– தொல்.திருமாவளவன் எம்.பி.,
மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின் பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் சாதி, மதவாத அரசியலுக்கு இடமில்லை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை.
சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.
இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் இந்த அறப்போர் வெற்றிகரமாக நடைபெறும். லட்சக் கணக்கானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.
சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும்.
முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் வலதுசாரி அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது உணர்த்துவதற்காகதான் இந்த அறப்போர் நடைபெறுகிறது.
வலதுசாரிகளுக்கு இது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.