பலரை கவனிக்க வைக்கப் போகும் தேவர் குருபூஜை!

அக்டோபர் 30 ஆம் தேதி அன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடக்க இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடப்பது இயல்பானது தான். இந்த ஆண்டு சற்றே ‘ஸ்பெஷல்’.

காரணம் – அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல்.

தென் தமிழகத்தின் முக்கிய வாக்குவங்கிகளில் ஒன்றாக இருக்கிற முக்குலத்தோரின் வாக்கு வங்கியை ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் குறி வைத்திருக்கின்றன.

பல கட்சிகளின் தலைவர்கள் பசும்பொன் கிராமத்திற்கு தேவர் ஜெயந்தி அன்று வந்திருக்கிறார்கள். அப்படி வரும்போது அவர்களுக்குத் தனியான நேரம் ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அதோடு விழா சமயத்தில் எப்போதுமே அதிகபட்சமான காவல்துறைப் பாதுகாப்பு அங்கு போடப்பட்டிருக்கும்.

தமிழக முதல்வராக இருந்த கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை பலரும் இங்கு வந்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினும் இங்கு வந்திருக்கிறார்.

அ.தி.மு.க ஆட்சியின் போது தேவரின் சிலைக்குத் தங்கத்திலான கவசம் தயாரிக்கப்பட்டு, விழாச் சமயத்தில் அணிவிக்கப்பட்டு, விழா முடிந்ததும் வங்கி லாக்கரில் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு அதிலும் சர்ச்சை. அ.தி.மு.க.வின் இரு அணி சார்ந்தவர்களும் வங்கியிலிருந்து அந்தத் தங்கக் கவசம் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று போட்டி போடுகிறார்கள். எடப்பாடி, ஓ.பி.எஸ் அதரவாளர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதங்கள் வலுத்து வருகின்றன.

இரு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவர் “பொதுக்குழுவில் வைத்து ஓ.பி.எஸ்.ஸை எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்கள்? அப்புறம் எப்படி எடப்பாடியும், அவருடைய ஆதரவாளர்களும் பசும்பொன்னுக்கு வந்து போக முடியும்?’’ என்று வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு முற்றியிருக்கிறது நிலைமை.

இந்தச் சமயத்தில் ஏற்கனவே சென்னை லாயிட்ஸ் சாலையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் முன்னால் இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த சண்டை, சச்சரவுகள் நினைவில் ஓடுகின்றன.

அ.தி.மு.க.வில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் உட்கட்சிப் பூசலின் தீவிரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அதை முன்னிட்டுப் பொதுவெளியில் பொது மக்களுக்கு முன்னால் பரஸ்பரம் தங்கள் பலத்தைக் காட்ட முயற்சிப்பது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தான் பாதிக்கும். பசும்பொன்னை இவர்களுடைய சச்சரவுகளுக்கான தளமாக மாற்றிவிடக்கூடாது.

இது தவிர, இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் பசும்பொன்னுக்கு வர இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் வருகை தர இருக்கிறார்கள்.

இதனால் வழக்கத்தை விடக் கூடுதலான பாதுகாப்பு அங்கு தேவைப்படும். தென் தமிழகத்தில் இருக்கும் சமூகத்தினரின் வாக்குகளை வாங்கும் நோக்கம் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவை தான்.

அதே சமயம் குருபூஜை போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது அவரவர் விருப்பம் சார்ந்த ஒன்றும் கூட.

எதன் பெயராலும் அங்குள்ள சாதாரண குடிமக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை இங்கு வருகை தருகிற அரசியல் இயக்கத் தலைவர்களும், அவர்களை வரவழைக்கிற மாநில, உள்ளூர்த் தலைவர்களும் அதிகபட்சமான கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் முதன்மையானது.

*

Comments (0)
Add Comment