“எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா’’ என வடிவேலுவின் திரைப்படத்தில் வசனம் வரும்.
அரசியலில் அந்த வசனத்துக்கு அச்சு அசலாக தி.மு.க. பொருந்தும்.
எத்தனை முறை உடைந்தாலும் உயிர்ப்புடனும், துடிப்புடனும் பிரகாசிக்கும் கட்சியாக, தி.மு.க விளங்குகிறது.
அண்ணா காலத்திலேயே தி.மு.க. பிளவுபட்டது.
அப்போது, ஈ.வி.கே.சம்பத், கலகத்தில் ஈடுபட்டார். தி.மு.க.வில் இருந்து விலகினார்.
தனிக்கட்சி தொடங்கினார். போணியாகாததால் காங்கிரசில் இணைந்தார்.
அதன்பிறகு, அண்ணா இறந்தபின், திமுக.வில் பெரும் பிளவு ஏற்பட்டது.
கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரை ஓரம் கட்டும் முயற்சியில், தலைவர் கருணாநிதி முழு வீச்சில் இறங்கினார்.
அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வின் முகமாக இருந்த புரட்சித்தலைவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.
இதனால் தனிக்கட்சி தொடங்கினார், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆருக்கு தொண்டர்களின் அமோக ஆதரவு இருந்தது. கூடவே, மக்களின் ஆதரவும்.
இதனால் கருணாநிதியை ஆட்சிக்கட்டிலில் இருந்து சுலபமாக தூக்கி எறிய முடிந்தது.
எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், கருணாநிதி, பெரும் கூட்டணி அமைத்து மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
அவரது காலத்தில் மீண்டும் ஒரு பிளவைச் சந்தித்தது தி.மு.க.
அப்போது பிளவை ஏற்படுத்தியவர் வைகோ.
அவர், ம.தி.மு.க,வை தொடங்கியபோது கிட்டத்தட்ட 10 மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வில். இருந்து வெளியேறி ம.தி.மு.க.வில் இணைந்தனர். கணிசமான தொண்டர்களும் ம.தி.மு.க.வில் சேர்ந்தனர்.
தேர்தல்களில் தொடர் தோல்வி, கட்சி நிர்வாகிகள் விலகல் போன்ற காரணங்களால் பின்னாளில் மதிமுக கரைந்தது.
இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம்.
கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின், பலம் பொருந்திய கூட்டணியை அமைத்து வெற்றி கண்டார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தி.மு.க.வில் கலகக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மகன் உதயநிதியை தனது நாற்காலியில் அமர வைக்கும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். மூத்த தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.
இதனாலேயே உதயநிதி அமைச்சர் ஆவதில் தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. தேர்தலில் கோடி கோடியாக செலவிட்டு வெற்றி பெற்ற பல எம்.எல்.ஏ.க்களால் சம்பாதிக்க முடியவில்லை..
இதனால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை வளைக்க அதிமுக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆதரவு நிர்வாகிகளின் ஆதிக்கத்தால் மூத்த தலைவர்கள் தி.மு.க.வில் இருந்து விலக ஆரம்பித்துள்ளனர்.
விலகலுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி.
சுப்புலட்சுமி ராஜினாமா செய்ததன் மூலமாக, தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள புகைச்சல் பகிரங்கமாக வெளியே வர ஆரம்பித்துள்ளது.
கொங்கு மண்டல திமுகவின் முக்கிய அங்கமாக இருந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளரான அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்துள்ளார்.
45 ஆண்டுகள் அரசியலில் பயணித்த இவர் ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தார்.
எம்ஜிஆரின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர்.
1980-ல் திமுகவுக்கு தாவிய சுப்புலட்சுமி, மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில்
போட்டியிட்டார்.
வெற்றி பெற்றால் அவருக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவி வழங்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சரஸ்வதியிடம் தோற்றுப்போனார்.
தி.மு.க. நிர்வாகிகள் சிலரே தன்னை தோற்கடித்தாக கட்சித் தலைமையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தொடர்ச்சியாக கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
வெறுத்துப்போன சுப்புலட்சுமி, தி.மு.க.வைத் துறந்தார். இவரை பின்பற்றி மேலும் பலர் விலகலாம் என தெரிகிறது.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெயரும் இதில் அடக்கம்.
இவரும், சுப்புலட்சுமி மாதிரியே, கட்சி நிர்வாகிகளால் திட்டமிட்டு கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்.
கட்சிக்குள் உதயநிதிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் பட்சத்தில் தி.மு.க.விலிருந்து மேலும் சிலர் வெளியேற வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
– பிஎம்எம்.