பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏனிந்தக் கூட்டம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் கூட்டம்; ரொம்ப நாட்களுக்குப் பிறகு சிறு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு குடும்பத்தோடு வருகிறவர்கள். அவ்வளவு காட்சிகள் தொடர்ந்து திரையிடப்படுகின்றன.

நிஜமாகவே ‘பொன்னியின் செல்வன்’ பட வெளியீட்டை ஒரு கொண்டாட்டத்தைப் போல மாற்றியிருக்கிறார்கள்.

மாற்றியது யார்?

பெரும்பாலும் ஊடகங்களும், வாய் மொழி விளம்பரங்களும் தான் காரணம்.

ஆங்கில மொழி ‘அவதார்’, தெலுங்கை மூலமாகக் கொண்ட ‘பாகுபலி’ போன்ற படங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்து பெரும் வணிக வெற்றியை ஈட்டியிருக்கும்போது “தமிழர்களின் வரலாற்றைச் சிறிதளவாவது நினைவுபடுத்தும் ‘பொன்னியின் செல்வன்’ வணிக வெற்றியைப் பெறுவது பெருமையானது தானே” – என்றும் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் சட்டென்று இந்த வெற்றியை அடைந்துவிடவில்லை.

கடந்த ஒரு மாதமாகவே படத்திற்கான ‘பிரமோஷன்’ வேலைகள் துவங்கிவிட்டன. படம் இப்படித்தான் அமையும் என்று சிலர் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆரூடம் சொன்னார்கள்.

படத்தில் நடித்தவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குக் கூட்டாகப் போய் வெவ்வேறு மொழி ஊடகச் சந்திப்பை நடத்தி சோழர்கள் பெருமையைக் கொஞ்சம் விதைத்துவிட்டு வந்ததாகச் சொன்னார்கள். நடித்த சிலர் திரையரங்குகளுக்குப் போய் ரசிகர்களோடு ஆரவாரமாய்ப் படம் பார்த்தார்கள்.

போதாக் குறைக்குச் சமூக வலைத்தளங்களில் எல்லாம் உச்சிமுகர்ந்தோ அல்லது திட்டித்தீர்த்தோ எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் இன்று வரை.

1955 வாக்கில் தொடர்கதையாக வெளிவந்து, பிறகு காலத்தின் வெவ்வேறு அடுக்குகளிலும் அடுத்தடுத்துத் தொடராக வெளிவந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நூலாக வெளிவந்தும் தற்போதும் அதிக அளவில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.

உண்மையான வரலாறு கொஞ்சமும், கற்பனையான புனைவு அதிகமும் கொண்ட  பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக்குவதற்குரிய கூறுகளைக் கொண்டிருந்ததாலேயே எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் படம் பெரு வெற்றியைப் பெற்ற பிறகு திரைப்படமாக்க முயற்சித்திருக்கிறார்.

பின்னாளில் இயக்குநரான மகேந்திரனை அப்போதே அந்த நாவலுக்குத் திரைக்கதை வசனம் எழுதச் சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சிக்கலால் அவரால் அதைத் திரைப்படமாக்க முடியாமல் போனது.

அடுத்து கமலும் அதைத் திரைப்படமாக்க முயற்சித்து முடியவில்லை. இயக்குநர் மணிரத்னமும் தொடர்ந்து முயற்சித்து, கொரோனா இடைவெளிகளுக்குக்கு இடையே ஒருவழியாக இரு பாகங்களாக எடுத்து முடித்து விட்டு முதல் பாகத்தை வெளியிட்டும் விட்டார்.

திரைப்படம் வெளிவந்த பிறகு சில நாட்களிலேயே வசூல் நூறு கோடியைத் தாண்டியிருக்கிறது. தற்போதும் கூட்டம் குறையவில்லை என்பதால், மேலும் அதிக வசூலை ஈட்ட வாய்ப்பிருக்கிறது.

ஆக, வணிகரீதியாக ‘பொன்னியின் செல்வன்’ வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் உள்ளடக்க ரீதியில் இத்திரைப்படத்தின் மீது தொடர் விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இயக்குநர் வெற்றிமாறன் இந்துவாகக் காட்ட முயற்சி என்று சொன்னாலும் சொன்னார். அந்தச் சர்ச்சை பரவித் தொலைக்காட்சி விவாதம் வரைக்கும் போய்விட்டது.

வழக்கமான சில ‘கருத்தாளர்கள்’ உட்கார்ந்து ஆற அமரப் படத்தைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள். அதை ஒட்டிச் சிலர் பேச்சில் ஆக்ரோஷம் காட்டினார்கள்.

பொன்னியின் செல்வன் – காலத்தில் ‘இந்து’ என்ற சொல்லாடலே இல்லை என்பதும் அவர்கள் சைவர்கள், வைணவர்கள் என்று சில கூறுகளாகப் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை ஏற்கனவே ‘தசாவதாரம்’ படத்தில் காட்டியிருப்பார் கமல்ஹாசன்.

ஆனாலும் அது ஒருபுறம் விவாதமானாலும், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் மற்றொரு புறம் அதுபாட்டுக்கு அந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

இந்த மவுசு பொன்னியின் செல்வன்- இரண்டாம் பாகம் வெளிவந்து ஓடும் வரை நீடித்துக்கொண்டு தானிருக்கும்.

சரி.. பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து தமிழர்களுக்கு என்ன பலன் என்றும் சிலர் கேட்கலாம். பொன்னியின் செல்வன் நாவல் பிரதிகள் இன்னும் கூடுதலாக விற்பனை ஆகலாம்.

காமிக்ஸ் வடிவல் வெளிவந்திருக்கிற அந்த நாவல் வடிவத்திற்கு இப்போது மதிப்பு கூடியிருக்கிறது.

சோழ அரசர்களின் பெயர்களும், கதாபாத்திரங்களின் தமிழ்ப்பெயர்களும் பலருக்குப் பரிச்சயமாகி இருக்கின்றன.

இனி தமிழகத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழகத்தில் இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்குச் சூட்டப்படலாம்.

சோழர் காலத்திய ஆட்சி எப்படித்தான் இருந்தது என்பது குறித்துச் சிலர் ஆவணங்கள் மூலமாக ஆராய முனையலாம். அப்போது சில மன்னர்கள் மீது கட்டி எழுப்பிப் பரப்பப்பட்டிருக்கிற சில புனைவான பிம்பங்கள் உடைபடலாம்.

காலம் அதற்கான எல்லாச் சாத்தியங்களையும் உருவாக்கலாம்.

-யூகி

Comments (0)
Add Comment