விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையின் பரப்பளவு!

சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னைப்  பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்காக இறுதிமுடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சென்னை தற்போது 1,189 சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5,904 சதுர கிமீ பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில்,

“திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,225 கிராமங்கள் சென்னை பெருநகர பகுதியில் இணைக்கப்படுகின்றன.

இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி தாலுகாக்களைச் சேர்ந்த 550 கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டத்திலிருந்து 44 கிராமங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களில் இருந்து 335 கிராமங்கள் சேர்க்கப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் வண்டலூர் வட்டத்தைச் சேர்ந்த 296 கிராமங்களும் சென்னை பெருநகரப் பகுதிகளில் இணைக்கப்படுக்கிறது.

இதன்மூலம், அந்த பகுதியில் நடக்கும் பணிகள் முறைப்படுத்தப்படுவதுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் உருவாக்கப்படும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்” என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment