ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்!

ரயில்கள் இயக்கத்தைக் கண்காணிக்க இஸ்ரோவுடன் இணைந்து புதிய தொழில் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே அமைச்சகம், “நிகழ்நேர தகவல் அமைப்பு என்ற புதிய தொழில்நுட்பத்தை ரயில் இஞ்சின்களில் பொருத்தும் நடவடிக்கையை இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முலம் ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, புறப்பாடு மற்றும் வழித்தடம், ரயில்கள் இயக்கப்படும் நேரம் உள்ளிட்டவை கட்டுப்பாட்டு அலுவலக விளக்கப் படத்தில் தானாகவே பெறப்படும்.

நிகழ்நேர தகவல் அமைப்பு தொழில்நுட்பம், 30 விநாடிகள் கால இடைவெளியில், புதிய தகவல்களை வழங்கும்.

இந்தத் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இஞ்சின்கள் மூலம், ரயில்களின் இருப்பிடம், இயக்கப்படும் வேகம் உள்ளிட்டவற்றை எளிதாகக் கண்காணிக்க முடியும்.

இதுவரை 2,700 ரயில் இஞ்சின்களில் இந்தத் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment