என் அப்பா தான் பொன்னியின் செல்வனின் முதல் வாசகர்!

பொன்னியின் செல்வன் பற்றி மணியம் செல்வன்

அபூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது ஆனந்த விகடன் தீபாவளி மலர்.

வண்ணதாசன், பெருமாள் முருகன் இன்னும் ஆன்மிக்க உள்ளிட்டவர்களின் சிறுகதைகள். கனா காணும் காலங்கள், பாக்யலெட்சுமி சீரியல்களின் அசலான பாத்திரங்களுடன் சந்திப்பு.

அகிலனை நினைவூட்டும் ‘காலத்தின் கோலத்தைக் காட்சிப்படுத்தியவர்’ என்ற கட்டுரை, வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர வீரன் – வாண்டாயத் தேவனைப் பற்றிய கட்டுரை, ஊத்துக்குளி ஜமீனைப் பற்றிய பல செய்திகளைத் தொகுத்திருக்கும் கட்டுரை,

பல தலைவர்களின் அருமையான உலோகச் சிலைகளை உருவாக்கும் கலைஞரான அருண் டைட்டனைப் பற்றிய கட்டுரை, ரஹ்மானின் இசைக்கல்லூரி மாணவர்களைப் பற்றிய கட்டுரை, கவிஞர் யுகபாரதியின் ‘அதிவிசேஷ வண்ணத்துப் பூச்சி’ என்கிற அழகான சொல் சித்திரம், இன்னும் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகள்,

மணியம்

புகைப்பட ஆச்சர்யங்கள் – இவற்றுக்கிடையில் அபூர்வமான சந்திப்பாக – ஓவியர் மணியம் செல்வன் தன்னுடைய தந்தை மணியத்தைப் பற்றிப் பகிர்ந்திருக்கிற பதிவு.

தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்குப் படங்களை வரைந்த ஓவியரான மணியம் எப்படி நாவலுக்கு வரைந்தார், எங்கெங்கெல்லாம் சென்று வந்து படங்களை வரைந்த விதம் பற்றி மணியம் செல்வன் சொல்லியிருக்கிற செய்திகளில் அர்ப்பணிப்பான உழைப்பு வெளித்தெரிகிறது.

அந்தச் சந்திப்பிலிருந்து ஒரு பகுதி:

***

பொன்னியின் செல்வன், சோழர்களின் வீரம், கருணை, காதல், கம்பீரம், அரசியல், கருணை, கர்ஜனை அனைத்தையும் வடித்த இலக்கியமாக முன்னணியில் நிற்கிறது.

நாவலின் ஆக்கத்தில் கல்கிக்குப் பெரும் துணையாக இருந்தவர் ஓவியர் மணியம். அவரின் எழுத்தை ஓவியம் வழியாகக் கண்டுகொண்டார்கள் மக்கள்.

கல்கியின் மீதிருந்த குரு பக்தி, அவரோடு இணைந்து அப்பா மணியம் வேலை செய்தவிதம், நமது பாரம்பரியத்தைப் பதிவுசெய்த அழகு பற்றியெல்லாம் நம்மிடம் பேசினார் அவர் மகனும், பிரபல ஒயிருமான மணியம் செல்வன்.

கல்கி என்ற மூன்றெழுத்தை உச்சரித்தாலே, சோழ சரித்திரம் நமது மனக்கண்ணில் பவனி வரும்.

கல்கி என்றாலும், பொன்னியின் செல்வன் என்றாலும் நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்று அழைத்தாலும், கல்கி நம் மனக்கண்ணில் தோன்றுவார்.

கல்கி ‘பொன்னியின் செல்வனை’ எழுதவில்லையென்றால் ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன், பழுவேட்டரையர், குந்தவை, நந்தினி, சுந்தரச் சோழர் எல்லோரும் அறியப்படாமலேயே போயிருப்பார்கள்.

எழுத்தாளனுக்கு சொற்கள் எனில் ஓவியனுக்கு நிறங்கள்.

ஒருமுறை எழுத்தாளர் லா.ச.ரா-வின் கதைக்கு சங்கு புஷ்பம் பறித்து அதைப் பார்த்து வரைந்திருந்தேன். லா.ச.ரா அதை ரசித்தபடி, ரெண்டு விரலாலயும் எடுத்துடலாம் போலருக்கே’ என்றார். அதை நான் இன்றுவரை பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதைப்போல கல்கி ஐயாவும், அப்பாவும் ஒருவரை ஒருவர் புரிந்துவைத்திருந்தார்கள்.

‘பொன்னியின் செல்வனி’ன் பெரும் கதை ஓட்டத்தை, அதன் பெரும் போக்கை நீவி தனியே எடுத்து நீண்ட ஓடையாக்கி அதனூடே இருவரும் பயணித்தார்கள். ஏராளமான முகங்கள். மூன்றரை வருடக் கதையோட்டம்.

இதற்கு ஓவியம் என்பது வாசகர்களோடு நடப்பது போன்றது. ரசிகனின் இதய சிம்மாசனத்தை நோக்கி அவர்கள் ஒவ்வொரு படிக்கட்டாக ஏறிக்கடக்கும் வித்தையை இங்கே கற்கலாம்.

ஓரிரு வாரங்களில் வாசகர்களின் நாடி அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

அப்பாவுக்கு கல்கி ஐயாவின் அகம் புரிந்து விட்டது. கல்கிக்கு அப்பாவின் ஆழம் புரிந்துவிட்டது. இரட்டைக் குழல் துப்பாக்கிபோல சொற்களும் வண்ணங்களும் சரியாக புரிந்து மக்களை சென்றடைந்து விட்டன.

அந்தக் காலத்தில் நந்தினியின் கொண்டை அவ்வளவு பேசப்பட்டது. எல்லோர் வீட்டின் கொலுவிலும் அந்தக் கொண்டை பிரத்யேகமாக இடம்பெற்றது. அது கிட்டத்தட்ட ஆண்டாள் கொண்டையின் மறு பரிமாணம்தான். சின்னப் பழுவேட்டரையர் இரும்பு மனிதர்.

அது ஓவியத்திலும் தெரிந்தது. பெரிய பழுவேட்டரையர் வீரத் தழும்புகளோடு இருப்பார். வயதானாலும் தோளில் புடைத்த தசைத் திரட்சிகளோடு இருப்பார். அதையும் அப்பா ஓவியங்களில் கொண்டு வந்தார்.

பழுவேட்டரையரின் இரட்டை மீசை புகழ்பெற்றது. அப்படி வைத்திருந்த மனிதர்களைப் பார்த்துவிட்டு அப்பா வரைந்திருந்தார்.

இன்னமும் சாக்கியர் கூத்து சிற்பங்களில் இரட்டை மீசை மனிதர்களின் வடிவங்கள் இருக்கின்றன.

அனுபவ சேகரிப்புகளுக்காகவும், ஓவியங்களுக்கான அடிப்படை அனுபவத்துக்காகவும் அப்பாவை அஜந்தாவுக்கு கூட்டிப் போயிருக்கிறார் கல்கி. ‘பொன்னியின் செல்வன்’ எழுதும்போது இலங்கைக்கும், மாமல்லபுரத்துக்கும் அழைத்துப் போயிருக்கிறார். ஒவ்வொரு இதழுக்கும் ஒன்பது படங்கள் வரைந்திருக்கிறார்.

ஒவ்வொரு படமும் கல்கியிடம் காட்டி அவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அச்சுக்குப் போயிருக்கிறது.

சமயங்களில் அப்பாவின் ஓவியத்தில் இருந்த நேர்த்திக்கு இன்னும் கூடுதலாக எழுத்தை கல்கி மெருகுபடுத்தியிருக்கிறார்.

இரவு வரைந்து, கல்கி வீட்டுக்குப் போய் காண்பித்து, திருத்தங்கள் இருந்தால் அதையும் அங்கேயே முடித்து அனுப்பிவிட்டுத்தான் வருவார்.

அதை அத்தனை ஆத்மார்த்தமாகச் செய்தார் அப்பா. ‘பொன்னியின் செல்வன்’ கல்கியில் ஆரம்பிக்கும்போது தொடர்ச்சியான அறிவித்தல்கூட இல்லை.

ஒரே ஒரு தடவை அடுத்த இதழில் ‘பொன்னியின் செல்வன் ஆரம்பம்’ என்று வெளியிட்டுவிட்டு உடனே ஆரம்பித்துவிட்டார் கல்கி.

அப்படி ஆரம்பித்தது மூன்றரை வருடங்கள் வெளிவந்தது. மூன்று வாரங்களுக்குப் பிறகு கதை சூடுபிடித்து எங்கும் பிரபலமாகிவிட்டது.

மக்கள் பழைய பிரதிகளை வாங்கி கதையைத் தாளில் எழுதி வைத்துக்கொண்டார்களாம்.

அப்படியும் கல்கி அலுவலகம் நோக்கி பழைய இதழ்களைத் தேடி வரும்போது ஐந்து இதழ்களில் வந்த தொடரை இலவசமாக அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் பெருவாசகராக இருப்பதால் நாவலுக்கு நியாயம் செய்திருந்தார். கல்கிக்கும் அப்பாவுக்கும் 26 வருட இடைவெளி இருந்தது.

அப்பா அவரை மானசிகமாக குருவாக நினைக்க, கல்கியோ அப்பாவைப் பெரும் கலைஞனாக மதித்திருந்தார். அப்பா அஜந்தா, மாமல்லபுரம், இலங்கை செல்லும் போதெல்லாம் நேரில் அத்தனை சிற்பங்களையும் பார்த்து உள்வாங்கி ஓவியம் தீட்டினார்.

மணியம் செல்வன்

‘பொன்னியின் செல்வன்’ மாதிரியான நாவல்கள் காலத்தையும், இருப்பிடத்தையும் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும்.

அதற்காகப் பயணங்கள் முக்கியமானவை என அவர் நம்பினார். என் தந்தை மணியமோ, கோபுலுவோ எல்லோருமே சாதனையாளர்கள். முன்னோடிகள்.

நானும் அவ்வழியே செல்கிறேன். எனக்கென்று உள்ளுணர்வு சார்ந்தே தனித்தன்மையை ஓவியத்தில் கலக்கிறேன்.

-விகடன் தீபாவளி மலர் 2022.

Comments (0)
Add Comment