– தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
புரசைவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
கேரளாவில் இந்த அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவுப் பிரிவு போலீசார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநகரிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் முன்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், ஜாம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வலுவாக உள்ள இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.