எம்.ஜி.ஆரை வலிமைமிக்க தலைவராக பத்திரிகைகள் தெரிந்து கொண்ட தேர்தல்!

ஆளுமை மிக்க அரசியல் கட்சித் தலைவராக புரட்சித்தலைவர் பரிணமித்தபோது, அவரை பெரும்பாலான பத்திரிகைகள் அங்கீகரிக்கவில்லை.

இந்திய அரசியலில் ஒரு பிரளயத்தை உருவாக்கிய அ.தி.மு.க.வை அவர் ஆரம்பித்தபோது, சில நாட்கள் தலைப்பு செய்தியில் அவர் இடம் பெற்றார்.
அதன்பின் எம்.ஜி.ஆரை, சில பல நிர்ப்பந்தங்களால் சில தினசரிகள் ஓரம் கட்டின.

திண்டுக்கல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற்றதும், கொஞ்சநாள் தலைப்பு செய்தியில் வந்தார். பின்னர் மறந்தார்கள்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிவாகை சூடி அரியணை ஏறிய பிறகே, பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆரின் பலம் புரிந்தது.

இணைந்த கைகள்:

1973 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டசபைக்கு நடந்த தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தேர்தல் ஆகும். 

ஏன்? 

ஒரு வருடத்துக்கு முன்பு 1972 ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக, 1 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக 3-ம் இடத்தை பிடித்த நிலையில் மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த இந்திரா காங்கிரஸ் டெபாசிட் தொகையை பறி கொடுத்தது.

எதிர்க்கட்சியான காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் 2-ம் இடம் பிடித்தது.

இந்த நிலையில் புதுச்சேரி தேர்தல் அறிவிக்கப்பட – இந்திரா காங்கிரஸ் கவலை கொண்டது.

தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் அதிமுகவை வளரவிட்டுவிடக்கூடாது என பயந்தது.

அந்த நேரத்தில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் , இந்திரா காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்தது ஸ்தாபன காங்கிரஸ்.

ஒன்றரை வயது குழந்தையான அதிமுகவை அழித்து, ஒழிக்க புதுச்சேரி தேர்தலில் காமராஜரும், இந்திரா காந்தியும் கரம் கோர்த்தார்கள்.
ஒரே மேடையில் பேசினார்கள்.

அப்போது, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மூன்று அணிகள் களம் கண்டன.
அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்டும் ஒரு அணி.

மொத்தமுள்ள 30 இடங்களில் அதிமுக 22 இடங்களில் நின்றது. சிபிஐக்கு 7 தொகுதிகளும், கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக அணியில் சேர்ந்தது. ஸ்தாபன காங்கிரசும், காங்கிரசும் இன்னொரு அணி. என்ன நடந்தது?

அதிமுக 12 இடத்திலும், சிபிஐ 2 இடத்திலும், அவர்கள் ஆதரவு பெற்ற சுயேச்சை ஏனாம் தொகுதியிலும் வென்றார்கள்.

இரண்டு காங்கிரசும் சேர்ந்து 12 இடங்களில் ஜெயித்தார்கள். அதுவரை அங்கு ஆண்டு கொண்டிருந்த திமுக 2 இடத்திலும், சிபிஎம் ஒரு இடத்திலும் வென்றது. அதிமுக. கூட்டணி ஆட்சி அமைத்தது.

அதிமுகவின் எஸ்.ராமசாமி முதலமைச்சர் ஆனார். இந்திராகாந்தி, காமராஜர், கருணாநிதி ஆகிய மூவரையும் ஒரு சேர வீழ்த்தினார், எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு மக்கள் செல்வாக்கு

‘’திண்டுக்கல்லில் அதிமுக பெற்ற வெற்றி, ஏதோ எதிர்பாராத விதமாக கிடைத்த தற்காலிக வெற்றி அல்ல என்பது புதுச்சேரியில் நிரூபணம் ஆகியுள்ளது- எம்.ஜி.ஆர். மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவர் என்பதும் புதுச்சேரியில் நிரூபணம் ஆகியுள்ளது’’ என ஹிந்து நாளிதழ் புகழாரம் சூட்டியது.

‘’புதுச்சேரி தேர்தலுக்கு முன்பு அதிமுக வலுவான ஓர் அரசியல் சக்திமாக கருதப்படவில்லை- ஆனால், இனிமேல் அதிமுகவை யாரும் அவ்வளவு சாதாரணமாக கருத முடியாது’’ என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு, எம்.ஜி.ஆரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.

– பிஎம்எம்.

Comments (0)
Add Comment