– சைதை துரைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்.
இந்த உலகத்திலேயே மக்களின் வேண்டுகோளுக்காகவும், தொண்டர்களின் விருப்பத்துக்காகவும், ரசிகர்களின் அன்புக்காகவும் ஒரு கட்சி தொடங்கப்பட்டது. என்றால் அது அ.தி.மு.க. மட்டும்தான்.
அந்த கட்சிக்கு விதை ஊன்றிய நாள் என்ற பெருமை 1972-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு உண்டு.
அ.தி.மு.க. என்ற பேரியக்கத்தை தோற்றுவிப்பதற்கான விதையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உள்ளத்தில் விதைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதால், அந்த வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு விளக்க கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்தி, பேரறிஞர் அண்ணாவை முதலமைச்சராக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உண்டு என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும்.
அதேபோல், அண்ணாவின் ‘திடீர்’ மறைவுக்கு பிறகு கருணாநிதியை முதலமைச்சராக்கியதும் எம். ஜி.ஆர். தான்.
அடுத்து நடந்த 1971-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி முதல் அமைச்சராவதற்கும் எம்.ஜி.ஆரின் சூறாவளி சுற்றுப்பயணமே காரணமாக அமைந்தது.
தி.மு.க.வின் வெற்றிக்கு மட்டுமின்றி தன்னுடைய வெற்றிக்கும் எம்.ஜி.ஆர். தான் காரணம் என்பதை, ‘வென்றாரும் வெல்வாரும் இல்லாத வகையில் ஒளிவீசும் தலைவா..’ என்ற கவிதையில், ‘உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக் கண்டு மகிழவேண்டும் என்று கருணாநிதியே எழுதி நன்றி தெரிவித்திருக்கிறார்.
அப்போது பெரும்பான்மை பெற்றிருந்த கருணாநிதி ஆட்சியில் ஊழலும், முறைகேடும் பெருகிவிட்டது என்று அன்றைய எதிர்க்கட்சி தலைவர் பெருந்தலைவர் காமராஜர் குற்றம் சுமத்தினார்.
இதற்கு கட்சியின் பொருளாளரான எம்.ஜி.ஆர். பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரம் சினிமாவிலும், அரசியலிலும் திடீர் பிரவேசம் செய்த மு.க.முத்துவின் பெயரில் தி.மு.க.வில் மன்றங்கள் தொடங்கப்பட்டன.
எம்.ஜி.ஆர். மன்றங்களை முத்து மன்றமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடந்தன. மேலும், மதுரையில் நடந்த தி.மு.க. மாநாட்டின் ஊர்வலத்தை மு.க.முத்து தலைமை ஏற்று நடத்தினார். நடப்பதை கண்டு, என்னை போன்ற எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு ரத்தம் கொதித்தது.
ஆகவே, எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாம்பரம் பாலுவின் இல்லத்தில் ஒன்றுகூடி விவாதித்தோம். எம்.ஜி.ஆர். மன்றத்துக்கு என பிரத்யேககொடி உருவாக்க முடிவு செய்தோம்.
எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் இயங்கிய ராயப் பேட்டை சத்யா திருமண மண்டபத்தின் (இன்றைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த தாமரை மலரை கொடியில் பயன்படுத்துவோம் என்ற என்னுடைய ஆலோசனை ஏற்கப்பட்டது.
அதன்படி தாமரைப்பூ கொடிக்கு அங்கீகாரம் கேட்பதற்காக 1972-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியன்று எம்.ஜி.ஆர். மன்றங்களின் சென்னை செங்கை மாவட்ட ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம், எம்.ஜி.ஆரை திரை உலகிலும், அரசியல் உலகிலும் செதுக்கிய சிற்பி அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்தது.
எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஆலோசனை கூட்டம் நடப்பதை அறிந்து கொண்ட முதலமைச்சர் கருணாநிதி, உடனே புதுச்சேரி முதலமைச்சர் பாரூக் மூலம் எம்.ஜி.ஆரிடம் சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால், இது எங்களுக்கு அப்போது தெரியாது.
