எலிசபெத் மறைவும் அதன் பிறகான அரசியல் சூழலும்!

-வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகின் பெரும்பகுதி நாடுகளை தன் காலனி ஆதிக்கத்தின் பிடியில் ஒரு காலத்தில் வைத்திருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஸ்காட்லாந்த், வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் தீவுகளைக் கொண்ட ஐக்கிய பிரிட்டானியமாக ஆகிவிட்டது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இரண்டாம் எலிசபெத் கடந்த 8 – ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் காலமானார். அவருடைய உடல் எடின் பார்க், பின் லண்டன் வந்தது. கடந்த 19 – ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இங்கிலாந்தின் ராணியாக 1952 – ஆம் ஆண்டு பிப்ரவரி 6 – ஆம் தேதி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி தனது 26 வயதில் முடிசூட்டப்பட்டார்.

அன்று அவர் தனது கணவருடன் பிலிப் மௌண்ட்பேட்டனுடன் ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் இறந்த செய்தி கேட்டு அவசரமாக பிரிட்டனுக்குத் திரும்பி வந்தார்.

அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த எவருக்குமே பணியாத சர்ச்சில், முடிசூடாத எலிசபெத்தை வரவேற்க விமானநிலையத்தில் காத்திருந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அன்று இருந்தது.

அப்போது சர்ச்சில், ‘பாவம்! ஒன்றும் அறியாத பெண்’ எனக் கூறினார். அவரை ஆறுதல்படுத்தவே நேராக விமானநிலையத்துக்கு சர்ச்சில் வந்திருந்தார்.

இங்கிலாந்தின் ராணியாக பொறுப்பேற்ற காலத்தில் இருந்து அவரின் மரணம் வரை பிரிட்டனில் சர்ச்சில், ஹெரால்ட் வில்சன், மார்கரெட் தாட்சர், டோனி ப்ளெயர், டேவிட் கேம்ரான், போரிஸ் ஜான்சன் உள்பட பல குறிப்பிடத்தக்க பிரதமர்கள் இருந்திருக்கின்றனர்.

கடைசியாகப் பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் ட்ரஸ்-ஐச் சேர்த்தால் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் காலத்தில் 15 பிரதமர்கள் வந்து சென்றுவிட்டனர்.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழைக்கும்போது மாட்சிமை தாங்கிய என்ற அடைமொழியுடன்தான் சேர்த்து அழைக்க வேண்டும். இரண்டாம் எலிசபெத்தை மாட்சிமை தாங்கிய மகாராணி (HER MAJESTY, THE QUEEN HER) என்று அழைத்தார்கள்.

அவருடைய பெயர் தாங்கி நிற்கும் அரசாங்கத்தை மகாராணியின் அரசாங்கம் (HER MAJESTY’S GOVERNMENT) என்றுதான் அழைத்தார்கள்.

ரூபாய் நோட்டுகளில் அவர் படம் இடம் பெற்றிருக்கிறது. தபால்தலை, அஞ்சல் அட்டைகளிலும் அவர் படம் இடம் பெற்றிருக்கிறது. பிரிட்டிஷ் பாஸ்போர்ட்களில் அவருடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது.

பிரதமரை மகாராணிதான் நியமிக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மகாராணிதான் தொடங்கி வைக்க வேண்டும்.

பிரதமர் ராஜினாமா செய்தால் ராஜினாமா கடிதத்தை மகாராணியிடம்தான் வழங்க வேண்டும்.

இவையெல்லாம் பிரிட்டனில் உள்ள நடைமுறைகள்.

பிரதமர்கள் வாரம் ஒருமுறை மகாராணியை அவருடைய மாளிகைக்குச் சென்று சந்திக்க வேண்டும் என்பது பிரிட்டனில் உள்ள நடைமுறை.

பிரதமர்கள் குனிந்து சற்று மண்டியிட்டது போல மகாராணிக்கு வணக்கம் செய்வது மரபாக இருந்தது.

