பள்ளி நேரங்களில் அதிகப் பேருந்துகளை இயக்கவும்!

– அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் இது குறித்து பேசிய  அமைச்சர் தமிழக அரசின் கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டத்தின் மூலம் 173 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும், இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஓட்டுநர், நடத்துநர்கள் இத்திட்டத்தை மேலும் சிறப்பிக்க மகளிரை அதிக மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும், மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை என்ற நிலை ஏற்படா வண்ணம், பள்ளி கல்வித்துறையிடம் கலந்தாலோசித்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும் நிலை உள்ளதால் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க வேண்டும், பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட வாரியாக பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுடன் வாட்ஸ் ஆப்பில் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Comments (0)
Add Comment