உலகின் அழுக்கு மனிதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 23-ம் தேதி உயிரிழந்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குளிக்காமல் இருந்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
அமாவு ஹாஜி என்ற 94 வயதான இவர் கடந்த 60 ஆண்டுகள் தனது வாழ்நாளில் குளிக்காமல் இருந்து சாதனை படைத்துள்ளார்.
ஈரான் நாட்டில் உள்ள பார்சல் அருகே தேஜா என்ற சின்ன கிராமத்தில் வசித்து வந்தார் அமாவு ஹாஜி. தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு யாருடனும் சேராமல் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்தது தான் இவரை எல்லோரும் உற்று நோக்கும் படி வைத்தது.
இதன் காரணமாகவே ‘உலகின் அழுக்கு மனிதர்’ என்று அழைக்கப்பட்டார். சிலர் எதோ ஒருவகையில் கவனம் ஈர்ப்பார்கள். ஆனால் அவர் குளிக்காமல் இருந்து உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.
அவரை வைத்து 2013-ம் ஆண்டு “தி ஸ்ட்ரேன்ஜ் லைப் ஆப் அமாவு ஹாஜி” என்ற ஆவணப்படமும் எடுக்கப்பட்டது. இதன் பிறகு தான் இவரை பற்றிய தகவல் பல நாடுகளுக்கு அதிகம் போய் சேர்ந்தது.
ஏன் அவர் குளிக்கவில்லை…?
குளித்தால் உடல் ரீதியான பிரச்சனை நோய் ஏற்படும் என்று பயந்து அவர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக தனது உடம்பில் உள்ள அழுக்கை பொருட்படுத்தாமல் அமாவு ஹாஜி குளிக்காமல் இருந்து உலக சாதனை படைத்தார்.
என்ன குளிக்காமல் 60 வருடமா? என்று ஆச்சரியப்பட வைத்துள்ளது. எப்படி இவர் குளிக்காமல் இருந்தார். அவருக்கு நோய் தாக்கம் எதுவும் ஏற்படவில்லையா? என்று பல கேள்விகள் நமக்குள் எழலாம்.
ஆனால் இது தான் உண்மை. மருத்துவர்களின் கூற்றுப்படி தினமும் குளித்தால் தான் நமது தோல் ஆரோக்கியமாக இருக்கும்.
நமது அன்றாட செயல்பாட்டில் குளிப்பது என்பது தினமும் தவறாமல் இருப்பதாகும்.
உடல் சுத்தம் மட்டும் அல்லாது நமது உடலின் வெப்ப நிலையை சீராக வைப்பதற்கு குளிப்பது சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.
அதனால் தான் காய்ச்சல் இருக்கும் போது கூட மருத்துவர்கள் உடலில் ஈரத்துணியை வைத்து துடைத்து எடுக்கச் சொல்வார்கள். அப்படிச் செய்யும் போது உடல் சூடு சமநிலைக்கு வரும்.
ஆனால், இவர் எப்படி 60 ஆண்டு காலம் குளிக்காமல் இருந்தார். அதிக நாட்கள் குளிக்காமல் இருந்தால் உடலில் இறந்த செல்கள் அப்படியே தோலில் தங்கிவிடும்.
அந்த செல்கள் வழியாக பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் நோய்கள் பரவும் என மருத்துவ ரீதியாக பார்க்கப்படுகிறது.
உடல் நிலை சரியில்லாத போது நம்மால் மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்தாலே நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும். ஆனால் இவர் குளிக்காமல் இருந்தும் அந்த கிராமத்து மக்கள் அவரை ஒதுக்கவில்லை. இவர்தான் அவர்களை விட்டு தனித்து வாழ்ந்துள்ளார்.
வெறும் தரையில் குழி தோண்டி அதில் படுத்து உறங்கிய அவருக்கு கிராமத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு திறந்தவெளி குடிசையை அவருக்கு அமைத்துக் கொடுத்தனர்.
அமாவு ஹாஜி தனது இளமைக் காலத்தில் உணர்ச்சி ரீதியில் பாதிக்கப்பட்டதால் அவர் தனிமையை விரும்பியுள்ளார்.
அவர் சமைத்த உணவுகளை சாப்பிடுவது இல்லையாம். விலங்குகளின் மலத்தை புகைப்பது அழுகிய பன்றிகள், இறைச்சி அவரது விருப்ப உணவாக இருந்ததாகக் கூறுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து இவரை குளிக்க வைத்துள்ளனர். அதன் பிறகு அமாவு ஹாஜிக்கு உடல் ரீதியான பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் இறந்ததுக்கு குளிக்க வைத்தது தான் காரணம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இவரைப் பற்றி தெரியாதவர்களுக்கும் அமாவு இவரது இறப்பு யார் இவர் என்று யோசிக்க வைத்துள்ளது.
– யாழினி சோமு