ஆதிச்சநல்லூரில் அமையவுள்ள அருங்காட்சியகம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களைத் தேர்வு செய்து அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அகழாய்வுப் பணியில் இதுவரை 85 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்து கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அகழாய்வுப் பணியில் மேலும் அதிசயமாக வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்க்கோழி, மீன் பிடிக்கப் பயன்படும் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடிக் கொண்ட கத்தி, இரும்பு வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள இந்த அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment