சர்தார் – கார்த்தியின் ஆக்‌ஷன் ‘தர்பார்’!

‘த்ரில்லர்’ என்றோ, ‘ஆக்‌ஷன்’ என்றோ குறிப்பிட்ட வகைமைக்குள் ஒரு திரைக்கதையை அடக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் உண்டு. அங்கும் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட வகைமை சார்ந்து சில படங்கள் அமைவதுண்டு.

‘ஆக்‌ஷன் த்ரில்லர்’, ‘ஆக்‌ஷன் ட்ராமா’ என்று பல கிளைகளாகப் பிரியும். ‘ஸ்பை ஆக்‌ஷன்’ என்பது அவற்றுள் ஒன்று. அதாவது, உளவாளிகளின் உலகம் பற்றிப் பேசுவது.

நமக்கு நன்கு தெரிந்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அந்த வகையறாதான். அதில் கொஞ்சம் ‘ட்ராமா’வும் ‘த்ரில்லர்’ரும் இருந்தால் எப்படியிருக்கும்?

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கன்னா, லைலா, ரஜிஷா விஜயன், முனீஸ்காந்த், ஷங்கி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘சர்தார்’ அவ்வாறே அமைந்திருக்கிறது.

காக்கும் உளவாளி!

வங்கக் கடல் பகுதியில் மிதக்கும் படகொன்றில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரைச் சுட்டுக் கொல்கிறார் ஒரு நபர். யார் அவர் என்ற கேள்வியுடன் ‘சர்தார்’ தொடங்குகிறது.

30 ஆண்டுகள் கழித்து, சென்னையில் கதை விரிகிறது.

நாட்டுக்குத் துரோகமிழைத்தவரின் மகன் என்ற அடையாளத்துடன் வாழ்கிறார் இன்ஸ்பெக்டர் விஜய்பிரகாஷ் (கார்த்தி). அவரை வளர்த்து ஆளாக்கியவர் கான்ஸ்டபிள் பாவாடைசாமி (முனீஸ்காந்த்).

தந்தையின் அடையாளத்தைச் சுமக்காமல் இருக்க, ஏதேனும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றைச் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி விளம்பரம் தேடி வருகிறார் விஜய்.

அவர் காதலிக்கும் ஷாலினிக்கு (ராஷி கன்னா) அது கொஞ்சம் கூட பிடிப்பதில்லை.

ஒருமுறை தண்ணீர் பாட்டில் பயன்பாட்டை எதிர்த்து ஒரு அலுவலகம் முன்னர் ’திடீர்’ போராட்டம் நடத்தப்படுகிறது. சமீரா (லைலா) என்ற சமூக ஆர்வலர் நடத்தும் அப்போராட்டத்தில் ஷாலினியும் கலந்துகொள்கிறார்.

அங்கு விஜய் பாதுகாப்புக்கு வர, அந்த நேரத்தில் அவ்வலுவலகத்தில் இருக்கும் முக்கியக் கோப்பு ஒன்று காணாமல் போகிறது. அது இந்திய உளவாளி ஒருவரைப் பற்றியது.

அதனைத் திருடியது சமீரா என்று விஜய் கண்டுபிடிக்கும்போது, அவர் கொல்லப்பட்ட தகவல் கிடைக்கிறது. சமீராவைக் கொன்றது யார்? அவர் ஏன் ஒரு உளவாளி குறித்த கோப்புகளைத் திருட வேண்டும்? இதற்குப் பின்னால் இருக்கும் பிரச்சனை என்னவென்பதே ‘சர்தாரின்’ மீதிக் கதை.

தன்னுடைய அடையாளங்களை மறைத்து நாட்டைக் காப்பதற்காகப் போராடும் ஒரு உளவாளி எப்படியிருப்பார் என்று ‘எம்ஜிஆர் காலத்து பார்முலா’வில் அமைந்திருக்கிறது சர்தார்.

அப்பாத்திரம் தான் விஜய்யின் தந்தை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், அதனைத் திரைக்கதை ஆக்கிய விதத்தில் ’கிளாசிக்’ அந்தஸ்து பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களை ஒத்திருக்கிறது ‘சர்தார்’.

அவியல் திரைக்கதை!

ஷங்கரின் ஜென்டில்மேன், இந்தியன், முருகதாஸின் ரமணா உள்ளிட்ட சில படங்கள் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண முனையும் கதையமைப்பைக் கொண்டிருந்தன.

போலவே, அடையாளத்தை மறைத்துக்கொண்டு நாட்டுக்கு நல்லது செய்யும் ரகசிய போலீஸ் மற்றும் உளவாளிகளின் கதைகளும் கூட தமிழில் வெளியாகியிருக்கின்றன.

இவையிரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ‘சர்தார்’ திரைக்கதையை அமைத்திருக்கிறது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் குழு.

இதில், தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் பழக்கமே ஒரு சதித்திட்டத்தின் அடிப்படையில் அமைந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த புள்ளியைத் தொடுவதற்கு முன்னால் பல இடங்களைத் தொட்டுச் செல்கிறது திரைக்கதை.

விஜய்பிரகாஷின் தேசத்துரோகி மகன் எனும் அடையாளம், மகன் மரணத்தை நெருங்க காரணம் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் எனும் வலியைச் சுமக்கும் சமீரா, விஜய்யை விருப்பத்துடன் வெறுக்கும் ஷாலினி, பல லட்சம் கோடிகளை அள்ளும் ஆவேசமிக்க தொழிலதிபராக மகராஜ் ரதோர் உட்பட ஒரு டஜன் முக்கியப் பாத்திரங்கள் இப்படத்தில் உண்டு.

ஆனால், அனைத்து பாத்திரங்களையும் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

நீளம் கருதி சில காட்சிகள் வெட்டப்பட்டிருந்தால், அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

‘ரெட் லெட்டர்’ கையில் கிடைத்தால் மட்டுமே ஒரு உளவாளி வெளியுலகிற்கு வருவார் என்ற நடைமுறை எண்பதுகளில் இந்திய அரசால் பின்பற்றப்பட்டிருக்கிறது என்றால், அதனைக் காட்டுவதில் இன்னும் முனைப்பு செலுத்தியிருக்கலாம்.

ஒரு நாடக கலைஞனை உளவாளியாக மாற்றியது குறித்த தகவல்களின் அடிப்படையில் சர்தார் உருவாக்கப்பட்டதாகச் சில செய்திகள் முன்னதாக வெளியாகின.

மாறாக, அந்த நடிப்புத்திறனுக்காகவே அப்பணி அளிக்கப்பட்டதா இல்லையா என்ற விவரம் திரைக்கதையில் குறிப்பிடப்படவில்லை.

கிளைமேக்ஸ் காட்சிகள் நடைபெறும் இடம் எங்குள்ளது என்பது உட்பட லாஜிக் குறைகள் சில இருந்தாலும், ‘சர்தார்’ எனும் பாத்திரத்தை பின்தொடர்ந்தே திரைக்கதை செல்கிறது.

ஆனால், ‘ரமணா’வில் வரும் விஜயகாந்தின் பாத்திரப் பின்னணி போன்று இதில் கதை முடிச்சு விடுபடும் இடம் அழுத்தமானதாக இல்லை.

இது எல்லாமே சேர்ந்து ‘சர்தார்’ திரைக்கதைக்கு ஒரு அவியல் தோற்றத்தை அணிவிக்கிறது.

அதே நேரத்தில், தேவையே இல்லாமல் ஒரு லெட்டர்பேட் கட்சித்தலைவராக வரும் இளவரசு உடன் கார்த்தி மோதும் காட்சி பத்து நிமிடத்திற்கு மேல் நீள்கிறது. தயவு தாட்சண்யம் பார்க்காமல் அதனை வெட்டியிருக்கலாம்.

மேற்சொன்ன அனைத்தும் சேர்ந்து பரபர ஆக்‌ஷன் நிறைந்திருக்க வேண்டிய ஒரு ‘ஸ்பை த்ரில்ல’ரை ‘ட்ராமா’ ஆக்கியிருக்கிறது.

சபாஷ் மித்ரன்!

மூன்றாம் உலகப் போருக்கு நீர் காரணமாகும் என்ற வார்த்தைகளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது ‘சர்தார்’.

அந்த வகையில் இந்தி நடிகர் ஷங்கி பாண்டேவை திறம்பட தமிழில் வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆண்ட பெருமையில் அவரது பாத்திரம் திளைப்பதும் கூட ஒருவகை அரசியல் தான்.

இந்த கதையில் ஒரு கமர்ஷியல் ஹீரோ என்றளவில் கார்த்தியின் நடிப்பு வரவேற்கப்பட வேண்டியது. ராஷி கன்னா உடனான காட்சிகளில் அவர் அசத்தியிருக்கிறார். இடைவேளைக் காட்சி வருமிடம் கார்தியின் ஆக்‌ஷன் ‘தர்பார்’.

‘கொழும் மொழுக்’கென்று இருக்கும் ரஜிஷாவை பார்த்தால் ஏனோ ஸ்ரீவித்யாவின் ஞாபகம் வருகிறது.

இரண்டு நாயகிகளில் ராஷி கன்னாவை விட ரஜிஷா விஜயனுக்கே ‘ஸ்கோர்’ செய்யும் வாய்ப்பு. பாந்தமான அழகோடு வரும் ராஷிக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.

‘ரமணா’வில் ஏற்ற கான்ஸ்டபிள் பாத்திரம் வயதானால் எப்படியிருக்குமோ அச்சுப்பிசகாமல் அதேபோன்று திரையில் வந்து போயிருக்கிறார் யூகிசேது.

அவருடைய சகாவாக வரும் அவினாஷுக்கும் அதே அளவு வாய்ப்பு. முனீஸ்காந்த் கூட இவர்கள் இருவரையும் விட அதிகமாக ‘ஸ்கோர்’ செய்கிறார்.

லைலாவின் பாத்திரம் திரைக்கதை திருப்பத்திற்கு காரணம் என்றபோதிலும், மிகச்சிறிய அளவிலேயே அவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அவரது மகனாக வரும் ரித்விக் குறும்புத்தனமான பேச்சின் மூலமாக நம் மனதோடு ஒட்டிக் கொள்கிறார். அவரது பாத்திரத்தை எந்த இடத்தில் நிறுத்துவதென்று தெரியாமல் ‘கிளைமேக்ஸ்’ வரை அழைத்து வருகிறார் இயக்குனர்.

படத்தில் ஒவ்வொரு ஷாட்டும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது; பல காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டுள்ளன. ஆதலால், ‘டிஐ’ மனதில் கொண்டு உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்.

கதிரின் கலை வடிவமைப்பு ஒவ்வொரு ஷாட்டிலும் பொருட்களை வாரியிறைத்திருக்கிறது.

கொட்டப்பட்ட காட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் அடுக்கியாக வேண்டிய கட்டாயத்தை தாண்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன். கொஞ்சம் பிசகினாலும் கெட்ட பெயர் வாங்கிவிடும் அபாயம் அதிலிருந்ததை மறுக்க முடியாது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், அதனை மீறி படத்தோடு ஒன்ற வைக்கிறது பின்னணி இசை. மேரே ஜான் பாடலில் துணை நடிகர் நடிகைகளையும் ஷோபி பால்ராஜ் ஆட வைத்திருப்பது அருமை.

இயக்குனருடன் இணைந்து பொன்.பார்த்திபன் உட்பட 4 பேர் எழுத்தாக்கத்தில் பங்கேற்றிருக்கின்றனர். அந்த கூட்டுழைப்பே திரைக்கதையில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதையும் மீறி ஒவ்வொரு காட்சியில்ம் பரபரப்பு கூட்ட உதவியிருக்கிறது.

யதார்த்தத்தை விட்டு விலகிய அதிசாகச நாயகர்களையே பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை, ஹீரோ ஆகியன முன்வைத்தன.

சமூகத்தில் சிறந்துவிளங்கும் சாதனையாளர்களை, அவர்களது செயல்பாடுகளை காட்சிகளாக உருமாற்றுவதே அவரது சிறப்பு.

அந்த வகையில், தண்ணீரை எப்படிச் செலவழிக்க வேண்டும், கிராமங்களிலும் பரவியுள்ள தண்ணீர் கேன் கலாசாரத்தை ஏன் தடுக்க வேண்டும் என்று விலாவாரியாக சொல்ல முயற்சித்த காரணத்திற்காகவே மித்ரனுக்கு ஒரு சபாஷ்.

அது மட்டுமே, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ‘ஆக்‌ஷன் டிராமா’ பார்க்கும் திருப்தியை தருகிறது. குறைகளை ஒதுக்கிவிட்டு ‘சர்தாரை’ கொண்டாட தூண்டுகிறது.

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment