இந்திய வம்சாவழி மலையக தமிழர்கள் சுமார் 20 லட்சத்துக்குமேல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் தீவுகளில் சொல்லொன்னா துயரங்களுடன் வாழ்கின்றனர்.
1964–ம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலைவாய்ப்பு, விவசாய நிலம், தரமான குடியிருப்பு, கல்வி வசதி, சுகாதாரம் என அனைத்து அடிப்படை மறுவாழ்வு உதவிகளும் செய்வோம் என ஒன்றிய, மாநில அரசுக்கள் உறுதி அளித்து அழைத்து வரவழைக்கப்பட்டனர்.
இவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் (டேன்டீ) உருவாக்கப்பட்டது.
55 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய டேன்டீயை காடாக மாற்ற அதிகாரிகள் எடுத்து வரும் பாதகமான செயலால் எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்களின் பிரச்சனைக்காக எல்லோரும் குரல் கொடுக்காத போது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இம்மக்களை நேரடியாக சந்தித்து அக்கரையுடன் விசாரித்தது வரலாற்று திருப்பு முனையாகும்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் தொடங்கிய “இந்திய ஒற்றுமை பயணம்” கேரளா சென்று மூன்று மாநிலங்கள்; கூடும் கூடலூரில் கடந்த 29–ம் தேதி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
இதில் தனியாக நேரம் ஒதுக்கி இந்திய வம்சாவழி மலையக தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இதேபோல் நீலகிரி விவசாயிகள் பிரச்சனை, நிலப்பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடினார்.
மலையகத் தமிழர்கள் குழுவில் திரு. எம்.எஸ். செல்வராஜ் தலைமையில் திரு.இராஜேந்திரன், திரு.காளிதாஸ், திருமதி.மஞ்சுளா, திருமதி.மாரியம்மா, திரு.கனகமூர்த்தி, திரு. மதியழகன், திரு. லோகநாதன், திரு. சுப்பிரமணியம் ஆகியோர்கள் இடம் பெற்று இருந்தனர்.
இவர்கள் ராகுல் காந்தியிடம் பேசும்போது தாங்கள் தற்போது தொடங்க இருக்கும் “பராத் ஜோடோ” யாத்திரைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உறுதியேற்றுள்ளோம். இந்த யாத்திரையில் முழுவதுமாக பங்கேற்போம்.
மேலும் தங்களது வயநாடு தொகுதிக்கு அருகில் இருக்கும் எங்களது நீலகிரி தொகுதியில் மிகவும் பின் தங்கிய மக்களின் பிரச்சனையை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்தனர்.
மேலும், இலங்கை தெற்காசிய நாடுகளில் இடதுசாரிக் கொள்கையின் அடிப்படையில் அரசியல் மாற்றம் பெற்று உலகரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் ஒரு காலகட்டத்தில் இருந்தது.
சிங்களவர்களும் பூர்வீகத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து எழுச்சி பெற்றனர்.
இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தின் முதுகெலும்பாக இருக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ஒருமித்தப் போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
1940–ஆம் ஆண்டு இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முல்லோயத் தோட்டத்தில் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் காவல் துறையினரை ஏவி இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முயற்சி எடுத்தன.
இந்தப் போராட்டத்தில் ஜனவரி 19 –ஆம் தேதி கோவிந்தன் என்ற மலையகத் தோட்டத் தொழிலாளி தனது உயிரை துச்சமென மதித்து துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி தியாகி ஆனார். பலர் காயமுற்றனர். இவரே தனது உயிரை தியாகம் செய்த முதல் தொழிலாளி ஆவார்.
இதற்குப் பிறகு 1972-ல் கினாக்கொல்லை என்ற தோட்டத்தில் நான்கு தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாலாந்தா தோட்டத்தில் 1973-ல் ஐந்துக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசியல் வேலை நிறுத்தப் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றது.
1946-ம் ஆண்டு சோல்புரி அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு எதிராகவும் வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராகவும் வீரம் செறிந்த போராட்டங்களை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தினர்.
நுவரலியா மாவட்டத்தில் தோட்டத்துரைமார்களின் அடக்கு முறைக்கு எதிராக வீறுகொண்டு எழுந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கி ஏந்திய காவல்துறைப்படை குவிக்கப்பட்டது.
அவற்றைத் துச்சமென மதித்து காவல் துறையினர்கைகளிலிருந்து துப்பாக்கிகளைப் பறித்து தங்கள் கைகளில் ஏந்தி எச்சரிக்கை செய்தனர். அந்த அளவுக்கு வீரம் செறிந்தனர்.
