– சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500 என்ற சராசரி நிலையில் இருந்து வரும் நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது.
சுகாதாரத்துறை தகவலின்படி இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2,915 பேர் டெங்கு காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்டில் 481; செப்டம்பரில் 572 பேர் என பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பருவ கால காய்ச்சல்களுடன், டெங்குவும் வேகம் எடுத்துள்ளது. வரும் நாட்களிலும் டெங்கு பாதிப்பு மேலும் வேகம் எடுக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமளித்த சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மழைக் காலம் துவங்கியுள்ளதால், சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். எனவே அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் நன்னீர் தேங்கக்கூடிய பொருட்கள், இடங்களைக் கண்டறிந்து சுத்தப்படுத்த வேண்டும்” என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கேட்டுக்கொண்டார்.