தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் தொடர்.
‘பழைய படமா ஒரே அழுகையா இருக்குமே’ என்ற வார்த்தைகள் 80’ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமானது. காரணம், அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஜாலியான சினிமாதான்.
துள்ளலான ஆட்டத்துடன் பாடல்கள், அந்தரத்தில் பறந்து தாக்கும் அதிரடிச் சண்டைகள், தன்னை மறந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை, உறவுகளின் உணர்ச்சிப் பிரவாகம், இவற்றின் இடையே மெலிதாய் காமம் தூண்ட வைக்க சில்க் ஸ்மிதா அல்லது அவருக்குப் போட்டியாகத் திகழ்ந்த ஆடற்கலைஞர்களின் நடனம் என்றே எண்பதுகளின் கமர்ஷியல் திரைப்படங்கள் இருந்தன.
அவற்றின் கருப்பொருளாக ‘பழிக்குப் பழி’ எனும் அம்சம் இருந்தது. அதனால், ’எத்தனை பாட்டு எத்தனை சண்டை ‘என்று கேட்டுவிட்டே ஒரு படம் பார்க்கச் செல்வதென்பது அன்றைய வாடிக்கை. இன்றோ, ஜாலி சினிமாக்கள் தவிர வேறேதும் வெளியாவதே இல்லை.
என்னதான் ட்ரெண்ட் தலைகீழானாலும், படத்தின் வகைமை மாறினாலும், ’ஜாலி சினிமா’வுக்கான வரையறைகள் இன்று மிகவும் சுருங்கிவிட்டது.
திரைப்படம் பார்த்து அழுவது மட்டுமல்ல, அதில் கதாபாத்திரங்கள் அழுவதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இன்றைய தலைமுறை வாழ்கிறது.
இதற்கு நேரெதிராக, சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் கண்ணீர் விட்டு கதறுவதற்காகவே மக்கள் திரைப்படம் பார்க்கச் சென்றார்கள் என்பது அவர்களுக்கு ஆச்சர்யம் தருவதாகவே இருக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயர் ‘துலாபாரம்’.
தமிழ் திரையுலகில் தனது ஒளிப்பதிவு திறமையினால் வியத்தகு சாதனை படைத்த வின்செண்ட் இயக்குனர் அவதாரம் எடுத்த படம் அது. தமிழில் ‘எங்களுக்கும் காலம் வரும்’, மலையாளத்தில் ஏழெட்டு படங்களில் இயக்குனராகப் பணியாற்றியிருந்தாலும் இதுவே அவரது முத்திரைப் படமாக அடையாளம் காணப்படுகிறது.
1968இல் வெளியான ‘துலாபாரம்’ படத்தை தழுவி உருவானது இத்திரைப்படம். முக்கியமான நான்கு கதாபாத்திரங்கள் கொண்ட இதில் பிரேம் நசீர், மது, ஷீலாவுக்குப் பதிலாக தமிழ் பதிப்பில் முறையே ஏவிஎம் ராஜன், முத்துராமன், காஞ்சனா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஒளிப்பதிவாளர் பி.பாஸ்கர் ராவ் மலையாளப் படத்தின் காட்சியாக்கத்தை அமைக்க, தமிழில் அப்பணியை பி.என்.சுந்தரம் மேற்கொண்டார் என்பதுவே வித்தியாசம்.
துயரங்களால் ஆன வாழ்வு!
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்த காரணத்திற்காக உறவினர்களால் ஒதுக்கப்பட்டவர் சத்தியமூர்த்தி (மேஜர் சுந்தர்ராஜன்).
இவரது ஒரே மகள் விஜயா (சாரதா). கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்தபோது, பாலசுந்தரம் (வி.எஸ்.ராகவன்) என்பவரிடம் பெரும்பணம் தந்து வீடு, நிலம் வாங்குகிறார் சத்தியமூர்த்தி. மனைவி இறந்தபிறகு மகள் விஜயா (சாரதா) உடன் வாழ்கிறார்.
கல்லூரியில் விஜயாவும் வழக்கறிஞர் சம்பந்தத்தின் (டி.எஸ்.பாலையா) மகள் வத்சலாவும் (காஞ்சனா) ஒன்றாகப் படிக்கின்றனர்.
இணைபிரியா தோழிகளாக வலம் வருகின்றனர். விஜயாவிடம் ஆசை வார்த்தைகள் பேசி நேசம் வளர்க்கிறார் பாபு (முத்துராமன்).
சத்தியமூர்த்தியிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு பெரிய ஆலையை நிறுவி முதலாளியாக மாறுகிறார் பாலசுந்தரம்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், தான் விற்ற சொத்துக்கள் அக்காலத்தில் குழந்தைகளாக இருந்த தனது மகள்களுக்குச் சொந்தமானவை என்பதன் அடிப்படையில் சத்தியமூர்த்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.
