-இயக்குநர் மணிரத்னம்
வரலாற்றுப் படம் ஆனா மாடர்னா இருக்கணும்னு முடிவு பண்ணி வேலையில இறங்கினோம். அப்படி ஒரு நம்பிக்கை வந்ததுக்குக் காரணமானவங்கன்னு இந்த சமயத்துல ரெண்டு பேரை கண்டிப்பா குறிப்பிட்டாகணும்.
முதலாமவர் ஜெயமோகன்.
எனக்கு ஜெயமோகன் ஒரு கையிலும், கல்கி ஒரு கையிலும் இருந்தது பெரிய பலம். எழுதின விதம், வசனம் எல்லாம் பழைய தமிழில் இருக்கணும். நாடகம் மாதிரி தெரியக் கூடாது.
அலங்காரத் தமிழும் வேண்டாம். ‘மனோகரா’ மாதிரியும் போயிட முடியாது. அது அந்த காலத்திற்கு அருமையாகப் பொருந்தியது. அது தமிழ் பிரவாகமெடுத்த நேரம். இப்ப அது மாதிரி இருக்கக் கூடாது.
ஜெயமோகன் எளிய, புரியக் கூடிய விதத்தில் வட சொற்களைக் கலக்காமல் வசனம் எழுதியிருக்கிறார். அது பேசுவதற்கு சுலபமாக இருந்தது.
இன்னொருத்தர் குமரவேல். இவருக்கு, கதையின் ஐந்து பாகத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும்.. எதைக் கேட்டாலும், எந்த பக்கத்தில் உள்ளதை கேட்டாலும் தெரியும். அவர் நாவலில் அத்துபடியாக இருந்தார். அவருடைய உதவி இந்தப் படத்திற்கு முக்கியமானது.
என்னோட மற்ற எல்லாப் படங்களையும் விட இந்தப் படத்துக்கான நடிகர் தேர்வு ரொம்ப சவாலா இருந்தது.
ஒவ்வொரு கேரக்டருக்கும் நடிகர்களை முடிவு பண்ண ரொம்ப அவகாசம் தேவைப்பட்டது.
அப்படி உள்ள வந்தவங்கதான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எல்லாருமே. எனக்கு எப்பவுமே நடிகர்கள் கிட்ட நடிப்பை வாங்குறது பெரிய விஷயமே இல்லை.
ஆனா இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்தை வச்சி மேனேஜ் பண்ண முடியுமாங்குற பயம், படம் முடியும் வரை இருந்தது. இன்னொரு பக்கம் பார்ட் 1, பார்ட்2 மாதிரி கொரோனா சீஸன் வேற. அதனால் சிறப்பான நடிப்பை வாங்குறதுக்காக நிறைய ஆக்டிங் வொர்க் ஷாப் நடத்தினோம். வேற சில மெனக்கெடல்களும் இருந்தது.
ஷூட்டிங் டைம்ல எனக்கு ஷூட்டிங் மட்டும் ஒழுங்கா நல்லபடியா நடக்கணும். நடிகர்களை சரியான நேரத்துக்கு சாப்பிடக்கூட அனுமதிக்கமாட்டேன். மொத்தத்துல நான் அவங்களைப் பாடாய்ப் படுத்தினேன். பதிலுக்கு அவங்களும் என்னைப் பாடாய்ப்படுத்தினாங்க.
‘பொன்னியின் செல்வன்’ பத்தி மட்டும் பேசிட்டு தப்பிச்சுப் போய்டலாம்னு பார்த்தா ‘நாயகன் பார்ட் 2, வைரமுத்து ஏன் இந்தப் படத்துல இல்லை, கமலோட அடுத்த படம் எப்போன்னு ‘அவுட் ஆஃப் சிலபஸ்’லயெல்லாம் கேள்வி கேக்குறீங்க.
வைரமுத்துவை வேணுமுன்னே தவிர்க்கலை. தமிழ் மொழி பலப்பல நூற்றாண்டுகள் பெருமை கொண்ட ஒரு கடல். இங்கே வைரமுத்துவைம் தாண்டி எத்தனையோ தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் இருக்கிறாங்க.
சினிமாவுல புதுப்புது இயக்குநர்கள் வந்துக்கிட்டே இருக்கிறப்ப புதுப்புது கவிஞர்கள் வரக்கூடாதா? அப்படி அமைஞ்சதுதான் இந்தப் புதிய கவிஞர்கள் கூட்டணி.
இன்னும் சொல்லப்போனா வைரமுத்துவோட நிறைய கவிதைகளை நானும் ரஹ்மானும் பாடல்களாக்கியிருக்கோம். அவரோட 30 வருஷங்கள் சேர்ந்து பணி செஞ்சிருக்கோம். அது போதாதா?
‘நாயகன் 2’ இருக்குமான்னு தெரியலை. மறுபடியும் சேர்ந்து படம் பண்றது பத்தி நானும் கமலும் சிலமுறை பேசியிருக்கோம். கமல் கூட சேர்ந்து இன்னொரு படம் பண்றதா இருந்தா அது நாயகனை விட பல மடங்கு பெட்டரா இருக்கணும்.
அப்படி ஒரு கதை தோணுற வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.
சந்திப்பு: முத்துராமலிங்கன்
-நன்றி: அந்திமழை, அக்டோபர் – 2022