இந்த எழுச்சிகள் 1964–1970–ம் ஆண்டுகளில் நடைபெற்றது. இக்காலக்கட்டத்தில் தோட்டப் பகுதிகளில் மாணவர்கள் சமத்துவக் கொள்கைகளை உள்வாங்கியதோடு கலை / இலக்கியத் துறைகளிலும் வளர்ந்து வந்தனர்.
தோட்டத் தொழிலாளர்களின் இடதுசாரிப் பார்வையும் போராட்டங்களும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தையும் அரசையும் அச்சமடையச் செய்தது.
இதே போலவே இலங்கை முழுவதுமுள்ள உழைக்கும் வர்க்கம் இனப் பாகுபாடுகளை கடந்து ஓரணியில் திரண்ட ஊழல் முதலாளித்துவத்தை கலக்கம் அடையச் செய்தது.
தெற்காசிய நாடுகளில் இலங்கையும் சமத்துவ சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் நாடாக மாறுவதை பிற நாடுகளும் விரும்பவில்லை.
பிரிட்டிஷ் காலனியவாதிகளும் இதற்குப் பிறகு வந்த சிங்கள மற்றும் தமிழ் அரை நிலப்பிரபு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இதை திசை திருப்பினர். சிங்கள பேரினவாத பிரித்தாளும் தந்திர விதைகளைத் தூவி உரமிட்டு வளர்த்தெடுத்தனர்.
இதன் விளைவால் உழைக்கும் மக்களின் வர்க்க சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு பிளவுப்படுத்தப்பட்டனர். இடதுசாரி இயக்கங்களும் வீழ்ச்சியுற்றன.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்த உழைக்கும் மக்களான மலையகத் தமிழர்களின் வாக்குரிமை / குடியுரிமையும் பறிக்கப்பபட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.
சிங்கள பேரினவாத வெறியை சிங்கள ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் புத்த பிக்குகளுடன் இணைந்து இனவெறியைப் போதித்து வளர்த்தெடுத்தனர்.
இந்த சமூக விரோதிகளை களத்தில் இறக்கி தமிழர்களுக்கு எதிரான பெரும் இனக்கலவரங்களைத் தூண்டிவிட்டு உயிர் உடைமைகளை சூறையாடியதோடு தமிழ்ப் பெண்களையும் மானபங்கப்படுத்தி மிரட்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழர்களை இந்நாட்டிலிருந்து விரட்டியடிப்பது முடியாத பட்சத்தில் அழித்தொழிப்பது என்ற கொலைவெறி பாசிச சூழ்ச்சியில் ஈடுபட்டனர்.
இதன் முதற்கட்டமாக இலங்கை பொருளாதாரத்தின் உற்பத்தி சக்திகளின் அச்சாணியாக இருந்த 6 லட்சம் மலையகத் தமிழர்களை ஸ்ரீமாவோ சாஸ்திரி
ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நாடு கடத்தினர்.
இவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களவர்களை குடியமாத்தி சிங்கள மயமாக்கினர்.
1977 – 1983 -ஆம் ஆண்டுகளில் இனக் கலவரங்களைத் தூண்டிவிட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் உயிர் உடைமைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினர்.
இதன் பிறகுதான் இலங்கையின் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் முழுவதுமாக வீழ்ச்சியடைந்து ஆயுதம் ஏந்தும் அதீத போக்கு வித்திட்டது.
இது ஜனநாயகவாதிகளும் / மிதவாதிகளும் ஓரம்கட்டப்பட்டதோடு ஆயுதம் ஏந்தி நேருக்கு நேராக சந்திக்க வேண்டி சூழ்நிலை ஏற்பட்டது.
இதன் பிறகு எத்தனையோ போர்கள் / இழப்புகள் தொடர்ந்ததோடு கடைசியாக முள்ளிவாய்க்காலில் பாசிஸ்ட் மகிந்தா ராஜக்ஷேயின் கோரப் பற்களுக்கு இரையாகி பல்லாயிரக்கணக்கானோர் அழித்தொழிக்கப்பட்டனர்.
ராஜபக்ஷேயின் கொடூரங்களை எதிர்த்து அம்பலப்படுத்திய சிங்கள மனித உரிமையாளர்களையும் / பத்திரிகையாளர்களையும் வேட்டையாடியதோடு பலரை நாட்டை விட்டு விரட்டியடித்தார்.
1983–ம் ஆண்டு இனக்கலவரத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக இந்தியாவிலும் பிற நாடுகளிலம் தஞ்சம் அடைந்தனர்.
