திறமையை வாழும் காலத்தில் உணர மாட்டோமா?

ஊர் சுற்றிக் குறிப்புக்கள்:
*
“உன் அருமை தெரிந்த நாள்”

இப்படியொரு வரியை பிரபலமான ஒருவரின் நினைவஞ்சலிக் குறிப்பில் பார்க்க முடிந்தது அண்மையில்.

வியப்பு தான்.

வாழும்போது சுற்றியுள்ளவர்களும், சமூகமும் உணராத அல்லது உணரத் தெரியாத அருமை ஒருவர் மறைந்த பிறகே தெரிய வருகிறது.

அஞ்சலிக் கூட்டப் பேச்சுகளிலும், உருக்கமான குறிப்புகளிலும் காட்டுகிற அக்கறையில் கொஞ்சமாவது அவர்கள் சம காலத்தில் – நமக்கு முன்னால் வாழும்போது நாம் காட்டியிருக்கிறோமா?

நம் மனசாட்சியின் முன்னால் விழிப்போடு கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது.

ஆனால் மகாகவி பாரதி காலத்திலிருந்து இந்தக் கேள்வி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது.

மறைந்து நூற்றாண்டுகள் கழித்து ஒரு கவிஞனைக் கொண்டாடுகிற சமூகம் அவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் முடிந்தவரைக்கும் புறக்கணித்திருக்கிறது. தள்ளி வைத்திருக்கிறது.

காலத்தில் தப்பி வந்த பிறவியாக ஏளனம் செய்திருக்கிறது.

வாழத்தெரியாதவனாகக் கேலி செய்திருக்கிறது. உப்புக்கும், புளிக்கும் தவிக்க விட்டுப் பிறரிடம் கையேந்த வைத்திருக்கிறது.

மனதில் அக்கினிக்குஞ்சு இருந்தாலும், தனக்கும் தன் குடும்பதாருக்குமான வயிற்றுக்காக எட்டயபுரம் ஜமீனிடம் தன்னிலையை விளக்கி விண்ணப்பிக்க வேண்டியிருந்திருக்கிறது.

பாரதியின் மறைவின் போது விரல்விட்டு எண்ணத்தக்கச் சிலர் மட்டும் சென்றதாகச் சொல்லப்பட்டு வருவது, அப்போது மட்டும் நடந்தது இல்லை.

‘எழுத்து’ என்கிற சிற்றிலக்கிய வரலாற்றில் முக்கியமான பத்திரிகையை நடத்திய மூத்த எழுத்தாளரான சி.சு.செல்லப்பாவை வாழும் காலத்தில் எப்படி நடத்தியிருக்கிறோம்?

பெரிய கனத்த பையில் ‘எழுத்து’ப் பிரசுரம் வெளியிட்ட புத்தகங்களை மெலிவான உடம்போடு தூக்கிக் கொண்டு, எத்தனை பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அவர் ஏறி இறங்கியிருக்கிறார்?

கடைசி வரை எந்த விருதுக்கும், மிகையான பாராட்டுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாத எளிய மனதோடு தான் – இன்றைய பார்வையில் வாழ்வதற்கான தந்திர உபாயங்கள் தெரியாத மனிதராகத் தான் அவர் இருந்தார்.

திரு.சின்னக் குத்தூசியும் நானும் திருவல்லிக்கேணியில் இருக்கிற செல்லப்பாவின் வீட்டுக்குச் சென்ற சமயங்களில் தான் எழுதிய எழுத்தைப் பற்றிய பெருமிதம் அவருடைய பேச்சில் வெளிப்பட்டதில்லை.

அகந்தையும் வெளிச் சிந்தியதில்லை. இறுதிக்காலத்தில் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் தான் எழுதி வைத்திருந்த நாவல் ஒன்றை அச்சடிக்க உதவும் நோக்கில் ‘விளக்கு’ விருதைப் பெற்றுக் கொண்டார்.

எழுத்துக்கு நெருக்கமானவராக இருந்தாலும், பொருளாதாரத்தில் மிகவும் விலகிய நபராகவே அவர் இருந்தார்.

தற்போது கொண்டாடப்படும் அவருடைய ‘வாடி வாசல்’ நாவல் அவர் வாழும் காலத்தில் கொண்டாடப்படவில்லை என்பது மட்டுமல்ல, அதன் மீது எந்த வெளிச்சமும் விழவில்லை.

அப்போது அது கவனிக்கப்பட்டு, அவருடைய உழைப்புக்கேற்ற ஊதியம் அன்று கிடைத்திருந்தால், பொருளாதார ரீதியான பிச்சுப் பிடுங்கல்கள் இல்லாமல் கடைசி காலத்திலாவது அவர் மன நிம்மதியை அடைந்திருக்க முடியும்.

அவர் மறைந்தபோது அவருடைய சடலம் மயானத்தில் கிடத்தப்பட்டிருந்தபோது அங்கிருந்தவர்களின் எண்ணிக்கை 12 கூட இல்லை.

அதில் கலந்துகொண்டு அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த வார இதழ் உரிமையாளரிடம் சொன்னபோது, அதை எழுதச் சொல்லி, சிறு கட்டுரையாக அது வெளியானது.

இன்று அவருடைய ‘வாடி வாசல்’ நாவல் மீது விளம்பர வெளிச்சம் விழுந்திருக்கிறது. திரைப்படமாக்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. காலம் வெகுவாகக் கடந்த பிறகே அவருடைய உழைப்பின் சிறு பகுதி மீது கவனம் விழுந்திருக்கிறது.

புதுமைப்பித்தனும் அன்றைய யதார்த்தத்தின் சூட்டை உணர்ந்து பிற்காலத்தில் தன்னுடைய எழுத்துக்கள் கவனிக்கப்படும் என்று எதிர்காலத்தையே நம்பி எழுதியிருக்கிறார்.

அவர் வாழ்ந்த நிகழ்காலம் அந்த அளவுக்கு அவருக்கு ஆசுவாசத்தை அளிக்கவில்லை.

எம்.கே.டி.தியாகராஜ பாகதவரின் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய போது கிடைத்த பணம் கூட, பத்திரிகையாளராக அவர் இயங்கியபோது கிடைத்த வருமானம் கூட, அவருடைய படைப்பு வழியே அவருக்குக் கிடைக்கவில்லை.

வாசிக்கும்போது சற்றே சுட்டாலும் கூட, இது தான் தமிழகத்தில் எழுத்தை நம்பியவர்களின் வாழ்க்கை.
இது தான் அவர்களின் எழுத்து வாழ்வுக்குக் கிடைத்த எதிர்வினை.

ஒருவரை உணர்ந்து கொள்வதை, அங்கீகரிப்பதைக் கூட. அவர் நம்மிடம் இருந்து மறைந்த பிறகு தான் செய்வோம் என்றால், சமகாலத்தில் உணர மாட்டோம் என்றால், நம் பார்வையை என்னவென்று சொல்வது?

கிட்டப் பார்வை இல்லை, காலத்தில் தூரப்பார்வை மட்டுமே நமக்குச் சாத்தியம் என்றா?

கீழடியில் பானைகளில் எழுதியவர்களும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று பரந்த மனதோடு எழுதிய கணியன் பூங்குன்றனும், சிக்கனமான வரிகளைச் சொல்லிச் சென்ற அவ்வையும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய மதிப்பைப் பெற்றிருப்பார்கள்?

நம் வரலாறும் பல சமயங்களில் சுடும்!

* மணா

Comments (0)
Add Comment