இணைய தளத்தில் அதிகரிக்கும் ஆபத்துகள்!

அதிர வைக்கும் ‘பிக்பாஸ்’ சமூகம்!

“இணையத்தில் குற்றம் இழைப்பவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.

ஸ்மார்ட் போன்களை விட்டொழித்து சாதாரண போன்களைப் பயன்படுத்துவது பற்றி நான் தீவிரமாக யோசித்து வருகிறேன்”-

இப்படிச் சொன்னவர் உச்சநீதிமன்ற நீதிபதியான தீபக் குப்தா.

“இது சரியான முடிவு” என்று மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் சொல்ல, மற்ற சிலரும் உச்சநீதிமன்றத்தில் அதை ஆமோதித்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க என்ன வழிகள் என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முகநூலுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரி நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதிகள் தெரிவித்திருப்பது நடப்பு யதார்த்தத்தை வெளிக்காட்டியிருக்கிறது.

“சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறிவருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணையத்தில் நடைபெறும் குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், தடுத்து நிறுத்தவும் நம்மிடம் தொழில்நுட்ப வசதி இல்லை என்று நாம் கூற முடியாது.

இந்தக் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களிடம் அதற்கான தொழில்நுட்பம் இருக்கும்போது, அந்தக் குற்றங்களைக் கண்டறியவும், குற்றம் இழைப்பவர்களைக் கண்டறியவும் தேவையான தொழில்நுட்பம் நம்மிடமும் உள்ளது.

அரசிடம் இது தொடர்பான தீர்வு இருந்தாலும், இந்தக் குற்றத்திற்கு இரையாகும் தனிமனிதனுக்குக் கிடைக்கும் தீர்வு என்ன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

இணையத்தில் பெரிதாகக் கையாளப்பட்டுவரும் பேஸ்புக், வாட்ஸ்அப் செயலிகளில் அந்தரங்கத் தன்மையைப் பாதுகாக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் சார்பாகச் சொல்லப்பட்டிருந்தாலும், இந்தச் சமயத்தில் இயல்பாகப் பல கேள்விகள் எழுகின்றன.

பேஸ்புக்கும், வாட்ஸ்அப்பும், டுவிட்டரும், டிக்டாக்-கும் பலரைத் தொழில்நுட்ப ரீதியாக அடிமைப்படுத்தியதைப் போல வைத்திருக்கின்றன.

பலருடைய வேலை நேரம், வாசிக்கும் நேரம், மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கும் நேரத்தைக் கூட இந்தத் தொழில்நுட்ப வசதிகள் அபகரித்து அவர்களைத் தன்வசப்படுத்தியிருக்கின்றன.

முன்பு கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளின் கைகளை வாயிலிருந்து அப்புறப்படுத்தினால் வீறிட்டுக் கத்தும். அதே மாதிரி செல்போன்களுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் நம்மில் பலர்.

எழுபது வயதைத் தாண்டிய மிகவும் புத்திசாலித்தனமான ஒருவர் எந்நேரமும் செல்போனிலேயே அடிமையாகிக் கிடந்த நிலையில், போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பது மாதிரி, செல்போனிலிருந்து அவரை மீட்டு இயல்பு நிலைக்குக் கொண்டுவர அந்த மருத்துவமனைக்கு மூன்று மாத காலம் பிடித்திருக்கிறது.

வயதானவர்களுக்கே இந்த நிலை என்றால்? இளைஞர்கள்? மாணவர்கள்? குழந்தைகள்?

அந்தந்தப் பருவத்தினரின் ருசிக்கேற்றபடி எல்லாமே வசீகரமான ஈர்ப்புடன் இதில் பரிமாறப்படும்போது, குழந்தைகளிலிருந்து பலரும் கேம்ஸ் முதல் பாலியல் சார்ந்த காட்சிகள், திரைப்படங்கள், ஆபாசமான ஆட்டங்கள், பாடல்கள், செய்திகள், சமையல், பக்தி என்று எல்லாமே செல்போன்கள் மீது கவனம் குவிக்க வைத்து விடுகின்றன.

கல்லூரிகளிலும், பள்ளிகளிலுமே செல்போன்களுக்குத் தடை இருந்தாலும், அதையும் மீறிச் சாகச உணர்வுடனோ, அடிமை மனநிலையிலோ கொண்டு செல்கிறார்கள்.

சாலைகளில் செல்லும்போது செல்போனில் பேச்சுகள் தொடர்கின்றன. திரையரங்குகள், ஹோட்டல்கள், சுற்றுலாத் தளங்களில் உள்ள ஆபத்தான மலை விளிம்புகள், பாலங்களில் கூட செல்ஃபி எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றைப் போல ஆகியிருக்கிறது.

இப்படியெல்லாம் தொழில்நுட்ப அடிமைகளைப் போல மக்கள் கிடப்பது இருந்தாலும், இதற்கிடையில் பல உளவு அமைப்புகள் அதே தொழில்நுட்ப வசதி மூலம் கண்காணிக்கின்றன.

