சராசரியாக ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்யலாம்!

கல்லுாரிகள் விடுமுறையின் போது மாணவர்கள் இன்றி ரத்த தானத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாக மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் சிந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்,மதுரை அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு 21 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர், வரை 15 ஆயிரத்து 800 யூனிட்கள் கிடைத்துள்ளன. கல்லுாரி மாணவர்களின் மூலம் 60 சதவீத அளவுக்கு ரத்தம் பெறப்படுகிறது.

பெறப்படும் ரத்தம் அரசு மருத்துவமனையில் உள்ள 90 சதவீத நோயாளிகளுக்கும், மேலுார், திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

டிசம்பர், ஏப்ரல், மேயில் கல்லுாரிகள் விடுமுறை என்பதால் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகளுக்கு ரத்தம் கிடைப்பது அரிதாகிறது என்கிறார் டாக்டர் சிந்தா.

கல்லுாரி முகாம்கள் தான் எங்களது இலக்கு. மாணவர்கள் இல்லாவிட்டால் நோயாளிகளை காப்பாற்றுவது சிரமம். 90 சதவீதம் பேர் தன்னார்வலராக ரத்ததானம் செய்கின்றனர்.

புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. அதேநேரத்தில் அவர்களுக்கு ரத்தம் அதிகளவில் தேவைப்படுகிறது. விபத்து, மகப்பேறு காலத்திலும் ரத்தத்தின் தேவை அதிகம்.

இதனால் தேவையும் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு நோயாளியை பார்க்க 10க்கும் மேற்பட்ட உறவினர்கள் வந்தாலும் ரத்ததானம் கேட்டால் முன்வருவதில்லை.

இதுவும் பற்றாக்குறைக்கு காரணம். நோயாளிக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருந்தால் ரத்த வங்கியிலிருந்து அனுப்புவோம்.

அதற்கு பதிலாக உறவினர்கள் அதே அளவு யூனிட் எந்த ரத்த வகையாக இருந்தாலும் தரவேண்டும். அப்போது தான் பற்றாக்குறையின்றி சமாளிக்க முடியும்.

ஆண்டுக்கு 4 முறை ரத்ததானம் செய்யலாம் என தெரிந்திருந்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.

தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ரத்ததானம் செய்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களும் முன்வர வேண்டும்” என்றார்.

மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை ரத்ததானம் செய்யலாம். குழுவாக முன் வருபவர்கள் 98948 10331ல் தொடர்பு கொள்ளலாம்.

Comments (0)
Add Comment