இதில் பெரும்பாலானோர் தமிழகத்தின் முகாம்களிலேயே வாழ்கின்றனர். இந்த முகாம்களிலும் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் பல அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க 1964–ம் ஆண்டு ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் என்ற அடிப்படையில் இந்தியக் குடியுரிமை பெற்றுத் தாயகம் திரும்பிய தமிழர்கள் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இம்மக்களுக்கு வளமான வாழ்வளிக்கிறோம் என இந்திய அரசு அறிவித்த மறுவாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததோடு இம்மக்களை மீண்டும் அரைக் கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது.
பசி / பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டு தரகர்களால் ஏமாற்றப்பட்டு வறுமையின் கோரப்பிடியில் சிக்கி பலர் இறந்து போயுள்ளனர். 2176 குடும்பங்களை ஆய்வு செய்தபோது 637 பேர் இறந்து போயுள்ளனர்.
இதில் 5 முதல் 16 வயது வரை உள்ளவர்கள் 229 நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மக்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் துயரங்கள் பற்றியும் எவராலும் பேசப்படுவதும் கவனிக்கப்படுவதும் இல்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.
தொப்புள்கொடி உறவுகள் பற்றி அடிக்கடி உணர்ச்சி மேலோங்க முழங்கும் தமிழகத் தலைவர்கள் உண்மையாகவே தொப்புள்கொடி உறவுள்ள இந்த மக்களை (இரத்த உறவுகளை) மறந்து விட்டது கவலையளிக்கின்றது.
காரணம் இவர்களைப் பற்றி பேசுவதாலும் / எழுதுவதாலும் இலக்கியங்கள் படைப்பதாலும் / தங்களது சுயநல அரசியலுக்கு லாபத்தைக் கொடுக்காது என்று இவர்கள் கருதுவதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.
பிரிட்டிஷ் காலனியவாதிகளாலும் இதன் பிறகு இலங்கை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அரசியல் பொருளாதார லாபத்துக்காக பலியிடப்பட்ட தாயகம் திரும்பிய மக்களின் துயரங்களைத் தீர்க்க இப்பிரச்சினையை நாடு தழுவிய அளவிலும் சர்வதேச அளவிலும் கொண்டு சென்று செயல்படுவது நேர்மையான ஜனநாயகவாதிகளின் கடமையாகும்.
1964-ம் ஆண்டு ஒப்பந்தம்
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த திரு.ஜவஹர்லால் நேரு அவர்கள் எடுத்திருந்த ஆக்கபூர்வமான நிலைப்பாட்டிற்கு மாறாக 1964-ம் ஆண்டு இந்தியப் பிரதமர் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களும் இலங்கை பிரதமர் திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் ஒப்பந்தம் போட்டு அனைத்து வித அடிப்படை மறுவாழ்வு உதவிகளை செய்வோம் என அழைத்து வரப்பட்டவர்கள் தான் இந்திய வம்சாவழி மலையக தமிழர்கள்.
இவர்களின் வாழ்வு சிறப்பாக அமைய ஒன்றிய அரசு மறுவாழ்வு திட்டங்களை அறிவித்து உறுதி செய்ததோடு சர்வதேச அரங்கிற்கு தெரிவித்ததுள்ளனர்.
அரசு தேயிலைத் தோட்டக் கழகம் (டேன்டீ)
இவர்களின் மறுவாழ்விற்காக இந்த மக்களையே பயன்படுத்தி கொட்டும் மழையிலும் பனியிலும் கடுமையாக உழைக்க செய்து உருவாக்கப்பட்டது தான் அரசு தேயிலை தோட்டக் கழகம் (டேன் டீ).
1968-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூர், கோத்தகிரி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதிகளில் 4431.92 ஹெக்டர் நிலப்பரப்பில் டேன்டீ தொடங்கப்பட்டது.
இந்த அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தை தங்களது உதிரத்தையும் / வேர்வையையும் சிந்தி ஓய்வில்லாத உழைப்பால் செல்வம் கொழிக்கும் தோட்டமாக மாற்றியவர்கள் தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர்களே. இவர்கள் பல ஆயிரம் கோடிகளை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ஈட்டி கொடுத்துள்ளனர்.
வனத்துறை, போக்குவரத்துத் துறை, டாப்கான், ரப்பர் தோட்டக் கழகம், அரசு சிமெண்ட் கார்ப்பரேசன் போன்ற அரசு நிறுவனங்களுக்கு பல கோடிகளை டேன்டீயில் கிடைத்த லாபத்திலிருந்து கொடுத்துள்ளனர்.
ஆனால், டேன்டீ தொழிலாளர்களுக்கோ மிக குறைந்த சம்பளம். கூனி குறுகிய தரமற்ற பாதுகாப்பில்லாத லயத்துக் குடியிருப்பு, வெகு தூரத்தில் சுகாதாரமற்ற கழிப்பிடங்கள், மருத்துவ வசதி, சாலைபோன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை.
டேன்டீ உருவாக்கியபோது இந்த மக்களை பாதுகாப்பே இல்லாத வெகு தூர பகுதிகளில் தரமற்ற லயன்களை கட்டி (வீடு) டேன்டீக்கு பாதுகாப்பு வேலியாக இருக்க செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.
காட்டு மிருகங்களால் உயிர் உடைமைகளை பலர் இழந்து துயர வாழ்வே நிரந்தரமாகி போய்விட்டது.
இந்த சூழ்நிலையிலும் டேன்டீ தொழிலாளர்கள் ஓய்வின்றி உழைத்து இலாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.
இலாபகரமாக இயங்கிய அரசு தேயிலைத் தோட்ட கழகத்தை சமீப காலங்களில் மிக மோசமான நிர்வாக சீர்கேடு மற்றும் சட்ட விரோத செயலால்; தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
டேன்டீ நிர்வாகத்தினர் செயல்படாத பல கோடிகளில் மருத்துவ மனை, தொழிற்சாலை தளவாடப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, சொகுசு பங்களாக்கள், செயல்படாத பெட்ரோல் பங்க், தேவையில்லாத வாகனங்கள் என்று செலவு செய்ததோடு நிர்வாக அதிகாரிகளுக்கு அதிகப்படியான சம்பளம் என வீண் செலவு செய்ததே இதற்கு அடிப்படையான காரணம்.
மேலும் டேன்டீயில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூள் விற்பனையில் கண்ணுக்கு தெரியாத பேரம், மோசடிகள் நடந்திருப்பது டேன்டீயின் நஷ்டத்திற்கு பெரும் காரணமாக உள்ளது.
தேயிலைத் தூள் விற்பனையில் அரசு நேரடியாக தலையிட்டு இலாபம் கிடைக்க செய்ய வேண்டும். இது நடைபெறவில்லை. டேன்டீயில் விலையும் தரமான கொழுந்துகளை வெளியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து விட்டு தரமில்லாத தனியார் தோட்டங்களில் கிடைக்கும் கொழுந்துகளை வாங்கி டேன்டீ தொழிற்சாலையில் அரைத்து நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையெல்லாம் மறைத்து தவறான காரணங்களை காட்டி தொழிலாளர்கள் உழைத்து உருவாக்கி செல்வம் கொழிப்பதோடு அரசுக்கு அந்நிய செலவானியை ஈட்டிக் கொடுக்கும் அழகிய டேன்டீ தேயிலை தோட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக வனத்துறையிடம் ஒப்படைத்து மீண்டும் காடாக்கி தொழிலாளர் குடும்பங்களை விரட்ட சதி நடந்து வருகின்றது.
கடந்த 2019-ம் ஆண்டு 265 ஹெக்டர் தேயிலைத் தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைத்து காடாக மாற்றப்பட்டுள்ளது.
தற்போது 2152 ஹெக்டர் தேயிலைத் தோட்டங்களை எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காடாக மாற்றும் முயற்சி பெரும் அதிர்ச்சியை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
வேலைக்கு ஆட்களே இல்லை என பிரச்சாரம் செய்யும் டேன்டீ நிர்வாகம், பல ஆண்டுகளாக இதையே நம்பி வாழும் சுமார் 2000 ஆயிரம் தொழிலாளர்களை கடந்த ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு வேலையை நிறுத்தி விட்டனர்.
சட்டப்படியாக 480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதால் தொடர்ச்சியாக வேலை கொடுப்பதில்லை. இவர்களையே தற்காலிக தொழிலாளர்கள் என்று சொல்லப்படுகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் வேலை நிறுத்தப்பட்டதால் வருமானம் இல்லாமல் குடும்பத்துடன் தவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் தங்களது குறைகளையும், சட்டப்படியான உரிமைகளையும் கோரி குரல் கொடுத்தால், ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்டால் மிரட்டப்படுவது, பழிவாங்கப்படுவது.
சம்பளத்தை பிடிப்பது போன்ற முறைகளை டேன்டீ தோட்ட நிர்வாகம் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
இதனால் நீதிக்கான போராட்டங்களில் கலந்து கொள்ள முடியாத பயத்துடனேயே வைக்கப்பட்டுள்ளனர். இது சட்ட விரோதம் என்பதோடு கொத்தடிமை முறை என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
டேன்டீ தேயிலைத் தோட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதால் வன விலங்குகளின் தொல்லை பலமடங்காக பெருகும் ஆபாயம் உள்ளது.
