கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு அக்கதையில் வரும் முடிச்சுகள், திருப்பங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும். கல்கியின் மற்ற புதினங்களே கூட அத்தகைய திருப்தியைத் தராது என்பதே அவர்களின் மனநிலை.
அப்படிப்பட்டவர்கள் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வ’னை திரையில் பார்க்கும்போது என்னவாக உணர்வார்கள்?
குறைந்தபட்சமாக, அப்படிப்பட்ட வாசகர்கள் அதிருப்தியை எதிர்கொள்ளக் கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார் மணிரத்னம். அதற்கேற்றவாறு திரையை விட்டு கண்களை விலக்காதவாறு ‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தந்திருக்கிறார்.
தடம் மாறாத கதை!
தஞ்சையை ஆண்ட சுந்தர சோழர் (பிரகாஷ்ராஜ்) சுகவீனப்படும்போது, பெரிய பழுவேட்டரையர் தலைமையில் சிற்றரசர்கள் ஒன்றுகூடி மதுராந்தக சோழனை (ரகுமான்) அரசணையில் அமர்த்த முடிவெடுக்கின்றனர்.
மதுராந்தகனின் தந்தை விட்டுக்கொடுத்த அரியணையில்தான் சுந்தரர் அமர்ந்திருக்கிறார் என்பது அவர்களது பார்வை.
இந்த பங்காளிப் பிரச்சனையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆடுகிறார் பெரிய பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி (ஐஸ்வர்யா ராய்). பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளோடு அவருக்குத் தொடர்பு இருக்கிறது.
சோழ நாட்டின் நலனுக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறார் சுந்தர சோழரின் மகள் குந்தவை (த்ரிஷா).
சுந்தரரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) நுளங்கம்பாடியை வென்று கலிங்கம் நோக்கி முன்னேறுகிறார்.
அதற்கு முன்னதாக, தன்னுடன் போரிட்ட வந்தியத் தேவனை (கார்த்தி) தஞ்சை சென்று சுந்தர சோழரையும் குந்தவையையும் காண அனுப்புகிறார்.
தஞ்சைக்கு செல்லும் வந்தியத் தேவன் குந்தவைக்கு முன்னதாகவே நந்தினியைச் சந்திக்கிறார். அதனால் விளையும் குழப்பம் அவர் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்குச் செல்கிறது.
அதன்பின்னரும் காலை பின்னுக்கு நகர்த்தாமல், குந்தைவையின் சொல்படி இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மனைச் (ஜெயம் ரவி) சந்திக்கச் செல்கிறார்.
அதே நேரத்தில், ஆதித்த கரிகாலனும் இலங்கைக்கு பார்த்திபேந்திரனை (விக்ரம் பிரபு) அனுப்புகிறார். பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளோடு தொடர்பில் இருக்கும் நந்தினியோ அருள்மொழியைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறார்.
இலங்கையை வெற்றி கொண்ட காரணத்தால், தோல்வியடைந்த அந்நாட்டு மன்னரும் கூட சோழ இளவரசன் மீது கொலை வெறியில் இருக்கிறார்.
இத்தனை பகைக்கு நடுவே அருள்மொழி உயிர் பிழைத்தாரா என்பதைச் சொல்கிறது பொன்னியின் செல்வன் பாகம் 1.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு, மணிரத்னம் பெரிதாக அதிர்ச்சியை அளிக்கவில்லை.
மூலக்கதையில் இருந்து தடம் மாறாத காரணத்தால் சரித்திரக் கதை படித்தவர்களுக்கு திரைக்கதையில் அதிருப்தி இருக்காது. அதேநேரத்தில், குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்த கலைஞர்கள் மீது மாற்று அபிப்ராயங்கள் இருக்கலாம்.
திரை முழுக்க தலைகள்!
‘பொன்னியில் செல்வன்’ படம் தொடங்கிய முதல் அரைமணி நேரம் வரை திரை முழுக்க மனிதர்களை நிரப்பி திணறடிக்கிறார் இயக்குனர் மணிரத்னம். பெரும்பாலான பிரேம்களில் 100, 200 முதல் ஆயிரம் பேர் வரை இடம்பெறுவதாக காட்டப்பட்டிருக்கிறது.
மூலக்கதையில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் இதிலும் வசனம் பேசுவதால் குறைந்தபட்சம் 2 டஜன் பேராவது குளோஸ்அப்பில் முகம் காண்பிக்கின்றனர். அவர்களனைவரையும் மீறி முதலில் நம் மனதைத் தொடுவது வந்தியத்தேவனாக வரும் கார்த்தி.
பார்க்கும் பெண்களிடம் ‘ஜொள்’ விட்டாலும் வீரத்திற்கான காரியங்களில் நாண் பூட்டிய ‘வில்’ போன்று உறுதி காட்டும் பாத்திரம். அவர் பங்குக்கு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம், நந்தினியின் மீதான வெறுப்பே தன் போருக்கு விதை என்று கூறுமிடத்தில் ஜொலிக்கிறார். நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய், பார்த்தவுடன் கொள்ளை கொள்ளும் அழகு என்ற வர்ணனைக்கு ‘ஆமாம்’ சொல்ல வைத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட அவருக்கு இணையான பாத்திரத்தில் த்ரிஷா தோன்றியிருக்கிறார்; நன்றாக நடித்திருக்கிறார். என்னைக் கேட்டால், அவருக்குத்தான் மேக்கப் அதீதம் என்று சொல்வேன்.
பெரிய மற்றும் சின்ன பழுவேட்டரையர்களாக வரும் சரத்குமார் – பார்த்திபன் காம்போ, அப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
சுந்தர சோழராக வரும் பிரகாஷ் ராஜ், மதுராந்தகராக வரும் ரகுமான், ஆழ்வார்க்கடியானாக வரும் ஜெயராம், ஜெயசித்ரா, பாலாஜி சக்திவேல், லால் என்று சீனியர்களின் கூட்டம் இதில் அதிகம்.
இவர்களுக்கு நடுவே வேலார் என்ற பாத்திரத்தில் பிரபுவும் உண்டு. அவருக்கான முக்கியத்துவம் 2ஆம் பாகத்தில் இருக்கக்கூடும்.
ஜெயம் ரவி, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட இளம் தலைமுறை நடிகர்களின் பட்டியல் இதில் அதிகம். இவர்கள் வரும் காட்சிகளுக்கு இளம் தலைமுறை உற்சாகத்தில் கூத்தாடுகிறது.
இப்படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோரும் ரியாஸ் கானும் கூட பாண்டிய நாட்டு வீரர்களாக வந்து போயிருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேருடைய முகங்களும் பார்வையாளர்கள் மனதில் பதியும்படி செய்திருப்பதே மணிரத்னத்தின் பெரிய சாதனை.
அந்த வகையில், திரை முழுக்க மனித தலைகளாக நிரப்பியிருக்கிறார். அது போதாதென்று போர்க்கள காட்சிகளில் சண்டையிடுவோர் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் உண்டு.
திரையில் பிரமாண்டம்!
ஒரு பிரமாண்டமான படம் உருவாக அபாரமான கலை இயக்குனரும் விஎஃப்எக்ஸ் குழுவினரும் தேவை. அந்த வகையில் மீண்டும் தோட்டா தரணியின் வருகை நம்மை அசத்தியிருக்கிறது.
ஒவ்வொரு பிரேமிலும் சில பொருட்கள் பின்னணியில் தெரிய வேண்டுமென்ற மெனக்கெடல் தென்படுகிறது.
பொன்னியின் செல்வன் தொடராக வந்தபோதிருந்த ஓவியங்கள் அதற்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றன.
கப்பலின் கீழ்பகுதி திறக்கப்பட்டு, அதிலிருந்து குதிரைப்படையோடு அருள்மொழி வர்மன் வருவதும் அத்தகைய காட்சிகளில் ஒன்று.
ஏகா லகானி தலைமையில் ஆடை வடிவமைப்புக் குழுவும் அபாரமாக உழைத்திருக்கிறது.
போலவே, குளோஸ்அப்பாக இருந்தாலும் பின்னணியில் ஐம்பது நூறு பேர் இருப்பது போன்றே பிரேம்களை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். பெரும் நிலப்பரப்பை காட்டும் காட்சிகளில் பிரமாண்ட நீர்ப்பரப்பைப் பார்த்த உணர்வை உருவாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பில் பாடல்களுக்கு ரசிகர்கள் கும்மாளமிடுகின்றனர்.
