– ம.நடராசன் அளித்த விளக்கம்
…..படிப்படியாக அவருடைய உடல் முன்னேற்றம் அடைந்து வருகையில் பலரும் எழுப்புகிற இன்னொரு முக்கியமான கேள்விக்கான பதிலையும் இங்கு சொல்லியாக வேண்டும்.
“அம்மா அவர்களின் உடல் சீராக முன்னேற்றம் அடைகிறது என்று சொல்கிறபோது அவர்களைப் பார்க்க முக்கியமானவர்களை ஏன் அனுமதிக்கவில்லை?”
“அம்மாவின் உடல் நிலை தேறிவருகிறது; விரைவில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்பது தான் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கும் டாக்டர்கள் அனைவரின் கருத்தும் கூட.
ஆனால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற இந்தச் சமயத்தில் அவரைப் பார்க்கப் பலரையும் அனுமதிப்பது இன்னொருவிதத்தில் நோய்த்தொற்றுகள் உருவாக வாய்ப்பு ஏற்படுத்திவிடும் என்பதாலேயே அவரை மற்றவர்கள் சந்திப்பது தவிர்க்கப்படுகிறது.
இது தவிர அம்மாவைப் படுக்கையில் பார்க்க நேர்கிறவர்கள் உணர்ச்சிவயப்பட்டு எதிர்வினையாற்றுவது அம்மா அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் தான் பார்வையாளர்கள் இப்போதைக்குத் தவிர்க்கப்படுகிறார்கள்.
மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணங்களும் இதன் பின்னணியில் இல்லை என்பதை அம்மாவின் நலனில் அக்கறை கொண்டவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அதோடு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அம்மா அவர்களை ஒரு பெண் மணியாக ஏன் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்?
மருத்துவமனைக்குரிய பிரத்யேக உடையுடன் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் ஒருவர் சட்டென்று பார்வையாளர்களை இயல்பாகச் சந்தித்துவிட முடியுமா என்கிற கேள்விகளை குற்றம் சாட்டுகிற யாரும் எழுப்புவதில்லை.
கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் அவருக்கு மருத்துவச் சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது 10.02.2009 முரசொலி இதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
பார்வையாளர்களைத் தவிர்க்கும் விதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பு அன்றைய முதல்வருக்குப் பொருந்தும் என்றால் இன்றைக்கு மருத்துவச் சிகிச்சை பெறும் முதல்வரான அம்மாவுக்குப் பொருந்தாதா?
அம்மாவின் நலனை உண்மையிலேயே விரும்பக்கூடியவர்கள் எங்கிருந்தோ பிரார்த்தனை செய்கிறார்கள். மனதார வேண்டுகிறார்கள்.
நிச்சயம் நல்ல எண்ணம் கொண்ட அந்த மகத்தான தொண்டர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.
அவர்களைப் போன்ற எளிய உள்ளங்களின் வாழ்த்தும். பிரார்த்தனையும் அம்மாவை விரைவிலேயே பூரண நலம்பெற வைக்கும். அம்மாவின் தொண்டர்கள் எது குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானதான அவரே குறிப்பிட்ட ஒரு பொன்மொழியை இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் நினைவு கூர்கிறோம்.
அஞ்சுவது யாதொன்றுமில்லை. அஞ்ச வருவதுமில்லை’ என்கிற அப்பர் பெருமானின் பொன்மொழியே எனக்குப் பிடித்த பொன்மொழி”.
– ம.நடராஜனின் ‘திருக்குவளையே திரும்பிப் பார்’ என்ற நூலிலிருந்து.