நானே வருவேன் – தனுஷின் தனியாவர்த்தனம்!

அதிக பொருட்செலவில், கலைஞர்களின் அதீத உழைப்பில் உருவாகும் மோசமான படங்களைக் காட்டிலும், சின்ன பட்ஜெட்டில் எளிமையாக ஆக்கப்படும் படங்கள் சட்டென்று அனைவரையும் திருப்திப்படுத்தும்.

அதில், தனுஷ் போன்ற சிறந்த நடிகர் இடம்பெறும்போது அப்படிப்பட்ட கதைகள் பல உயிர் பெறும் வாய்ப்பு பலப்படும்.

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ரம், பிரபு, யோகிபாபு உள்ளிட்ட ஒரு டஜன் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ படம் மேற்குறிப்பிட்ட திருப்தியை அளிக்க முயற்சித்திருக்கிறது. அது எந்த அளவுக்கு நிகழ்ந்திருக்கிறது?

நூலிழை போன்ற கதை!

பிரபு, கதிர் என்று இரட்டைச் சகோதரர்கள். பிரபு சாதாரணமாக இருக்க, கதிர் மட்டும் குரூரத்தோடும் வன்முறை மனோபாவத்தோடும் வளர்கிறார்.

அதைக் கண்டிக்கும் தந்தையை (சரவண சுப்பையா) கொலை செய்கிறார் கதி. அது திருட்டுக்காக நடந்தது என்று திசை திருப்புகிறார் தாய்.

எதிர்காலத்தில் கதிரால் பிரபுவுக்கு ஆபத்து வரும் என்று ஒரு ஜோதிடர் சொல்ல, அவரை வலிய தொலைத்துவிட்டு இருவரும் வேறிடம் செல்கின்றனர்.

இருபதாண்டுகள் கழித்து ஒரு பெருநகரத்தில் மனைவி புவனா (இந்துஜா), மகள் சத்யா (ஹியா டேவி) உடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார் பிரபு.

ஒருமுறை வட இந்தியாவுக்கு மூவரும் சுற்றுலா செல்கின்றனர். அப்போது, ஏரிக்கரை ஒன்றில் சத்யா மயக்கமடைகிறார்.

ஊர் திரும்பியபிறகு, வழக்கமான இயல்பை தொலைத்து ரொம்பவும் அமைதியாக இருக்கிறார். ஒருநாள் நள்ளிரவில் சத்யா தனக்குத்தானே பேசிக்கொள்வதை கேட்கிறார் பிரபு.

அது தொடர்கதையாகும்போது, சத்யாவை ஒரு சைக்கியாட்ரிஸ்டிடம் (பிரபு) அழைத்துச் செல்கிறார். அப்போதும் தீர்வு ஏதும் கிடைப்பதாக இல்லை.

ஆனால், தன் கண்ணுக்கு சோனு எனும் சிறுவன் தெரிவதாகவும் அவன் தந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் சொல்கிறார். சத்யாவிடம் பேசுவது பேய் என்று முடிவு செய்ததுமே, அதனைக் கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார் பிரபு.

அதற்குள் சத்யாவின் உடலில் புகுந்துகொள்ளும் அந்த பேய், பிரபுவின் சகோதரர் கதிரைக் கொல்ல வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறது. அப்படிச் செய்தால் மட்டுமே சத்யாவின் உடலில் இருந்து விலகுவேன் என்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன கதிருக்கும் அந்த பேய்க்கும் என்ன சம்பந்தம்? திடீரென்று அந்த பேய் பிரபுவின் மகளைத் தேடி வர காரணம் என்ன? கதிர் எங்கிருக்கிறார் என்பதாக விரிகிறது இரண்டாம் பாதி.

இது மிகவும் எளிமையான திரைக்கதையைக் கொண்ட ஒரு சாதாரண திரைப்படம். தனுஷின் இருப்பு மட்டுமே ஒவ்வொரு பிரேமையும் பிரமாண்டமாக உணரச் செய்கிறது என்பதே உண்மை.

அதனாலேயே, பெரிதாக விளம்பரங்கள், விழாக்கள், பேட்டிகள் ஏதும் வெளியிடாமல் நேரடியாக ரசிகர்களைச் சென்றடையும் முடிவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. அதற்கு திரையரங்கில் தக்க பலனும் கிடைத்திருக்கிறது.

தனுஷ்.. தனுஷ் மட்டுமே!

பதின் பருவத்தில் தவழும் மகளின் தந்தையாக பாந்தமாக வந்து போயிருக்கிறார் தனுஷ். அமைதியே இயல்பாகக் கொண்ட ஒருவன் இப்படித்தான் இருப்பான் என்கிற எண்ணத்தை ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தியிருக்கிறார்.

அதற்கு நேரெதிரான இன்னொரு பாத்திரத்தை சிறப்பிக்க, சிறிதாக புருவத்தை உயர்த்தினால் கூட போதும்.

அதனைப் புரிந்துகொண்டு தனித்துவமான சிரிப்பு, பார்வை, பேச்சு என்று கதிர் பாத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பது நிச்சயம் மிகையாகத் தெரியவில்லை. இதுவே படம் முழுக்க தனுஷ் மட்டுமே என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

தன்னை மீறி தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பைக் கொண்டு வருத்தப்படும் தாயாக வந்து போயிருக்கிறார் இந்துஜா.

