பொன்னியின் செல்வன்-2 எப்படி இருக்கப் போகிறது?

பொன்னியின் செல்வன் – முதல் பாகத்தைத் திரைப்படமாகப் பார்த்த பலருக்கும் எழுந்திருக்கும் கேள்வி :

“திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கப்பல் உடைந்து அருண்மொழி வர்மனும் (ஜெயம் ரவி), வந்தியத் தேவனும் (கார்த்தி) கடலில் மூழ்குகிறபோது, அவர்களைக் காப்பாற்ற நீரில் ஐஸ்வர்யா ராய் தோற்றம் கொண்ட ஒரு பெண்ணின் தோற்றம் தெரிகிறதே.. அடுத்து என்ன நடக்கும்?’’

அமரர் கல்கியின் நாவலைப் பின்பற்றியே பெரும்பாலும் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், அதன் இரண்டாம் பாகம் கீழ்கண்டவாறு அமையலாம்.

* கப்பல் உடைந்து கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனையும், வந்தியத் தேவனையும் காப்பாற்றுகிறவர் நந்தினியின் தாயான மந்தாகினி. இவர் வாய்ப்பேச முடியாத, காதுக்கேளாத கதாப்பாத்திரம்.

இவருடைய வாரிசுகள் தான் நந்தினியும், அமர புஜங்கன் என்ற மதுராந்தகனும். அருண்மொழி வர்மனின் தந்தையான சுந்தரச் சோழருக்கும், மந்தாகினிக்கும் பிறந்த வாரிசுகளே நந்தினியும், மதுராந்தகனும்.

தன்னை விரும்புகிற ஆதித்ய கரிகாலனிடம் நேரடியாக “நான் உனது சகோதரி” என்று சொல்கிறார் நந்தினி.

*ஆதித்ய கரிகாலனை (விக்ரம்) கொல்வதற்கு ரவிதாசன் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து முயற்சிக்கும் நிலையில், கடம்பூர் அரண்மனையில் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் ஆதித்ய கரிகாலன்.

தஞ்சையில் நடந்த ஆதித்ய கரிகாலன் இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.

*அதே நேரத்தில் ஆதித்ய கரிகாலனை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் வந்தியத்தேவன். பிறகு சிறையிலிருந்து தப்பவும் செய்கிறார்.

*முதல் பாகத்தில் கோவில் சார்ந்த பணியாளராக அறிமுகமான சேந்தன் அமுதனை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார் பூங்குழலி.

அவர்தான் செம்பியன் மாதேவிக்கு பிறந்த உண்மையான வாரிசு என்று தெரியவருகிறது. அவருக்கு மதுராந்தகன் என்று பெயர் சூட்டப்படுகிறது.

*வந்தியத்தேவன் ஒரு வழியாக குந்தவையை மணந்து கொள்கிறார். இந்தத் செய்தித் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளிலும் இருக்கிறது. 

*ஆதித்ய கரிகாலனின் மரணத்தால் பாதிக்கப்பட்ட பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) குறுவாளால் தன்னைத்தானே குதிக்குக் கொண்டு உயிரிழக்கிறார்.

*உத்தமசோழர் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு அருண்மொழி வர்மனான ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வருகிறார்.

அருண்மொழி வர்மனுக்கும், வானதிக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுடைய புதல்வர்தான் ராஜேந்தர சோழன்.

*சுந்தரத் சோழர் (பிரகாஷ் ராஜ்) தன்னுடைய மகன் ஆதித்ய கரிகாலன் கட்டிய காஞ்சி பொன் மாளிகையில் வாழ்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இறக்கிறார்.

*நந்தினி (ஐஸ்வர்யா ராய்) தன்னுடைய சகோதரனான பழைய மதுராந்தகன் இறந்ததும் தானும் உயிரிழக்கிறார்.

*மேலே, குறிப்பிட்டு இருக்கிற சம்பவங்கள் கல்கியின் நாவலிலும், நாவல் தொடர் கதையாக வெளிவந்து முடிந்த பிறகு கல்கி எழுதிய குறிப்புகளிலும் உள்ளன. இதையொட்டியே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இரண்டாவது பாகம் அமைய வாய்ப்பு இருக்கிறது.

ரயில் பயணச்சீட்டுகளில் எல்லாம் கடைசி நேரம் மாறுதல்களுக்கும் உட்பட்டவை என்று குறிப்பிட்டு இருப்பதைப் போல கல்கி எழுதிய நாவலும் திரைப்பட இயக்குநரான மணிரத்னத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Comments (0)
Add Comment