பின்னணி இசை மட்டும் ஆங்காங்கே பழைய இந்திப் படங்களையும் சில நேரங்களில் சீரியல்களையும் ஆங்கிலப் படங்கள் சிலவற்றையும் பார்த்த உணர்வை ஊட்டுகின்றன.
முன்பாதியில் இருக்கும் இக்குறை பின்பாதியில் முற்றிலுமாக மறக்கும் அளவுக்கு உழைத்திருக்கிறது ரஹ்மானின் குழு. இடைவேளைக்கு முன்னதாகவே ஐந்து பாடல்கள் வந்துவிடுகின்றன என்பதையும் இவ்விடத்தில் சொல்லியாக வேண்டும்.
‘பாகுபலி’ பார்த்தபிறகு விஎஃப்எக்ஸ் உதவியோடு பிரமாண்டமான அரண்மனைகளையும் போர்க்களங்களையும் மேற்கத்திய படங்களுக்கு நிகராக உருவாக்க முடியும் என்பது நிரூபணமாகிவிட்டது.
அதையும் மீறி, பண்டைய சோழ நாட்டு ஆற்றங்கரைகளையும் பெரும் படகுகளையும் பார்த்தவுடன் மெய் மறக்கச் செய்திருக்கிறது அக்குழுவினரின் உழைப்பு.
யானையை கோணிப்பைக்குள் திணித்தது போல, கட்டுக்கடங்காமல் சொல்லும் கதையமைப்பை திரைக்கதை ஆக்கியிருக்கிறது ஜெயமோகன், குமரவேல், மணிரத்னம் கூட்டணி.
அதற்கேற்றவாறு திரையிலும் பிரேம்களை நடிப்புக் கலைஞர்களின் உழைப்புக்கு மதிப்பளித்து செதுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத்.
பார்க்கலாமா?
ராஜ நீதியைச் சொல்லும் திரைப்படம் என்றாலும், பெரிதாக வன்முறைக் காட்சிகள் இல்லை. அதனால், குழந்தைகளோடு இதனைப் பார்க்கலாம். அவர்களுக்கேற்றவாறு சண்டைக்காட்சிகள் இதில் உண்டு.
விபூதியைப் பூசியவர்களும் நாமம் இடப்பட்டவர்களும் காட்டப்பட்ட விதத்தில் சில முரண்கள் முளைக்கலாம்.
ஏன், புத்த விகாரம் சென்று இலங்கையின் புத்த மத குருவை அருள்மொழி வர்மன் சந்தித்து சிங்களத்திலும் தமிழிலும் உரையாடுவதாகவும் சில இடங்கள் உண்டு. அவை சர்ச்சையை எழுப்பலாம்.
அவற்றை ஒரு புனைவாக கருதி கடந்து செல்வதே இக்கதைக்கு நல்லதாக இருக்க முடியும்.
நல்லவன், கெட்டவன் என்ற இரு வரையறையைத் தாண்டி, இரண்டும் கலந்த மனிதர்களை இத்திரைக்கதையில் பார்க்க இயலவில்லை.
அந்த எல்லைக்குள் புகுந்தால் ‘மிகை’ என்றிடுவார்களோ என்ற தயக்கம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
குறிப்பாக, பாத்திரங்களின் மன உணர்வுகள், போராட்டங்கள், அதன் உள்ளடுக்குகள் திரையில் பெரிதாக காட்டப்படவில்லை.
எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று இருக்கும்போது, அதனை நாம் ஏன் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவானேன் என்று இயக்குனர் மணிரத்னம் தவிர்த்திருக்கலாம்.
அதேநேரத்தில், ஒரு சரித்திர புதினத்தில் இருக்கும் அதே விறுவிறுப்பைக் காட்சியமைப்பிலும் தர முயற்சித்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.
இன்றைய தலைமுறைக்கு ‘பொன்னியின் செல்வன்’ படிக்கும் பொறுமையும் திறனும் உண்டா என்று தெரியாது. ஆனால், அவர்களுக்கு அப்படியொரு வாய்ப்பை தந்திருக்கிறது இத்திரைப்படம்.
அதற்காக கொட்டப்பட்டிருக்கும் உழைப்புக்காகவும் கல்கியின் கனவுகளை நனவாக மாற்றியதற்காகவும் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1ஐ கொண்டாடலாம்!
-உதய் பாடகலிங்கம்