செப்டம்பர் 29 – உலக இதய தினம்
இதயம் எவ்வளவு முக்கியம்? இந்த கேள்வியைக் கேட்டால், ’என்ன இது பைத்தியக்காரத்தனம்’ என்று பதில்கள் குவியும்.
உடனே, மனித சமூகம் முழுக்க இதயத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்தது போன்ற தோற்றம் தென்படக்கூடும்.
உண்மையில், நாம் அனைவரும் இதயத்தின் அருமை புரிந்துதான் நடந்து கொள்கிறோமா? இல்லை என்பதே இதற்கான பதிலாக இருக்கும். அறியாமை மட்டுமல்ல, அலட்சியமே பெரும்பாலும் இதற்கான காரணமாக இருக்கும்.
உடலிலுள்ள ரத்தவோட்டச் சுழற்சியை செம்மைப்படுத்துவதில் இதயத்தின் பங்கு அதிகம். அது செயலிழந்தால் உயிரே நின்றுவிடும் என்பது வரைக்கும் தெரிந்திருக்கிறோம்.
ஆனால், அந்த இதயம் நலமாக இருப்பதில் போதிய கவனம் செலுத்துகிறோமா? கண்டிப்பாக இல்லை.
இதயமே.. இதயமே!
மனித உடலின் இயக்கமே ஆச்சர்யங்கள் நிறைந்தது என்று கொண்டால், அதில் உச்சத்தைத் தொடுவது இதயத்தின் செயல்பாடு. கிட்டத்தட்ட முட்டை வடிவம் கொண்ட இதயம், மனிதரின் இடது மார்புப் பகுதியில் நெஞ்செலும்புகளுக்கும் முதுகெலும்புக்கும் இடையே அமைந்திருக்கிறது.
ரத்தவோட்டத்தில் கலந்திருக்கும் கரியமிலவாயு நுரையீரலுக்கு கொண்டு செல்லப்பட்டு வெளியேற்றப்படுவதும், நுரையீரலில் இருந்து பெறப்படும் உயிர்வளி உடல் முழுக்க கொண்டு செல்லப்படுவதற்கும் இதயமே பாலமாக இருக்கிறது.
இச்செயல்பாட்டின்போது இதயம் சுருங்கி வருகிறது. இவ்வாறு, ஒரு நாளுக்கும் லட்சம் தடவைக்கு மேல் செயல்படுகிறது.
அதன் முக்கியமான விளைவுகளில் ஒன்று குறுகிய ஆயுள். மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றாலும் இதயத்தின் செயல்பாடு கடுமையாகப் பாதிக்கப்படும்; உயிரிழப்பு வரை கொண்டு செல்லும்.
அதிகரிக்கும் இதய நோய்கள்!
உலகம் முழுக்க மரணத்தை ஏற்படுத்துவதில் முதல் காரணியாக விளங்குகின்றன இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 18.6 மில்லியன் பேர் இதனால் பலியாகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவியபிறகே, உலகம் முழுக்க சுமார் 520 மில்லியன் மக்கள் கார்டியோ வாஸ்குலர் டிசிஸீஸ் எனும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
வேகம் நிறைந்த தினசரி வாழ்வும், ஆரோக்கியத்தில் கவனமின்மையும், எந்திரத்தனமான சிந்தனையும், உடலுழைப்பு குறைவும் இதயத்தின் செயல்பாட்டை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
மனம் சார்ந்த வெறுமை பூதாகரமாகும்போது, அது உடலை நேரடியாகப் பாதிக்கிறது. மிக முக்கியமாக, இதயம் சார்ந்த செயல்பாடுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இவற்றுடன் நாம் இருக்கும் சூழலும், நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கவழக்கங்களும் கூடுதல் சுமையை ஏற்றுகின்றன.
புகை பிடித்தல், சர்க்கரை குறைபாடு, உடல் பருமன், காற்று மாசுபாடு மற்றும் இதயம் தொடர்பான கார்டியாக் அமிலாய்டோசிஸ் போன்றவை இதய நோய்களுக்கான காரணிகளாக இருக்கின்றன.
மது, புகையிலை மற்றும் இதர போதைப் பொருட்களைக் கைவிடுவதும், சீரான இடைவெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வதும், நிம்மதியான வாழ்க்கை முறையை மேற்கொள்வதும் மட்டுமே இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.
ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்வதும் கூட நலம் பயக்கும்.
இதய தின கொண்டாட்டம்!
இதயத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வதற்கும், அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நோக்கி உந்துவதற்கும் ‘உலக இதய தினம்’ கொண்டாடப்படுகிறது.
உலக இதய கூட்டமைப்பு (World Heart Federation -WHF) மற்றும் உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation -WHO) கூட்டு முயற்சியால், 1999ஆம் ஆண்டு முதன்முதலாக ‘உலக இதய தினம்’ கொண்டாடப்பட்டது.
முதலில், செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப்பட்ட இத்தினம், 2000ஆவது ஆண்டு முதல் செப்டம்பர் 29 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 18.6 மில்லியன் பேர் இதய நோய்களால் மரணமடைவது குறித்தும், அதனைத் தடுத்து தங்களைக் காத்துக்கொள்ளும் வகையில் மனிதர்கள் செயல்படுவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே உலக இதய கூட்டமைப்பின் நோக்கம்.
புகையிலை பயன்பாட்டை தவிர்ப்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைக் கைவிடுவது, உடல் செயல்பாடின்மையை மாற்றிக்கொள்வது போன்றவற்றினால் இதய நோய்களும் ஸ்ட்ரோக்கும் வராமல் உடலைக் காக்க முடியும் என்பதே உலக இதய தினம் கொண்டாடப்படுவதன் பின்னணி.
2021-ம் ஆண்டுக்கான உலக இதய தினத்தின் மையப்பொருளாக ‘இதயத்தைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளுதல்’ (Use Heart to Connect) என்பது அமைக்கப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், அத்தகவல் சென்றடைய முடியாத பகுதியில் இருப்பவர்களுக்கும், வித்தியாசமான மற்றும் புதுமையான வழிகளில் அதனைக் கொண்டு செல்வதே இந்த ஆண்டுக்கான செயல்பாடாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதயத்தைப் பாதுகாக்கத் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. எளிமையான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டாலே, இன்று நாம் சந்திக்கும் பல்வேறு இதய பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
அதையும் மீறி உடலளவில் பிரச்சனைகளை எதிர்கொண்டால், திறமைமிக்க நம் மருத்துவர்கள் அதனைச் சரி செய்துவிடுவார்கள்.
அதனை விடுத்து வீணாகக் கவலை கொள்வது மட்டுமே இதயத்தின் நலத்தைச் சிதைக்கும்.
ஆதலால், இனிமையானதாக நம் வாழ்வை மாற்றிக்கொள்வோம்; என்றும் இதய நலத்துடன் இருப்போம்!
– உதய் பாடகலிங்கம்