எலிசபெத் ராணியை மதிக்காத பிரதமர்களாகக் கருதப்பட்ட ஹெரால்ட் ராபின்சன், மார்கரெட் தாட்சர், டோனி பிளேயர் ஆகிய பிரதமர்கள் வேறு வழியின்றி எலிசபெத் ராணியை ஒவ்வொரு வாரமும் சந்தித்தார்கள்.

பிளேயர் எலிசபெத் ராணியின் இரங்கல் கூட்டத்தில் முக்கிய பிரமுகராவும் காணப்பட்டார்.

ஒவ்வொரு வாரமும் பிரதமர் மகாராணியைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், மகாராணி பிரதமருக்கு எந்த ஆணையும் இட முடியாது. அரசாங்க நடவடிக்கைகளில் தலையிட முடியாது.

அரசாங்கத்தின் எந்தச் செயலிலும் ராணி குறுக்கிட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தன் பணியை தானே செய்து கொள்ளும்.

இரண்டாம் எலிசபெத்துக்கு பல்வேறு சமுதாய அரசியல் கருத்துகளும் இருக்கவே செய்தன.

வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்த் ஆகியவற்றின் மக்கள் பிரிட்டனின் ஒருங்கிணைந்த முடியரசிலிருந்து பிரிந்து போவதற்கு போராடத் தொடங்கியபோது அதற்காக வேதனைப்பட்டார்.

பிரிட்டனை விட்டு பிரிந்து போக வேண்டுமா என்பதற்கான பொதுவாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் நடந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதை இரண்டாம் எலிசபெத் முழுமையாக ஆதரித்தார். 2016 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23- ஆம் தேதி 71.8% பேர் கலந்து கொண்ட அந்த வாக்கெடுப்பில் 51.9% மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதற்காக வாக்களித்தனர்.

அந்த நேரத்தில் பெரும்பான்மையான மக்களின் கருத்தே மகாராணியின் கருத்தாக இருந்தது.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசர்களின் உருவச் சித்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். சாலைகளில் ஓடும் டாக்ஸிகள் பழைய வடிவமைப்பைக் கொண்டவையாக இருக்கும். பிளாஸ்டிக் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடி போத்தல்களே இருக்கும்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பாதுகாத்து வளர்த்ததில் அரச குடும்பத்தினரின் பங்களிப்பு அதிகம்.

அதேபோன்று ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற பழைய பல்கலைக்கழகங்களை இரு கண்களைப் போல மதித்து பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்கள்.

பழைமையைப் பேணுவதில் இங்கிலாந்து மக்களும் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள்.

அதனால்தான் இரண்டாம் எலிசபெத்தின் 40 கி.மீ. தொலைவுக்கும் அதிகமான இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினர்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் நேரு, ஆர்.வெங்கட்ராமன் போன்ற பிரதமர், குடியரசுத் தலைவர்கள் தங்கியதும் உண்டு.

எலிசபெத் ராணி இந்தியத் தலைவர்கள் வந்தால், உபசரிப்பதை கவனமாக எடுத்துக் கொள்வார் என்ற தகவலும் உண்டு.

கென்னடி ஒருமுறை அங்கே சென்றபோது அவருக்கான உணவு வகையை தானே முன்னின்று படைத்தார்.

கிரேக்கத்தில் தோன்றிய ஜனநாயகம், பிரிட்டனில் வளர்ந்து நாடாளுமன்ற ஜனநாயக முறையாக இப்போதும் உள்ளது. என்றாலும் பாரம்பரியத்தை மதிப்பது, பேணுவது என்பதில் அங்குள்ள மக்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள்.

எனவே நாடாளுமன்றத் தாய் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் அழைக்கப்படுகிறது.

அதுபோல குடியரசு என்பது இத்தாலியில் பிறந்து, அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டில் அதிபர் ஆட்சியாகத் திகழ்கிறது.

உலகத்தில் முதல் அரசியல் சாசனம் ஆவணம் மகாசாசனம் என்று ஜான் அரசரால் இங்கு உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது.

மரபுகளும், நடைமுறைகளும்தான் அரசியல் சாசனமாக விளங்குகிறது. மற்ற உலக நாடுகளில் இதைப் போல எழுதப்பட்ட அரசியல் சாசனம் இஸ்ரேலிலும், நியூசிலாந்திலும் கிடையாது.

இங்கிலாந்தின் காலனி நாடுகள் விடுபட்டன. மீதி இருந்த நாடுகள் காமன்வெல்த் நாடுகளாக ஒன்றிணைந்தன. 56 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இரண்டாம் எலிசபெத் இருந்து வந்தார்.

தற்போது இளவரசர் சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். என்றாலும் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பஹாமாஸ், ஐமைக்கா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்து மகாராணியை தங்களுடைய நாட்டின் ஆட்சித் தலைவராகப் பார்க்கின்றன.

வரும் காலத்தில் யார் முடிசூட்டிக் கொள்கிறார்களோ, அவரைத் தலைவராக கருதுவார்கள் என்று சொல்ல முடியாது.

அதற்கு எதிரான கருத்துகளும் அந்த நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பஹாமாஸில் நாட்டின் அதிபர் இது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

பிரிட்டனின் ராணிக்கு வரி செலுத்த விலக்கு உள்ளது. ஆனால் எலிசபெத் 1992 – ஆம் ஆண்டுக்குப் பிறகு தானாகவே முன் வந்து வருமான வரி செலுத்தினார் முதலீட்டு லாப வரி செலுத்தினார்.

பொதுவாக பிரிட்டனில் இருந்து மன்னர்கள் வந்தால் டெல்லியிலேயே தங்கிவிடுவார்கள்.

கல்கத்தா போன்ற இடங்களுக்கு மட்டும் செல்வது வாடிக்கை. அவர்கள் வருவதையொட்டி பல நகரங்களில் சிலைகள் வைப்பது உண்டு.

ஆனால் எலிசபெத் இந்தியாவுக்கு மூன்றுமுறை வந்தபோது பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1961 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேரு பிரதமராக இருந்த காலத்தில் முதன்முறையாக தனது கணவர் இளவரசர் பிலிப் உடன் வருகை தந்தார்.

ஆக்ராவுக்குச் சென்று தாஜ்மஹாலைப் பார்த்தார்.

மும்பை, ஜெய்ப்பூர், வாரணாசி, பெங்களூர், மைசூர், சென்னை, கொல்கத்தா என பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார். ராஜ்கட்டிலுள்ள மகாத்மாகாந்தியின் நினைவு இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இரண்டாவது முறையாக 1983 – ஆம் ஆண்டு. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, டெல்லியில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார்.

இலங்கைப் பிரச்னை தொடர்பாக அங்கே பேசப்பட்டது. ஜெயவர்த்தனேயும் வந்திருந்தார்.

இந்தியாவின் 50 ஆவது சுதந்திர கொண்டாட்டத்தையொட்டி 1997 – ஆம் ஆண்டு மீண்டும் வருகை தந்தார்.

அவருடன் அவருடைய கணவர் பிலிப் மௌண்ட்பேட்டனும் வந்திருந்தார்.

அப்போது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்தது. ஆனால் எலிசபெத் மகாராணி ஜாலியன் வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் நிறுத்திக் கொண்டார்.

“சரித்திரத்தில் சில சம்பவங்கள் சோகம் தரக் கூடியவை. சில சம்பவங்கள் மகிழ்ச்சி தரக் கூடியவை. சோக சம்பவங்களில் இருந்து நாம் பாடம் கற்கலாம்” என்று சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்காமல் சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவுக்கு இரண்டாம் எலிசபெத் வருகை தந்தார். அப்போதைய முதல்வர் கலைஞரும் அங்கு வந்திருந்தார். தரமணியில் நடந்த அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்.

இப்போது எலிசபெத் பயன்படுத்திய பொருள்களை வாங்கி வைத்துக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

அவர் பயன்படுத்திய டிப் டீ பேக் ஒன்றை யாரோ கடத்தி, இணையத்தின் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.9.5 லட்சம். அவர் குப்பையாக போட்டது கூட மதிப்புக்குரிய பொருளாக நினைக்கப்படுகிறது.

-தொடரும்

Comments (0)
Add Comment