய தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்க உள்ளார். விழுப்புரத்தில் பிறந்த தமிழரான தயாள் பத்மநாபன், கன்னடத்தில் 18 திரைப்படங்களையும், தெலுங்கில் 1 திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் அவர் கன்னட மொழியில் 8 திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.