தியாகிகளுக்கு எம்.ஜி.ஆர். காட்டிய மரியாதை!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால், அவரது உதிரத்தில் தேசியமும் தெய்வீகமும் கலந்திருந்தது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், தியாகிகளுக்கும், தலைவர்களுக்கும் அவர் செய்த மரியாதை நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தேசிய நீரோட்டத்தில் இருந்ததாலோ என்னவோ, விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு எம்.ஜி.ஆர் விழா எடுத்தும், சிலைகள் நிறுவியும், அவர்கள் சாதனைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார்.

அதில் குறிப்பிடத்தகுந்த சில தியாகிகளை சிறப்பிக்க எம்ஜிஆர் செய்த பணிகளைப் பார்ப்போம்.

பாரதியார் பெயரில் பள்ளிகள்

விடுதலை நெருப்புக்கு தனது கவிதைகளால் எண்ணெய் ஊற்றி, வேள்வியாக வளர்த்தவர் மகாகவி பாரதியார்.

அவர் பெண் எடுத்த கடையம் கிராமத்தில் (அப்போது நெல்லை மாவட்டம் – இப்போது தென்காசி மாவட்டம்) அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் இருந்தன.

எம்.ஜி.ஆர் அரியணை ஏறியதும், அந்த மூன்று பள்ளிகளுக்கும் பாரதியின் பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.

1981 ஆம் ஆண்டு பாரதியின் நூற்றாண்டு விழாவை எட்டயபுரத்தில் சிறப்பாக நடத்தினார்.

எட்டயபுரத்தில் உள்ள பாரதியின் நினைவு மண்டபத்தில் 82 ஆம் ஆண்டு அவருக்கு முழு உருவச்சிலை எழுப்பியதும், பொன்மனச்செம்மல்தான்.

பெரியார் நூற்றாண்டு விழா

எம்.ஜி.ஆர் ஆத்திகராக இருந்த போதிலும் தந்தை பெரியாரிடம் தனிப்பாசம் வைத்திருந்தார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, பெரியார் நூற்றாண்டு விழாவை சென்னையில் 15-09-1978 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் பெரியார் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அப்போது மதுவிலக்கு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 1,619 கைதிகளை விடுதலை செய்ய எம்.ஜி.ஆர். ஆணையிட்டார்.

ராஜாஜிக்கு நூற்றாண்டு விழா

1978 ஆம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜியின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 24-12-78 அன்று ராஜாஜியின் உருவச்சிலை எம்.ஜி.ஆர். தலைமையில் திறக்கப்பட்டது.

அப்போது தமிழகம் முழுவதும் சிறைகளில் இருந்த 848 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் காமராஜருக்கு சிலை

பெருந்தலைவர் காமராஜர் மீது எம்.ஜி.ஆருக்கு தனி ஈடுபாடு உண்டு.

சென்னை திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள இல்லத்தில் தான் காமராஜர் நீண்டகாலம் வாழ்ந்தார்.

அந்த வீட்டை 1978 ஆம் ஆண்டு தமிழக அரசு விலைக்கு வாங்கி, காமராஜர் நினைவில்லமாக மாற்றியது.

அதே ஆண்டில் சென்னை கடற்கரை சாலைக்கு காமராஜர் பெயரை சூட்டியவரும், காமராஜர் பிறந்த விருதுநகரை தலைநகராக கொண்டு காமராஜர் மாவட்டம் அமைத்ததும் எம்.ஜி.ஆர் தான்.

அண்ணா சாலையில் அண்ணாவுக்கு சிலை
அண்ணா பெயரில் கட்சி நடத்திய எம்.ஜி.ஆர், அவருக்கு மரியாதை செலுத்த, ஆட்சிக் கட்டில் ஏறும் வரை காத்திருக்கவில்லை.

சென்னையில் அண்ணா சாலையும், வாலாஜா சாலையும் சந்திக்கும் முனையில் ஒரு விரல் காட்டுவதுபோல் அண்ணாவுக்கு தனது சொந்த செலவில் சிலை நிறுவினார் எம்.ஜி.ஆர்.

கல்விமேதை டாக்டர் ஏ.ராமசாமி முதலியாரை வைத்து அந்த சிலையைத் திறக்கச் செய்தார்.

அ.தி.மு.க.வை ஆரம்பித்த கையோடு, 1973 ஆம் ஆண்டிலேயே, அண்ணாவுக்கு பொன்மனச் செம்மல் செய்த கைமாறு இது எனச் சொல்லலாம்.

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment