அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் இயக்கி சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள “சாட் பூட் த்ரி” தமிழ் திரைப்படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் நடந்த செல்லப் பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
விருதிற்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முனைவர் பு. பாஸ்கரன் கலந்துகொண்டு இயக்குனரை வாழ்த்தி தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்.
பின்னர் இப்படம் கொரிய மக்களுக்கு திரையிடப்பட்டது.
படத்தில் இடம்பெற்ற குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கும் இடையேயான காட்சிகள் தமக்கு நெருக்கமாக இருந்ததாக கொரிய மக்கள் தெரிவித்தனர்.
“நாடு, மொழி உள்ளிட்ட காரணிகள் கடந்து கொரியாவில் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு அன்பிற்கோர் பஞ்சமில்லை என்ற தன் படத்தின் மூலக்கருவை உள்ளபடியே இயல்பில் உணர்த்தியது தமக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது” என்றார் படத்தின் இயக்குநர்.
கடந்த ஜூலை மாதம் விருதிற்கான விண்ணப்பங்கள் பன்னாட்டு அளவில் பெறப்பட்டு செப்டம்பர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர்களான சாங் பியோம் கோ, சாங் ஜே லிம், மற்றும் கிவி தோக் லீ ஆகியோர் அடங்கிய குழு விருதிற்கான படங்களை தெரிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.