புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது.
இந்த முடிவிற்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
அரசின் இந்த முடிவை எதிர்த்து மின்துறை தனியார் மய எதிர்ப்பு அனைத்து ஊழியர் போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அப்போது அவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தது.
இந்த நிலையில் மின்சார வினியோகத்தை 100 சதவிகிதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை புதுச்சேரி அரசு அதிரடியாக வெளியிட்டது. இது மின்வாரிய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28-ம் தேதி பணிகளை புறக்கணித்து மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
வேலை நிறுத்த போராட்டத்தால் மின் அளவீடு செய்வது, மின்கட்டணம் வசூல், புதிய இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் 16 துணை மின் நிலையங்களில் மின்சாரத்தை துண்டித்ததுடன், பீஸ் கட்டைகளையும் மின்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அதனால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் ஒரே நேரத்தில் இருளில் மூழ்கியது.
துணை ராணுவப் படை இதுகுறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று தெரிவித்தார்.
அதேபோல் பாதுகாப்பு காரணங்களுக்காக துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து புதுச்சேரிக்கு துணை ராணுவப் படை வந்தது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மின்சார வாரிய ஊழியர்களை துணை ராணுவப் படை உதவியுடன் காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர்.
மின்துறை தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை குண்டுகட்டாக காவல்துறை கைது செய்தது.
தொடர்ந்து அவர்கள் காவலர் சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் துணை ஆட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து மின் துறை சொத்துக்களை சேதப்படுத்த மாட்டோம், அறவழியில் போராடுவோம் என்று உத்தரவாதம் அளித்ததையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.