திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின்பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு இறந்து கிடந்த வாலிபரின் தலை மற்றும் ஒரு கை தனியாக துண்டிக்கப்பட்டும், உடல் தனியாகவும் கிடந்தது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அங்கு இறந்து கிடந்த வாலிபர், மணப்பாறையை அடுத்த அமயபுரம் அருகே உள்ள மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமாரின் மகன் சந்தோஷ் (வயது 23) என்பது தெரியவந்தது.
மணப்பாறை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவர் கடந்த 6 மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச்சென்று, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
அப்போதும் எல்லா பணத்தையும் இழந்ததால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான சந்தோஷ், ரெயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் எங்களது குடும்பம் நாசமாகிவிட்டதே என்று மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ் நேற்று முன்தினம் இரவு 9.50 மணிக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு ‘ஸ்டேட்டஸ்’ வைத்துள்ளார்.
அதில், என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான் என்றும் அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.