அண்ணா பெயரில் மாவட்டத்தை துவக்கிய போது!

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு திண்டுக்கல்லில் 1985 செப்டம்பர் 15 ஆம் தேதி – அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று அண்ணா மாவட்டத்தை துவக்கினார்.

மதுரை மாவட்டத்தோடு அதுவரை இணைந்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தைப் பிரித்து அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டி, அதற்கான விழாவும், மாபெரும் பேரணியும் நடந்தன.

உற்சாகத்துடன் தனது துணைவியார் ஜானகி அம்மாளுடன் விழாவில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல தலைவர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில், பேசுவதற்குச் சிரமப்பட்ட நிலையிலும், பேசியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அவருக்கான தொண்டர்கள் பெரும் ஆரவாரத்துடன் அவருடைய பேச்சை வரவேற்றிருக்கிறார்கள்.

அவருடைய பேச்சை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து எம்.ஜி.ஆரிடம் கொடுத்திருக்கிறார் அப்போது செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கற்பூர சுந்தரபாண்டியன்.

பதிவு செய்யப்பட்ட தனது பேச்சைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் தன்னுடைய பேச்சைச் செம்மைப்படுத்திக் கொள்ளப் பயிற்சி எடுத்துக் கொண்டாராம் எம்.ஜிஆர். இதை, தான் எழுதிய நூலில் பதிவு செய்திருக்கிறார் கற்பூர சுந்தரபாண்டியன்.
*
அண்ணா மாவட்டத் துவக்க விழாவில் கூட்டத்தினரைப் பார்த்துக் கையசைக்கும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அருகில் திருமதி ஜானகி அம்மையார்.
*

Comments (0)
Add Comment