சத்தியமூர்த்தியின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் சம்பந்தமோ, பாலசுந்தரத்திடம் பணம் வாங்கிக்கொண்டு வழக்காடாமல் இருந்து அவ்வழக்கை தள்ளுபடி செய்யும் நிலையை உருவாக்குகிறார்.
இதனால் சத்தியமூர்த்தியும் விஜயாவும் நடுத்தெருவுக்கு வருகின்றனர்.
ஒரே மகள் விஜயாவை நிர்க்கதியாக விட்டுவிடக்கூடாது எனும் வருத்தம் பெருக, பாலசுந்தரத்தின் ஆலையில் பணியாற்றும் ராமு (ஏவிஎம் ராஜன்) உதவியுடன் மேல்முறையீடு செய்ய முயல்கிறார் சத்தியமூர்த்தி.
அப்போதும் தோல்விதான் கிடைக்கும் என்று தெரிய வந்ததும் அவரது இதயம் நின்றே விடுகிறது. இதனால் ஆதரவற்றவராகிப் போகிறார் விஜயா.
தந்தையை இழந்த துக்கத்தோடு, தன்னைச் சீரழிக்க எண்ணும் காமுகர்களின் பிடியில் தப்புகிறார் விஜயா. ராமுவிடம் அனுமதி பெற்று, அவர் வாழும் குடிசைப் பகுதிக்குச் செல்கிறார்.
அங்கு வந்து அவரைச் சந்திக்கிறார் பாபு. அப்போது, ‘உங்களை ஒருபோதும் நான் காதலிக்கவில்லை’ என்று சொல்லி விஜயாவின் மனதை மேலும் பல துண்டுகளாகச் சிதைக்கிறார்.
இந்த நிலையில், ராமுவை திருமணம் செய்யத் தயாராகிறார் விஜயா. வறுமையில் செம்மை என்பதற்கேற்ப இவர்களது இல்லறம் இனிதே செல்கிறது.
ஒருகட்டத்தில் அதுவும் சிதைவுக்குள்ளாகிறது. ஆலையில் நடைபெறும் தொழிலாளர் போராட்டம், ராமு போன்ற எண்ணற்ற தொழிலாளர்களை வறுமைக்குள் மூழ்கடிக்கிறது.
போராட்டத்தின் நடுவே ஒருநாள் ரவுடிகள் தாக்கியதில் ராமு மரணமடைய, விஜயாவும் குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகின்றனர்.
பாலசுந்தரம் குடும்பத்தினரின் செல்வாக்குக்கு அஞ்சி, ஊரில் உள்ள எவரும் விஜயாவின் படிப்புக்கேற்ற வேலை தர தயங்குகின்றனர்.
அதேநேரத்தில், ராமுவின் உறவினர்களும் கூட அவர்களைக் கைவிடுகின்றனர். வறுமையின் உச்சத்தில் பிச்சையெடுக்கவும் திருடவும் குழந்தைகள் முயல, அந்த வேதனையை தாங்க முடியாமல் அவர்களைக் கொன்று தானும் சாகத் தயாராகிறார் விஜயா.
துயரத்தின் உச்சமாக, குழந்தைகள் மடிவதை நேரில் கண்டபின்னும் அவர் உயிர் பிழைக்கிறார். சட்டத்தின் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறார். அவரது துயரங்களுக்கு யார் காரணம் என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புவதுடன் முடிவடைகிறது ‘துலாபாரம்’.
நிச்சயமாக, இன்றைய சூழலில் இது போன்ற கதைகளை தொலைக்காட்சித் தொடர்களில் கூட எதிர்பார்க்க முடியாது.
ஆனால், பிழியப் பிழிய சோகம் என்று தெரிந்தும் அன்றைய நாளில் பலரும் ‘துலாபாரம்’ பார்க்க குடும்பம் குடும்பமாகச் சென்றது ஆச்சர்யமளிக்கும் விஷயம்.
ஊர்வசி ஆன சாரதா!
அன்றிருந்த நடிகைகளில் பலர் பூசிய உடல்வாகுடன் இருந்தார்கள் அல்லது கொஞ்சம் குண்டாக இருந்தார்கள். காஞ்சனா, பாரதி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே உயரத்திற்கேற்ற எடையுடன் தோற்றமளித்தார்கள்.
அந்த வரிசையில் நல்ல வடிவான அழகியாகத் திகழ்ந்தவர் சாரதா. அவர் மிகச்சிறந்த நடிகை என்பதற்குப் பல படங்கள் சான்றாக இருந்தாலும், அவற்றில் ஒரு சோறு பதமாக இருப்பது ‘துலாபாரம்’.
