இந்தியாவில் செல்போன் பயன்படுத்துகிறவர்கள் 94 சதவிகிதம்!

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக எவ்வளவோ கருவிகள் மக்களை வந்தடைந்திருக்கின்றன.

இருந்தாலும், செல்போனைப் போல மிகக் குறுகிய காலத்தில் மக்களை ஆக்கிரமித்த பொருள் வேறு இல்லை.

அந்த அளவுக்கு எங்கும் நிறைந்திருக்கிறது செல்போன். மருத்துவமனை, திரையங்கு, கோவில், பொது வெளி என்று எங்கும் எல்லோரும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குனிந்த படி செல்போனை நோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். செல்போனில் ஏதாவது பிரச்சினை என்றால் தன்னுடைய அங்கத்தில் ஒரு பிரச்சினை வந்ததைப் போலத் துடித்துப் போகிறார்கள்.

தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வறிக்கை, அண்மையில் 94 சதவிகிதம் பேர் செல்போன்களைப் பயன்படுத்துவதாக அறிவித்திருக்கிறது.

இதில் நகரம், கிராமம் என்ற பாகுபாடில்லை.

கிராமங்களில் கூட 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அந்த விதத்தில் டி.வி.யை விட, முந்திக் கொண்டிருக்கிறது செல்போன் பயன்பாடு. அதிலும் இணையதள வசதியுடன் கூடிய செல்போன்களை வைத்திருப்பவர்கள் நகர்ப்புறத்தில் 64 சதவிகிதம் பேர். கிராமப் புறங்களில் 41 சதவிகிதம் பேர்.

இதிலும் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஏறத்தாழ 95 சதவிகிதம் பேர். இவ்வளவு பேர் பரவலாகப் பயன்படுத்துவதை ஒட்டித்தான் செல்போன் மூலமாக நடக்கும் சைபர் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன.

பெரிய மார்க்கெட்டிங் தளமாக செல்போன்கள் மாறியிருக்கின்றன. செல்போன் திருட்டும் எங்கும் சகஜமாக நடக்கின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.

தனிநபர் ஒருவர் செல்போனைப் பயன்படுத்தும் நேரம் மட்டும் மாறுபடுகிறது. இளைஞர்களும், குழந்தைகளும் மிக அதிக அளவில் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள்.

அவர்களுடைய கண்கள் சிவக்கும் அளவுக்குச் செல்போனைப் பார்த்தபடி இருக்கிறார்கள்.

குடும்பத்தில் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதை விட, செல்போனில் யாருடனோ அல்லது யாரோ அனுப்பிய செய்திகளை, காட்சிகளைப் பார்ப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளிடம் குழந்தைமைத் தனம் குறைந்திருக்கிறது. சிறு வயதிலேயே பிஞ்சுக் குழந்தைகளுக்கும் செல்போன்கள் பரிச்சயமாகி விடுகின்றன.

முன்பெல்லாம் கிராமப் புறங்களில் ரொம்பவும் சேட்டை பண்ணுகிற குழந்தைகளை வீட்டில் கயிற்றால் கட்டிப் போடுவார்கள்.

இப்போது அதே கட்டிப்போடுகிற வேலையை செல்போன்கள் செய்கின்றன. விரல் சூப்பிகளுக்குப் பதில் செல்போன்கள் அந்த இடத்தைப் பிடித்து விட்டன.

செல்போனில் இணைத்திருக்கிற காமிராவினால் பொழுதுக்கும் செல்பி எடுக்கிறார்கள்.

தங்களுக்கு முன்னால் ஏதாவது விபத்து அல்லது அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஏதாவது நிகழ்ந்தால் கூட, அதில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் வேகம் காட்டுவதை விட, அதை செல்போனில் காட்சிப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதைச் சுடச்சுட மற்றவர்களுக்குப் பகிர்கிறார்கள். “லைக” எவ்வளவு வருகிறது என்பதில் பித்துப் பிடித்தவர்களைப் போலிருக்கிறார்கள்.

செல்பி எடுப்பதில் சிலர் காட்டும் தீவிரம் அவர்களுடைய உயிர்களைப் பறிப்பது வரைக் கொண்டு சென்று விடுகிறது.

மலை முகடுகளில், ஆபத்தான வெள்ளப்பகுதிகளில் சாகச உணர்வோடு சிலர் செல்பி எடுக்க முயற்சித்து உயிரை விட்டிருக்கிறார்கள்.