இன்னொரு நாயகியாக வரும் எல்லி அவ்ரமுக்கு வசனம் பேசும் வாய்ப்பு தரப்படவில்லை. அவரது நடிப்பு மட்டுமே படத்தில் கொஞ்சம் மிகையாகத் தோன்றுகிறது.

தனுஷின் பெற்றோராக சரவண சுப்பையா, ஷெல்லி கிஷோர் நடித்திருக்கின்றனர். குணசித்திர பாத்திரம் என்றபோதிலும், தன்னை மீறி இரண்டொரு ‘கவுண்டர்’களை உதிர்த்திருக்கிறார் யோகிபாபு.

தனது அனுபவத்தைக் கொண்டு சர்வசாதாரணமாக நடித்துவிடும் பாத்திரமே பிரபுவுக்கு இதில் வாய்த்திருக்கிறது.

இது போக இரண்டு இரட்டையர் சிறுவர்கள், பேய் குறித்து ஆராய்ச்சி செய்யும் இளம் இளைஞர் கூட்டம் என்று அரை டஜன் பாத்திரங்கள் வருகின்றன. செல்வராகவனும் கூட ஒரு காட்சியில் தலைகாட்டியிருக்கிறார்.

இவர்கள் அனைவரையும் தாண்டி மனதில் நிற்பது சத்யாவாக நடித்திருக்கும் ஹியா டேவி. அவரது நடிப்பைப் பார்க்கையில், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான பாத்திரங்கள் அவருக்கு கிடைக்குமென்ற எண்ணம் பிறக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு டஜன் பாத்திரங்கள் கொண்ட கதை. அதனை மனதில் கொண்டு பாத்திரங்களின் பின்னணிக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு.

இரண்டாம் பாதியில் வரும் மலைப்பிரதேசத்தை மனதில் கொண்டு, அதற்கேற்ற மனநிலையை பார்வையாளர்களிடம் உருவாக்கும் வகையில் முதல் பாதியில் இடம்பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு காட்சிகளில் பாதி இருளை நிரப்பியிருப்பது அருமை.

வழக்கமாக, இயக்குனர் செல்வராகவன் படங்களில் காட்சிகளுக்குத் தக்கபடி ஒளியமைப்பும் வண்ணமும் அமைக்கப்பட்டிருக்கும். இதில், படம் முழுக்க சாம்பலும் நீலமும் வெளிப்படும் வகையிலான ஒளியமைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஒளிப்பதிவுக்கு ஏற்ற வகையில் பிரேமை அழகாக்க உதவியிருக்கிறது ஆர்.கே.விஜய்முருகனின் கலை வடிவமைப்பு.

மலைப்பிரதேசத்தில் அமைந்த வீட்டின் வெளிப்புறமும் சரி, உட்புறமும் சரி, பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு இணையாக, அடுக்குமாடி குடியிருப்பு காட்சிகளில் பெரிதாக கலைப்பொருட்கள் ஏதும் இல்லாமல் ‘மினிமலிச’ பாணியில் அமைந்திருப்பது பாத்திரங்களின் மீதும் காட்சியின் தன்மை மீதும் கவனம் கொள்ள வகை செய்திருக்கிறது.

நேர்கோடாக பயணிக்கும் கதையைச் சரியாக பார்வையாளர்களுக்கு கடத்த உதவுகிறது புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு.

செல்வராகவனைக் காப்பாற்றிய யுவன்!

பல்வேறு பாத்திரங்கள், அவற்றின் மன அடுக்குகள், வசனங்களில் வெளிப்படாத மெல்லிய உணர்வுகள், மனிதனின் குரூரங்கள் கோபங்கள் போன்றவற்றை பிரமாண்டமான செட்டப்பில் காட்டியவர் இயக்குனர் செல்வராகவன்.

இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை போன்றவற்றில் அதுவே ‘ஓவர்டோஸ்’ ஆக இருந்தது.

பேய்ப்படம் என்பதைத் தாண்டி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் ஈர்க்கும் விஷயங்கள் எதுவுமில்லை. இத்தனைக்கும் அதில் யுவன் இசை அபாரமானதாக இருந்தது.

பாடல்களுக்கான சூழல் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அடிப்படைக் கதை மிகச்சாதாரணமாக இருந்தது; காட்சியமைப்பு சாதாரண பார்வையாளர்களை நிலைகுலைய வைக்கும் வகையில் இருந்தது.

அந்த குறைகளை அறவே இல்லாமல் செய்து, ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளரின் துணையுடன் குடும்பத்தோடு காணும் வகையிலான ஒரு பேய்ப்படம் தந்திருக்கிறார் செல்வராகவன்.

இதில் இரண்டாம் பாதி மிகச்சாதாரணமாக இருக்கிறது என்பதே மிகப்பெரிய குறை.

அதைத் தாண்டி தனுஷ், யுவன், செல்வராகவன் காம்பினேஷனில் ஒரு நல்ல படம் பார்க்க நினைப்பவர்களுக்கு ‘ஓகே’ எனும் வகையில் இருக்கிறது ‘நானே வருவேன்’. செல்வராகவன் கம்பேக்’ ரொம்பவும் நேர்த்தியாக நிகழ்ந்திருக்கிறது.

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment