அனைவருக்கும் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து சென்ற பால் பாஸ்கர்!

அமைதி அறக்கட்டளை நிறுவனரான, மறைந்த முனைவர் ஜெ.பால்பாஸ்கர் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மதுரையில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் மகாலில் இன்று நடைபெற்றது. அதோடு பால் பாஸ்கரின் திருவுருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது.

காந்தி கிராம முன்னாள் துணைவேந்தர் முனைவர். மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பால் பாஸ்கரின் மகள் செல்வி. ஹெலன் வரவேற்பு நிகழ்த்தினார்.

இந்த நூல்களை சோக்கோ அறக்கட்டளைச் சேர்ந்த திரு. மகபூப்பாட்சா, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் வழக்கறிஞர் முனைவர். குமார் ராஜேந்திரன்,

முன்னாள் காவல்துறை துணைத் தலைவர் திரு.பாலசுப்ரமணியன், வழக்கறிஞர் செல்வகோமதி, முனைவர். க.பழனித்துரை, திரு.தங்கபாண்டி ஆகியோர் வெளியிட்டுப் பெற்றுக் கொண்டனர். 

‘புகழ்மிக்க விசாரணைகள்’ நூலை வெளியிட்டுப் பேசிய டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன், 

“இது அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் என்றும், எனவே தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்ற நூலகங்களிலும் பார் கவுன்சில் நூலகங்களிலும் வழக்கறிஞர்கள் சங்கங்கள், நீதிமன்றக் கூட்டமைப்புகள் என நீதித்துறை சார்ந்த அனைத்து இடங்களிலும், சட்டக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என  எல்லா இடங்களிலும் இந்த நூல் இருக்க வேண்டியது அவசியம் என்றும் பேசினார்.

அதோடு புகழ்மிக்க விசாரணைகள், தண்ணீர் யாருக்குச் சொந்தம்?, தமிழக சுற்றுச் சூழல் : நேற்று, இன்று, நாளை என்ற இந்த மூன்று நூல்களையும் வாங்கி, எல்லோருக்கும் பயனுள்ள வகையில் பரிசளிக்கப்போவதாகவும் வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன் அப்போது கூறினார்.

அதுமட்டுமல்லாமல் புகழ்மிக்க விசாரணைகள் நூலில் மிக முக்கியமான கருத்துக்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், இந்த நூல் குறித்து விவாதிக்க, அறிஞர்கள் நிறைந்த ஒரு பிரம்மாண்ட கருத்தரங்கை ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிறைவாக பால் பாஸ்கருக்கும் தனக்கும் இருந்த ஆழமான நட்பைப் பற்றி விரிவாகவும் நெகிழ்ச்சியோடும் எடுத்துரைத்தார்.

பால் பாஸ்கரின் இந்த நூல்களை பரிசல் பதிப்பகம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

Comments (0)
Add Comment