கங்குலியை வீழ்த்தியது பாஜகவா? சீனிவாசனா?

சவுரவ் கங்குலிக்கென்று ஒரு ராசி உண்டு. சரசரவென்று புகழின் உச்சிக்கு போவார். ஆனால் எந்த வேகத்தில் மேலே ஏறினாரோ, அதே வேகத்தில் கீழே இறக்கப்படுவார்.

1990-களில் சாதாரண பேட்ஸ்மேனாக இந்திய அணிக்குள் நுழைந்த கங்குலி, சில ஆண்டுகளிலேயே கேப்டன் பதவியைப் பெற்றார்.

ஆனால் தோனியைப்போல் தான் விரும்பும் வரையில் இப்பதவியில் அவரால் நீடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளில் கேப்டன் பதவியில் இருந்தும், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக வீற்றிருந்த கங்குலிக்கு, பதவி நீட்டிப்பு வழங்காமல் அவரை வெளியேற்றி இருக்கிறார்கள்.

“கங்குலியை பாஜகவில் சேர்க்க முயற்சி நடந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அரசியலில் இணையமாட்டேன் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். அதனால்தான் அவரது பதவியை பாஜகவினர் பறித்திருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டி இருக்கிறது மம்தாவின் திருணாமூல் காங்கிரஸ் கட்சி.

பாரதிய ஜனதா கட்சியோ இந்த குற்றச்சாட்டை அவசரமாக மறுத்திருக்கிறது. உண்மையில் பாஜகவில் சேராததால்தான் சவுரவ் கங்குலியின் பதவி பறிபோனதா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரான சீனிவாசன்தான் அவரை வீழ்த்தினார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு தரப்பும் சொல்வதை விலாவரியாக பார்ப்போம்…

தமிழகத்தில் ரஜினிகாந்த் எப்படியோ, அப்படித்தான் மேற்கு வங்கத்தில் சவுரவ் கங்குலி. ‘தாதா’, ‘பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா’ ‘பெங்கால் டைகர்’ என்று பல பெயர்களில் வங்காள மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த புகழுரைக்கு ஏற்ற வகையில் எந்த இடத்திலும் தனது கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார் கங்குலி.

இதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களைச் சொல்லலாம்.

2002-ம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மும்பையின் வாங்கடே மைதானத்தில் இந்த தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது.

இந்திய அணி ஒரு ஓவரில் 11 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் கடைசி ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப், வெற்றிக்குத் தேவையான ரன்களைக் கொடுக்காமல் இந்தியாவைத் தோற்கடித்தார்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வாங்கடே மைதானத்தில் தன் சட்டையை கழற்றி சுழற்றினார். பிளிண்டாஃபின் இந்தச் செயல் இந்தியாவுக்கு அவமானம் என்று கருதிய கங்குலி, அதற்கு பழிவாங்கக் காத்திருந்தார். அதே ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை இந்தியா வெற்றிகொள்ள அதே ஆவேசத்துடன் தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. இங்கிலாந்துக்காரர்களால் இதை ஜீரணிக்கை முடியவில்லை.

“கிரிக்கெட்டின் மெக்காவாக நாங்கள் கருதும், லார்ட்ஸ் மைதானத்தில், மரியாதை இல்லாமல் எப்படி சட்டையைக் கழற்றலாம்?” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜெப்ரி பாய்காட் கங்குலியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கங்குலி, “உங்களுக்கு வேண்டுமானால் லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்காவாக இருக்கலாம். ஆனால் மும்பை மைதானம்தான் எங்களின் கிரிக்கெட் மெக்கா” என்றார்.

இரண்டாவது சம்பவம் கொல்கத்தாவில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின்போது நடந்தது.

இந்த போட்டியின்போது கங்குலியை பேட்டி எடுத்த ரவி சாஸ்திரி, “மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் பெயரில் ஸ்டாண்ட் உள்ளது. ஆனால் கொல்கத்தா மைதானத்தில் உங்கள் பெயரில் ஸ்டாண்ட் இல்லையே ?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த கங்குலி, “அங்கு ஸ்டாண்ட்தான் சச்சினுக்கு. ஆனால் இங் மைதானமே எனக்கு சொந்தம்” என்றார்.

இப்படி தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் குணத்துக்காகவே வங்காளிகள் மத்தியில் சவுரவின் இமேஜ் உயர்ந்து நிற்கிறது. இந்த காரணத்தாலேயே தமிழகத்தில் ரஜினியைப் போல் மேற்கு வங்கத்தில் கங்குலியை இழுக்க பாஜக முயன்றுள்ளது.

இந்த சூழலில்தான் ஜெக்மோகன் டால்மியாவின் ஆதரவாளர்களின் ஆதரவுடன் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தைக் கைப்பற்றியுள்ளார் சவுரவ் கங்குலி. இந்த நேரத்தில் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா கங்குலியுடன் நெருங்கியுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கூட்டணி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கைப்பற்றியது. பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளராக அமித் ஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நட்பை வைத்து அவரை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. ஆனால் ரஜினியைப் போல் கங்குலியும் கழுவும் நீரில் நழுவும் மீனாக இருந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் பாஜகவை ஆதரிக்கவில்லை. அக்கட்சியும் தோல்வியைத் தழுவியது.

அந்த கோபத்தில்தான் இப்போது கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறது திருணாமூல் காங்கிரஸ்.

ஆனால் கிரிக்கெட் வாரியத்தில் விசாரித்தால் வேறு ஒரு தகவலைச் சொல்கிறார்கள். “கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பவர் கிரிக்கெட் சார்ந்த வேறு எந்த லாபம் தரும் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால் கங்குலி பல விளம்பரப் படங்களில் நடித்தார். இதில் ஆன்லைன் விளையாட்டு விளம்பரமும் ஒன்று. அவர் நடித்த விளம்பரப் படங்களில் இருந்த நிறுவனங்கள் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இது கிரிக்கெட் வாரியத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதுதான் அவருக்கு பதவி நீட்டிப்பு வாழங்கப்படாததற்கான காரணம்” என்று வாரிய உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.

அதுபோல் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்துகொண்டு சர்ச்சைக்குரிய பல கருத்துகளை அவர் தெரிவித்ததும் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களை சங்கடத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான் பிசிசிஐ உறுப்பினர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை பல கோஷ்டிகள் உள்ளன. இதில் டால்மியா கோஷ்டியும், கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் கோஷ்டியும் முக்கியமானவை.

இந்த இரண்டு கோஷ்டிகளுக்கும் நடுவே சரத் பவார் கோஷ்டியும் உள்ளது. இதில் கங்குலி, டால்மியா கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பதால், அவரை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்துள்ளார் என்.சீனிவாசன். சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கங்குலியின் கடந்த கால செயல்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் தனக்கு பதவி நீட்டிப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் கங்குலி அப்செட் ஆகியுள்ளார். அவரைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஐபிஎல் போட்டிகளுக்கான தலைவர் பதவியை வழங்குவதாக கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை கங்குலி ஏற்கவில்லை. பொதுவாக ஒரு தலைவர் பதவியில் இருந்து விலகும்போது அடுத்த தலைவரின் பெயரை அவர்தான் முன்மொழிவார். ஆனால் அந்த நடைமுறையையும் கங்குலி பின்பற்றவில்லை.

அடுத்த தலைவரை முன்மொழியாமல் கூட்டத்தில் இருந்து அவர் வெளியேற, ரோஜர் பின்னியை அடுத்த பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

ரோஜர் பின்னியை தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் அவர் அமைதியானவர், தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காதவர் என்பது.

முன்பு ஒரு முறை பின்னி தேர்வுக் குழுவில் இருந்த காலத்தில் அவரது மகன் ஸ்டூவர்ட் பின்னியை இந்திய அணியில் சேர்ப்பது குறித்த விவாதம் வந்துள்ளது.

அப்போது, “என் மகனின் பெயர் விவாதிக்கப்படும்போது நான் இங்கு இருந்தால் சரியாக இருக்காது” என்று கூறி தேர்வுக் குழு கூட்டம் நடந்த அறையில் இருந்து வெளியேறினார் பின்னி.

பின்னியின் அந்த குணம், இப்போது தலைவர் பதவியை கைப்பற்ற அவருக்கு உதவி செய்துள்ளது. மேலும் தலைவராக வருபவர் தங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தில் உள்ள கோஷ்டிகளின் விருப்பமும் அவர் தலைவரானால் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

எது எப்படியோ, கிரிக்கெட் வாரியத்தில் காங்குலியின் தலை உருண்டிருப்பதால் மழிச்ச்சியில் இருக்கிறார்கள் கோலியின் ரசிகர்கள்தான்.

இந்திய அணியில் தனிக்காட்டு ராஜாவான கோலியிடம் ஆலோசிக்காமாலேயே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் கங்குலியின் கை இருந்ததாக கூறப்பட்டதே இதற்கு காரணம்.

தான் கீழே விழும்போதெல்லாம், அதேவேகத்தில் எழுந்து வருவது கங்குலியின் குணம். இப்போதைக்கு அவர் வீழ்ந்தாலும், பாழைய டால்மியாவின் ஆதரவாளர்கள் அவர் பக்கம்தான் இருக்கிறார்கள்.

அவர்கள் உதவியுடன் தாதா மீண்டு வருவாரா, பதிலடி கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

– பி.எம் சுதிர்

நன்றி: வாவ் தமிழா இணையதளம்

Comments (0)
Add Comment