மேலும் இப்பகுதியிலுள்ள விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும் வியாபாரமும் பாதிக்கப்படும்.
நலிவடைய செய்யப்பட்ட டேன்டீயை சீர்திருத்த 2020 அரசு பல கோடிகளை கொடுத்துள்ளது. இருந்தும் நிர்வாகத்தால் டேன்டீயை சிறப்பாகவும், இலாபகரமாகவும் நடத்த முடியவில்லை.
ஆகவே, டேன்டீயில் வாழும் அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கை தாங்கள் உழைத்து உருவாக்கிய டேன்டீ தேயிலைத் தோட்டங்களை எங்களது குடும்பங்களுக்கே பிரித்துக் கொடுக்கவும். இதுவே நிரந்தர தீர்வாகும்.
பல நூற்றாண்டுகளாக தோட்டத் தொழிலாளியாகவே வைக்கப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நிலத்தின் சொந்தகாரர்களாக மாற்றப்படுவது அவசியம்.
இவர்களின் சந்ததியினரும் வேறு எங்கும் புலம்பெயர்ந்து செல்லாமல் நிம்மதியாக தன்மானத்தோடு வாழ்வார்கள்.
தன்மானம் தான் திராவிட மாடல் அரசின் ஆணிவேர். அதையே இன்றைய திராவிட மாடல் தமிழக அரசு செய்யும் என மலையக தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக நம்புகின்றனர்.
இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் தற்போது தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் வாழ்வதோடு கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அந்தமான் தீவுகளில் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த மக்களின் நிலை சர்வதேச ஒப்பந்தங்கள் அடிப்படையில் மீறப்பட்டுள்ளது. முறையான மறுவாழ்வு கிடைக்கவில்லை. ஆகவே தாங்கள் இதில் தலையிட்டு ஒன்றிய மற்றும் மாநில அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிரந்தர தீர்வுக்கான முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றதோடு,
– இந்திய மக்களின் கலாச்சாரங்களை, இந்திய அரசியல் சாசனத்தை ஜனநாயகத்தை பாதுகாத்து அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ தங்களது தலைமையில் எழுச்சியுடன் நடைப்பெறும் ஒன்றுமை யாத்திரையில் நாங்களும் பங்கேற்கிறோம்.
– முக்கடல் சந்திக்கும் கன்னியாகுமரியில் தொடங்கி மூன்று மாநிலங்கள் கூடும் எங்களது கூடலூர் – வருகை தரும் தங்களையும் பாதயாத்ரா தோழர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
– இந்தியாவில் எவரும் சந்திக்காத பல கொடுமைகளை எங்களது இந்திய வம்சாவழி மலையக தோட்டத் தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
– தமிழக அரசு தேயிலைத் தோட்ட கழக தோட்டத் தொழிலாளர்கள் தங்களது உதிரத்தையும் வேர்வையையும் சிந்தி உருவாக்கிய பல கோடிகளை அரசுக்கும் – அரசு அதிகாரிகளுக்கும் ஈட்டி கொடுத்துள்ளனர்.
இந்த அழகிய வருமானம் வரக்கூடிய டேன்டீ தேயிலைத் தோட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக காடாக மாற்றி – எங்களை வெளியேற்ற முயற்சி நடத்தி வருகின்றது.
இதனால் எங்களது எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாக மாறிப்போய் உள்ளது. எங்களுக்கு வேறு எந்தவித வாழ்வாதாரமும் இல்லை.
ஆகவே நிரந்தர தீர்வாக டேன்டீ நிலத்தை எங்களுக்கு தலா மூன்று ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுக்க கோருகிறோம்.
இது பற்றி தமிழக அரசிடமும், தமிழக முதல்வரிடமும் எடுத்துக் கோரி நிலம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என விரிவாகப் பேசினர்.
இது பற்றி தௌிவாக கேட்டு அறிந்து கொண்ட ராகுல் காந்நி இதற்கு தீர்வு காண முயற்சி எடுப்போம் என உறுதியளித்தார். இது மலையகத் தமிழர்களையும் டேண்டீ மக்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மாலை 4 மணிக்கு தொடங்கிய பாதயாத்திரையால் ராகுல் காந்தியுடன் சுமார் 45 ஆயிரம் மக்களும் அணிவகுத்துச் சென்றனர்.
கூடலூர் நகரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் உரை அனைத்து மக்களின் இதயங்களிலும் மிகுந்த மகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.
– எம்.எஸ்.செல்வராஜ்