‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப் படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்துவருகிறது.
அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’. சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநர் ஜெயதீர்த்தா இயக்கியுள்ள படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாகிறார். ஜோடியாக சோனல் மாண்டீரோ.
பிரம்மாண்ட ட்ரெயிலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், நாயகன் ஜையித் கான், நாயகி சோனல் மாண்டீரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘பனாரஸ்’ படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுப் பேசிய நடிகர் ரவிச்சந்திரன், “சமீப காலமாக கன்னட சினிமா இந்திய அளவிலும் உலகநாடுகளிலும் வெற்றிபெற்றுவருவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
அந்த வரிசையில் இந்த பனாரஸ் படமும் மாபெரும் வெற்றிபெறும் என்பது ட்ரெயிலரைப் பார்த்தாலே தெரிகிறது” என்றார்.
நாயகி சோனல் மாண்டீரோ, “இதற்கு முன் சுமார் 10 படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும் இது என் வாழ்வின் முக்கியமான படம்.
இவ்வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு என் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன்.
விளம்பர டிசைன்களில் நாயகன் பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது முதல் படம் என்பதால் அவரை சற்று கூடுதலாக புரமோட் செய்வதில் தவறில்லை” என்றார்.
இயக்குநர் ஜெயதீர்த்தா, ”இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்துள்ளேன். ‘பனாரஸ்’ படமும் அப்படிப்பட்ட முற்றிலும் ஒரு ஜானர் வகையறா படம்தான்.
இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளிவந்துள்ளோம். இதுவொரு யுனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்’ என்றார்.
அடுத்து பேசிய பனாரஸ் நாயன் ஜையத் கான், ”நான் அரசியல் குடும்பத்துப் பிள்ளை என்பதால் சினிமா துறைக்கு வருவதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது.
குறிப்பாக அப்பா நான் சினிமாவுக்குள் வருவதை கடுமையாக எதிர்த்தார். அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து கன்வின்ஸ் செய்து இங்கு வந்துசேர்ந்திருக்கிறேன்.
இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு மேல் தூங்கியதே இல்லை.
முதலில் இப்படத்தின் சில காட்சிகளை மட்டும் காசியில் ஷூட் செய்துவிட்டு மீதியை மற்ற லொகேஷன்களில் மேட்ச் செய்துகொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தோம்.
ஆனால் காசியில் விநோதமான சில இடங்களால் ஈர்க்கப்பட்டு மொத்தப்படத்தையும் இங்கேயே முடித்திருக்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் இந்த ‘பனாரஸ்’ படம் என்பது காசியின் புனிதம் கலந்த காதல் கதை” என்றார்.
நவம்பர் 4-ம் தேதியன்று கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘பனாரஸ்’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது