‘ப்ரீ பயர் கேம்’ குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும்!

 – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

‘ப்ரீ பயர்’ கேமில், ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதில் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்,

கல்லூரியில் படித்த தனது மகள் காணாமல் போனதாகவும், உறவினர் வீடுகளில் தேடியதாகவும், கண்டுபிடிக்க முடியததால் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, மொபைல் போனில் இணையதள, ‘ப்ரீ பயர் கேம்’களை விளையாடும் பழக்கம் மகளுக்கு இருந்தது என்றும், அதன்மூலம் ஒரு ஆணின் அறிமுகம் கிடைத்ததாகவும், அவர் தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் எனது மகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளதால், மகளை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரரின் மகள் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர், இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு காலத்தின் போது, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. அப்போது, மாணவர்கள் பலர் மொபைல் போன் மோகத்தில், ‘ஆன்லைன்’ விளையாட்டில் ஈடுபட்டனர்.

இளைய தலைமுறையினர் நடைமுறை வாழ்விலிருந்து விலகி, தனி உலகை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும், அவை வெவ்வேறு பெயர்களில் இணையதளத்தில் ஊடுருவி வந்துவிடுகின்றன.

முற்றிலும் நீக்கம் செய்ய இயலவில்லை. குடும்பத்தில் பெற்றோர், குழந்தைகள் மொபைல்போனில் மூழ்கியுள்ளனர்.

மனம் விட்டு பேசுவதில்லை. ப்ரீ பயர் கேமில் ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள், குழந்தைகளின் மனதில் வன்முறையை துாண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மனுதாரரின் மகள், ‘தாயுடன் செல்ல விரும்புகிறேன். தடுத்து வைத்திருந்த நபருடன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்ளமாட்டேன். படிப்பில் கவனம் செலுத்துவேன்’ என்றார்.

இதைக்கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மாணவியை மீட்டு போலீசார் பாதுகாத்து வைத்துள்ளனர். பின், மனுதாரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மாணவியை தடுத்து வைத்திருந்த நபர், எதிர்காலத்தில் மாணவிக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.

அவர் மாணவியிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும்.

அந்நபரிடம் போலீசார் விசாரிக்க வேண்டும். மாணவி விருப்பப்படி மனுதாரருடன் செல்லலாம். இவ்வாறு உத்தரவிட்டனர். 

Comments (0)
Add Comment