எங்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., “அண்ணா கண்ட இருவர்ண கொடிதான் நமது அடையாளம். தனித்த வேறு அடையாளம் எதுவும் நமக்கு தேவை இல்லை.
தாய்க்கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால் நான் தாய்க்கழகம் தான் வேண்டும் என்பேன்” என்று அழுத்தமாக பேசி சமாதானம் ஆகிவிட்டார்.
எம்.ஜி.ஆரின் பேச்சு அனைத்து தொண்டர்களையும் துவள வைத்துவிட்டது. என்னால் அந்த அதிர்ச்சியை தாங்கமுடியவில்லை.
ஆனாலும், துணிச்சலை வரவழைத்துக் கொண்டு காரில் ஏறியிருந்த எம்.ஜி.ஆரிடம் ஓடோடிச் சென்று என் மனதில் இருந்த அத்தனை வேதனைகளையும் மளமளவெனக் கொட்டினேன்.
புதிய எம்.ஜி.ஆர். மன்றங்கள் தொடங்க வட்ட கிளைக்கழக செயலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதையும், மு.க.முத்து மன்றங்கள் தொடங்குவதற்கு ஊக்கம் கொடுக்கப்படுவதையும், கட்சியில் எம்.ஜி.ஆருக்கு எதிரான உள்ளடி அரசியலையும் கொட்டினேன்.
நான் சொன்னதை அக்கறையுடன் கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர்., “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
உடனே. நான் சொன்ன தகவல்கள் குறித்து பலரிடமும் விசாரித்து, அவை எல்லாம் உண்மை என்பதை எம்.ஜி.ஆர். அறிந்து கொண்டார். எனவே, அன்று மாலையே அக்டோபர் 8-ம் தேதி 2 பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு தேதி கொடுத்தார்.
அதன்படி, முதலில் திருக்கழுக்குன்றம் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., “எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க.வின் கிளைக்கழக செயலாளர்கள் தொடங்கி, அமைச்சர்கள் வரை அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கை காட்டவேண்டும்” என்று முழங்கினார்.
அடுத்து பேசிய சென்னை லாயிட்ஸ் ரோடு கூட்டத்தில், “நான் தான் தி.மு.க., தி.மு.க. தான் நான்” என்று உரிமைக் குரல் எழுப்பினார்.
“கிளைக்கழக செயலாளர்களும் கணக்கு காட்டவேண்டும்” என்று எம்.ஜி.ஆர். அழுத்தி பேசியதற்கு, நான் அக்டோபர் 1-ம் தேதி தெரிவித்த கருத்துகள் தான் காரணமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் பேச்சு தி.மு.க.வில் பூகம்பத்தை கிளப்பியது.
இதையடுத்து தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில், அக்டோபர் 10-ம் தேதி எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியானது.
எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி கேட்டு தமிழகமே ஸ்தம்பித்தது. நாடெங்கும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கட்சி தொடங்க வேண்டும் என யாருடைய தலைமையும் இல்லாமல் மக்களிடம் தன்னெழுச்சி புரட்சி ஏற்பட்டது.
வீதிக்கு வந்து போராடிய மக்களுக்காகவே, அக்டோபர் 17-ம் தேதி அண்ணா தி.மு.க. என்ற இயக்கத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
இந்தக் கட்சி தோன்றுவதற்கான விதை, அக்டோபர் 1-ம் தேதி நான் துணிச்சலுடன் தலைவரிடம் (எம்.ஜி.ஆர்) சொன்ன உண்மைகள்தான். “விதையின் அளவால் மரத்தின் உயரம் தீர்மானிக்கப்படுவதில்லை” என்பார்கள்.
அதுபோல் நான் சொன்ன சில உண்மைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். 8-ம் தேதி நீதி கேட்டதால், 10-ம் தேதி நீக்கப்பட்டு, அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க.வை உருவாக்கினார்.
மக்களால் மக்களுக்காக தோன்றிய இந்த இயக்கம் தோன்றுவதற்கு காரணமானவர்களில் நானும் ஒருவன் என்ற பெருமையோடு இந்த நாளை நினைவு கூறுகிறேன்.
– நன்றி: தினந்தந்தி நாளிதழ் அக்டோபர் 01.