ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை!

– அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் பணி நேரத்தின்போது மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதை தொடர்ந்து போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் பணியின்போது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் பெறப்படுகிறது.

மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். மது அருந்திய நிலையில் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு போக்குவரத்துக் கழகம் மீதான நம்பிக்கை குறைவதுடன் தொடர்ந்து இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது.

எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது.

மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment