காமிரா கவிஞர் இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர்.
1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.
தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியிலும் லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினையும் முடித்தார்.
பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.
இவர் புனேயில் திரைப்படக் கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான ‘செங்கோட்டை’ யை கொழும்பு ‘சவோய்’ திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
பின்னர் இந்தியா திரும்பிய பாலுமகேந்திரா அவரது பட்டயப்படிப்பு அறிந்து அவரை ‘செம்மீன்’ படப்புகழ் ராமு காரியத் அவரது ‘நெல்லு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972-ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார்.
அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் ‘சுக்கு’, ’ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி’ ‘சட்டக்காரி’ பி என் மேனோனின் ‘பணிமுடக்கு’ போன்றவை முக்கியமான படங்கள்.
தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார்.
இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.
1977-ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம்
மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும்
திரைப்படம் 1977-ல் வெளியாயிற்று. 1978-ல் தமிழில் அவரது இயக்கத்தில் முதல் படமாக‘அழியாத கோலங்கள்’ வெளியாயிற்று.
பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார். இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும்.
பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார்
“ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத் தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடயங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது.
எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக் கொண்டிருக்கும்.
ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார்.
வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன.
ஜூலி கணபதி திரைப்படம் சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார்.
தேசிய திரைப்பட விருதுகள்.
1978 கோகிலா கன்னடம் ஒளிப்பதிவு,
1983 மூன்றாம் பிறை தமிழ் ஒளிப்பதிவு,
1988 வீடு தமிழ் இயக்கம்,
1990 சந்தியா ராகம் தமிழ் இயக்கம்,
1992 வண்ண வண்ண பூக்கள் தமிழ் இயக்கம்.
மாநில அரசு விருதுகள்!
1974 நெல்லு கேரளம் ஒளிப்பதிவு,
1975 பிரயாணம் கேரளம் ஒளிப்பதிவு,
1977 கோகிலா கர்நாடகம் திரைக்கதை!
நந்தி விருதுகள்!
1978 மனவூரி பண்டவலு தெலுங்கு ஒளிப்பதிவு,
1982 நீர்க்காசனா தெலுங்கு ஒளிப்பதிவு!
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காமிராவை பரிசாக வழங்கியுள்ளார்.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் இப்போது தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர்.
சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கிய பாலா,
நீர் பறவை, தென்மேற்கு பருவக்காற்று இயக்கிய சீனுராமசாமி,
பேரன்பு, கற்றது தமிழ், தங்கமீன்கள் இயக்கிய ராம்,
விசாரணை, பொல்லாதவன், ஆடுகளம் இயக்கிய வெற்றி மாறன்,
மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமார் இவருடைய உதவியாளராக இருந்தவர் தான்.
பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை.
பாலு மகேந்திரா இயக்கிய ‘கதைநேரம்’ தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.
இயக்கிய திரைப்படங்களில் முக்கியமானவை
கோகிலா,
அழியாத கோலங்கள்,
மூடுபனி,
மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்),
ஓலங்கள் (மலையாளம்),
நீரக்ஷ்னா (தெலுங்கு)
சத்மா (ஹிந்தி)
மூன்றாம் பிறை,
நீங்கள் கேட்டவை
உன் கண்ணில் நீர் வழிந்தால்,
யாத்ரா
ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
ரெட்டை வால் குருவி,
வீடு,
சந்தியாராகம்,
வண்ண வண்ண பூக்கள்,,
பூந்தேன் அருவி சுவன்னு,
சக்ர வியூகம்,
மறுபடியும்,
சதி லீலாவதி,
அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி),
ராமன் அப்துல்லா,
என் இனிய பொன் நிலாவே,
ஜூலி கணபதி,
அது ஒரு கனாக்காலம்,
தலைமுறைகள் (இந்த படத்தில் இவரும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்)
- நன்றி: முகநூல் பதிவு