சாலைகளில் சி.சி.டி.வி கண்காணிக்கிறது என்றால் வீடுகளில் ஏன், படுக்கையறைகளில் கூட செல்போன்கள் மூலம் கண்காணிப்பு தொடர்கிறது.

“பிரைவஸி” என்பதே கிடையாது என்பது தான் இந்தக் கண்காணிப்பின் அழுத்தம். சுற்றிலும் காமிராக்கள் நிறைந்திருக்கிற ‘பிக் பாஸ்’ வீட்டில் வாழ்கிற உணர்வைச் சுற்றியுள்ள சமூகமும், அரசியலும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் செல்போனில் பேசுவது பதிவு செய்யப்படுவது இப்போது வழக்கமாகிவிட்டாலும்,

அவர்களுடைய செல்போன்களை ரிசீவரைப் போல இயக்கி அவர்கள் இருக்கும் இடத்தில் நிகழ்கிற அந்தரங்கத்தைக் கூட, சில நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கிறோம் என்கிற உரிமையில் மோப்பம் பிடிப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன.

அதற்கான சீன உளவுக் கருவிகளை உளவு அமைப்புகள் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன.

அவர்களுடைய கார்ப்பரேட் தியரிப்படி தங்கள் ஊழியர்களுக்கு அந்தரங்கம் என்பதே இல்லை; அனைத்தும் கண்காணிப்புக்கு உட்பட்டதே என்பது தான். இதை இங்கு உழைப்பாளர்களுக்கான எந்தச் சட்டவிதிகளும் பாதுகாப்பதில்லை.

இந்த நிலையில் கேஷ்லெஸ் டிரான்சாக்சன் என்கிற பணமில்லாப் பரிவர்த்தனையை அரசு ஊக்கப்படுத்தினாலும், ஏ.டி.எம்.மில் கார்டுகளைப் பயன்படுத்துகிறவர்களின் பணம் பறிபோவது குறித்த புகார்கள் வங்கிகளுக்கு அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

தொழில்நுட்பத் திறமை கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்க, சைபர் கிரைமில் புகார் கொடுப்பவர்களும் அதிகரித்திருக்கிறார்கள்.

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பயன்படுத்துகிறவர்களும், மிரட்டிப் பெண்களைப் படம் எடுப்பவர்களும், பழகி ஆசை காட்டி எடுப்பவர்களும் அந்த ஆபாசங்களை இணையம் வழியே பரப்பும்போது சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் நடந்து கொண்டிருக்கிறது.

பல குடும்பங்கள் இதனால் மனக்கலவரம் அடைந்து மனநோயாளிகள் அதிகரித்திருக்கிறார்கள்.

வக்கிரமும், வன்மமும், தொழில்நுட்பத் திறமையும் கொண்ட யாரும் எவரையும் எந்த அபாயமான இணைய வளையத்திற்குள் சிக்க வைத்துவிட முடியும்.

அரசியல் ரீதியாகவும், மத, சாதி ரீதியாகவும் இருக்கிற ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

சமூகத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் ஒரு பெண்ணைப் பற்றி ஆபாசமான, கொச்சையான செய்தியை உண்மையைப் போலப் பகிர்ந்து கொள்ள முடியும்.

மின்சாரத்தின் மூலம் வெளிச்சம் பெறலாம். எத்தனையோ பயனுள்ள சதிகளைப் பெற முடியும். ஆனால் அதே மின்சாரத்தின் மூலம் மின் அதிர்ச்சி கொடுத்து உயிரையும் போக்கவும் முடியும்.

அந்த இரண்டாவது இலக்கை நோக்கி அபாயகரமான தொற்றுநோயைப் போலப் பரவிக்கொண்டிருக்கின்றன இணையதள வக்கிரங்கள். இதற்கு எந்தெந்த உயிர்களோ தொடர்ந்து இரையாகிக் கொண்டிருக்கின்றன.

இன்னும் காடுகளுக்குள் தொழில்நுட்ப வசதிகள் சென்றடையாமல் வாழ்கிற மலைவாழ் மக்களைப் பற்றி நாகரிகச் சமூகமாகச் சொல்லிக் கொள்கிற நமக்கு இருக்கிற மதிப்பீடுகள் என்ன?

மின்வசதி, தொலைக்காட்சி, செல்போன், ஆடம்பர வசதிகள் இல்லாமல் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று அபத்தமாக நினைக்கலாம்.

அந்த வசதிகள் எதுவுமே இல்லாமல் காட்டுக்கிடையில் ஆதிமனிதர்கள் வாழ்கிறார்கள் வாழ்வின் உயிர்ப்போடு.

நாம் தொழில்நுட்பக் கருவிகள் சூழ நவீன வசதியுடன் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்-வாழ்வுக்கான உயிர்ப்பை இழந்து வருவதை உணராமல்!

மீள்பதிவு

– மணா

Comments (0)
Add Comment