– உலக வெறிநாய்க்கடி நோய் தினம்
செல்லப் பிராணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது பூனை, நாய் போன்ற விலங்குகளை வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.
அப்படி வளர்க்கப்பட்டு வரும் விலங்கினங்களால் உயிரை பறிக்கக் கூடிய நோய்களும் பரவுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.
அன்பாக, பாசமாக வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகள் சில நேரங்களில் வெறிப்பிடித்து வளர்த்தவர்களை கொன்று விடும் சம்பவங்களும் நடக்கின்றன. சாலையில் சுற்றித் திரியும் நாய் முதல்
செல்லமாக வளர்க்கப்படும் நாய்கள் வரை அதற்கு வெறி பிடித்து விட்டால் கடிபட்டவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆண்டுக்கு 24 லட்சம் பேர் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்களாம். அதில் பெரும்பாலும் சிறுவர்கள் என்பது வேதனை.
வெறிநாய் கடித்தால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை. இந்த கொடிய நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினம் செப்டம்பர் 28.
இவரின் நினைவாக 2007 – ம் ஆண்டு முதல் உலக வெறிநாய்க்கடி நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வெறிநாய்க்கடி நோய் என்பது உலக முழுவதும் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய சவாலான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
நாய்க்கடியால் வரக்கூடிய ரேபிஸ் மனித உயிருக்கு ஒரு ஆபத்தான நோயாக பார்க்கப்படுகிறது.
வெறிநாய்க்கடி தாக்குதல் என்பது மனித மூளையை பாதித்து மரணம் அடைய செய்யும் ரேபிஸ் கொடிய நோயாகும்.
இதன் பாதிப்புக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி வெறிநாய்க்கடி பாதிப்பால் 95 % மரணம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகரித்து உள்ளதாக கூறுகின்றனர்.
நாய்க்கடிக்கு உள்ளாக்கபடுபவர்களில் பெரியவர்களை விடவும் அதிக ஆபத்தை குழந்தைகள் எதிர்கொள்வது கூறுகின்றனர்.
கொடிய நோய் தாக்குதலில் பத்து பேரில் நான்கு பேர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது அதிர்ச்சியான தகவல்.
வெறிநாய்க்கடி நோய் [ரேபிஸ்] எப்படி பரவுகிறது?
ரேபிஸ் வைரஸ் தாக்குதலுக்கு ஆளான குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்ற விலங்குகள் மனிதர்களை கடிக்கும் போது ரேபிஸ் தொற்று பரவக்கூடும்.
ஆனால் பெரும்பாலும் இவைகள் கடிப்பது இல்லை. நாய்கடி மூலம் மட்டுமே ரேபிஸ் நோய் அதிக அளவு பரவுவதால் இது மனிதனின் நரம்பு மண்டலத்தை தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்துகிறது.
தடுப்பூசி முறையாக செலுத்தப்படாத வீட்டு நாய் மற்றும் தெரு நாய்களிடம் இருந்து இந்த நோய் பரவுகிறது.
கடித்து காயம், கீறல் ஏற்படாத இடத்தில் இந்த நோய் வைரஸ் பரவுவது கிடையாது. முதலில் இது உள்ளே நுழைந்ததும் தண்டு வடத்திற்கும் மூளைக்கு சென்றடைகிறது.
நோய் தொற்று பாதிப்பு அறிகுறிகள்?
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல், கடும் தலைவலி, மனநிலையில் மாற்றம் மற்றும் பதற்றம் காணப்படும். மார்பு, தொண்டைப் பகுதியில் தசை நடுக்கம் ஏற்படுகிறது.
மேலும் ஹைட்ரோபோபியா எனக் கூறப்படும் தண்ணீரைப் பார்த்து பயப்படுதல், அதிக சத்தம், இரைச்சல் போன்றவை கண்டால் அதிக கோபம் மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு இதன் அறிகுறியாகும்.
இது அறிகுறிகள் எல்லாம் நோய் தாக்குதலுக்கு ஆளான மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில் இருந்து எட்டாவது வாரத்தின் முடிவில் தெரிந்து விடும்.
கவனக்குறைவாக இருந்து விட்டால் இந்த பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்.
ரேபிஸ் நோய் தடுப்பு முறைகள் என்ன ?
நாய் கடித்த நபர்கள் பதட்டப்படாமல் முதலில் முறையாக சோப்பு, டெட்டால் போட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கடித்த 48 மணி நேரத்திற்குள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் போடப்படவேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்வது உங்கள் குடும்பத்தை ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாக்க உதவும்.
தெரு நாய்களுடன் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள், நாய்களிடம் இருந்து விலகி இருக்க கற்றுக் கொடுங்கள்.
ஒரு வேலை கடித்துவிட்டால் பயப்படாமல் உங்களிடம் கூறவேண்டும் என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
நாய் கடித்ததை பாதி குழந்தைகள் சொல்ல பயந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். எனவே அவர்களுக்கு உங்களிடம் இருந்து பயத்தை போக்குங்கள்.
தெருக்களில் சுற்றுத்திரியும் நாய்களால் மக்கள் பெரும் அவதி களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ரேபிஸ் நோய் தாக்குதல் என்பது அதிக அளவு பாதிக்கப்படுவது தெரு நாய்க்கடியால் மட்டுமே என்பதை உணர வேண்டும்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வெறிநாய்க்கடி நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ரேபிஸ் நோய் பாதிப்பில் இருந்து தடுப்பூசி மூலம் தடுக்க முடியும் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.
ஆகவே அரசு இதில் தலையிட்டு மாநகராட்சி மூலம் முறையான அந்தந்த பகுதியில் இருக்கும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தினால் ரேபிஸ் நோய் வராமல் தடுக்க முடியும்.
-யாழினி சோமு