அதே சமயம் நமக்கு முன்னால் இருக்கிற உறவுகளுக்கு எப்படிப்பட்ட அர்த்தம் கொடுக்கிறோம் என்பதற்கு மௌனமான சாட்சியங்களாக இருக்கின்றன செல்போன்கள்.

பலர் தங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம் என்று நினைத்த செல்போன் வழியிலான காட்சிப்பதிவுகள் யாராலோ கண்காணிக்கப்பட்டு, வெளியாகி அவர்களுடைய உயிருக்கே உலை வைக்கின்றன.

பொள்ளாச்சியில் நடந்த குரூரத்தைப் போல பல பாலியல் வக்கிரங்கள் செல்போனைச் சாட்சியாக வைத்தே நடந்திருக்கின்றன.

“எந்தச் சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்..” என்றொரு பாடல் வரி உண்டு. அதை இன்றைக்குப் பல விதங்களில் உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன செல்போன்கள்.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களும், அத்துமீறல்களும், அராஜக உளறல்களும் எப்படியோ செல்போன் மூலமாகப் பதிவாகிப் பொதுவெளிக்கு வந்து சர்ச்சையைக் கிளப்பி விடுகின்றன.

குறிப்பிட்ட சுதேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வீடியோ சகிதமாகக் குற்றம் சாட்டப்பட்டுப் பிறகு அந்தச் செய்தி மறைக்கப்பட்டு விட்டது ஒரு உதாரணம்.

குடும்பம் என்ற கட்டமைப்பு உடைவதில் இன்று செல்போன்களின் பங்கு அதிகம். நம்மைக் கண்காணிக்கும் கருவியான செல்போனைக் கைவசம் வைத்துக் கொண்டு தான்,

மற்றவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிற ஒன்றைப் பண்ணிக் கொண்டிருக்கிறவர்கள் ஒரு கட்டத்தில் அம்பலத்திற்கு வருகிறபோது துவண்டு வெறுத்துப் போய்விடுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் செல்போன் ஒருவிதத்தில் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.

“பிக் பாஸ்” தொடரில் வருவது மாதிரி செல்போன் இல்லாமல் நூறு நாட்களை இன்றைய இளைய தலைமுறையிடம் இருக்கச் சொன்னால் தவித்துத் தடுமாறிப் போய்விடுவார்கள்.

அந்த அளவுக்கு செல்போன் என்கிற சாதனம் பலரை அடிமைப்படுத்தியதைப் போல ஆக்கி வைத்திருக்கிறது.

செல்போனில் ஃபேஸ்புக், மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக நெருக்கமாவதாக நினைக்கிற உறவுகள் எப்படிப்பட்டவை என்பதைப் பலருக்கு உணர்த்துவது காலம் தான்.

இதில் நேரடியாகப் பார்த்த முக்கியமாகப் பாதித்த ஒரு காட்சி.

பெரு நகரத்தில் நடுத்தர வயதான ஒருவரின் மரணம். ஐம்பதைக் கடந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு மறைந்திருந்தார்.

அவருடைய உடல் வீட்டின் முன்னறையில் வைக்கப்பட்டிருந்தது. மிகச் சில உறவினர்கள். யாரும் அழும் சத்தம் இல்லை.

இறந்தவரின் இரு குழந்தைகள் தனியே உட்கார்ந்து செல்போன் விளையாட்டுகளில் மூழ்கியிருந்தார்கள். உயிரிழந்த நண்பர் அந்தப் பிள்ளைகளைப் படிக்க வைக்கப்பட்ட சிரமங்கள் தெரியும்.

அவ்வளவு அன்பு காட்டிய நண்பரின் மறைவு அவருடைய சொந்தக் குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. செல்போன் மீதிருந்த பிரியம் நெருக்கமான உறவின் மீது இல்லை. அன்பானவர்களின் இழப்பும் புரியவில்லை.

பார்த்த சொந்தக் காரர்கள் இதைப் பார்த்து அதிர்ந்து போனாலும், அருகில் இருக்கிற சொந்த உறவுகளைக் கூட உலர வைக்கிற அளவுக்கு வீடுகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன செல்போன்கள்.

இப்படியொரு நேரடி அனுபவப் பின்னணியில் தவிர்க்க முடியாத அளவுக்குப் பயன்பாட்டில் இருக்கும் செல்போன் சதவிகிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

-யூகி

Comments (0)
Add Comment