– உஷாராக இருக்க சைபர் கிரைம் காவல்துறை அறிவுரை
படிப்பை முடித்து, வேலையை எதிர்நோக்கி காத்துள்ள இளைஞர்கள், பெண்களுக்கு பகுதி நேர, முழு நேர வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க ஆன்லைனில் பல நிறுவனங்கள் உள்ளன.
அதில் பதிவு செய்துள்ளவர் விபரங்களை திருடும் கும்பல், அதே நிறுவனங்கள் பெயரில், இளைஞர்கள், பெண்களை தொடர்புகொண்டு பணம் பறித்து வருகின்றன.
அதன்படி, தமிழகம் முழுதும், 2021ல், 1,150 பேர் பணத்தை பறிகொடுத்தனர். நடப்பாண்டில், 10 மாதங்களில் மட்டும், 2,120 பேர் அளித்த புகார்படி, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 600க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரணையில் உள்ளன.
இது குறித்து விளக்கமளித்த சைபர் கிரைம் காவல்துறை ,“பெரும்பாலான ஆன்லைன் மோசடிகளுக்கு ஆசை தான் காரணம்.
வேலைக்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ். மட்டுமின்றி, வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வரும் தகவல்களை கவனமுடன் கையாள வேண்டும்.
அந்த தகவல்கள், உண்மையான நிறுவனத்திடமிருந்து வந்ததா என, உறுதிப்படுத்த வேண்டும்.
முடியாத பட்சத்தில், அத்தகவல் அனுப்பியவர்கள், முன்பதிவு, மடிக்கணினி, பயிற்சி என எந்த வகையில் கட்டணம் செலுத்த கோரினாலும் பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆன்லைனில் உண்மையான வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் நிறுவனங்களின் போர்வையில் தான் மோசடி நபர்கள் ஊடுருவி உள்ளனர்.
அவர்கள் அதில் மட்டுமின்றி, வங்கி, நிதி நிறுவனங்கள் பெயரிலும், அவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் பெயரிலும் மோசடிகளை செய்து வருகின்றனர்.
அந்த கும்பல் உத்தரகண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீஹார் மாநிலங்களை சேர்ந்தவர்களாக அதிகளவில் உள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்தாலும் போலி கணக்குகளை துவக்கி கையாள்வதால், பணத்தை பறிமுதல் செய்ய முடிவதில்லை.
அதனால் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோராக இருந்தாலும், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வோராக இருந்தாலும், கவனமுடன் இருந்தால் மட்டுமே, மோசடி நபர்களின் சதியில் இருந்து தப்ப முடியும்” எனக் கூறினர்.
– நன்றி: தினமலர் இதழ்