தயக்கம் நிறைந்த கல்லூரி மாணவியாக, தோழியின் இயலாமையை புரிந்துகொண்டவராக, தந்தையின் மனவருத்தங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாத மகளாக, காதல் வலை வீசிவிட்டு கைவிட்டவரிடம் கோபத்தை வெளிப்படுத்த இயலாதவராக, நிர்க்கதியான நிலைமையில் ஒரு நல்மனிதரின் வாழ்க்கைத் துணையாக விரும்பியவராக,
அவருடன் வாழ்ந்த இனிமையான இல்லறத்தின் பயனாக வறுமையையும் வலிந்து ஏற்றுக்கொண்டவராக, தொடர் துயரங்களுக்குப் பிறகு விரக்தியில் இருந்து தப்ப முடியாதவராக, தனது குழந்தைகளையே கொல்லத் துணியும் பிறழ்ந்த மனம் கொண்டவராக விதவிதமாகத் தோற்றமளித்திருப்பார் சாரதா.
சிறிது இடைவெளிக்குப் பிறகு தோழியான காஞ்சனாவை அவர் சந்திக்கும் காட்சி, அவரது தேர்ந்த நடிப்பைக் காட்டும். கரி படிந்த முகமும் கிழிந்த புடவையுமாகத் தோன்றியிருப்பார்.
தொடக்கத்தில் வரும் ‘வாடி தோழி கதாநாயகி’ பாடலில் அவர் வெளிப்படுத்திய பொன்னெழிலுக்கு அது நேரெதிராக இருக்கும். அந்த வித்தியாசமே, காண்பவர் கண்களில் நீரை வரவழைத்துவிடும்.
வாழ்க்கை சக்கரம் சுழலும்போது ஒருவர் எப்படியெல்லாம் மாறிப்போவார் என்பதை தனது நடிப்பில் காட்டியிருப்பார்.
இறுதிக் காட்சியில் அவரது தோற்றம் காணும் எவரும் உண்மையிலேயே அப்படியொரு நிலைக்கு ஆளான என்றே பெண் என்றே நினைக்க வைக்கும்.
அதனாலேயே மலையாள மூலம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் சாரதாவே அப்பாத்திரத்தை ஏற்று நடித்தார். மலையாள ‘துலாபாரம்’ படத்திற்காக, 1968ஆம் ஆண்டு தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
இந்தி நடிகை நர்கீஸுக்கு பின்னர், அவ்விருதைப் பெற்ற இரண்டாவது நடிகை ஆனார். 1972இல் ‘சுயம்வரம்’ எனும் மலையாளப் படத்திற்காகவும், 1978இல் ‘நிம்மஜனம்’ எனும் தெலுங்கு படத்திற்காகவும் மேலும் இருமுறை இவ்விருதை வென்றார்.
அவ்விருதின் பெயரைத் தாங்கி இன்றும் ‘ஊர்வசி’ சாரதா என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
சிறந்த குணசித்திர நடிகையாகவும் திகழ்ந்த சாரதா, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாகவும் வெற்றி பெற்றார்.
2000க்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டவர், கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக எப்படத்திலும் தலைகாட்டாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
’குட்டி சிவாஜி’ அடைமொழி..!
சிவாஜியை முன்மாதிரியாக கொண்டு எண்பதுகளில் பல நடிகர் நடிகைகள் திரையுலகில் நுழைந்தது போல, அறுபதுகளில் அவருடன் இணைந்து பணியாற்றியபோது ஒரு சீடரைப் போல நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் ராஜன்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜியின் தம்பியாக அவரது நிழல் போன்றே தோன்றியிருப்பார். அந்த காலத்தில் இவரை ‘குட்டி சிவாஜி’ என்று கிண்டல் செய்திருக்கிறார்களாம்.
ஏவிஎம் ராஜன் நடித்த படங்களை பார்த்தால், அது உண்மையென்றே தெரியவரும்.
‘துலாபாரம்’ படத்தில் அவரது அறிமுகம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்தே நிகழும். தொடக்கத்தில் வழமையான நடிப்பை வெளிப்படுத்தினாலும், பின்பாதியில் வரும் காட்சிகளில் ராமு என்ற கதாபாத்திரமாக மட்டுமே தோன்றியிருப்பார் ராஜன். துலாபாரத்தின் பாதிப்போ என்னவோ, இவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை சோகமயமானவைதான்.
’கலாட்டா கல்யாணம்’ போன்று வேறு முழுநீள நகைச்சுவை படங்களில் இவர் நடித்திருக்கிறாரா என்பது சந்தேகம்தான்.
‘நானும் ஒரு பெண்’ வழியே தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜன், 1987இல் ‘வீரன் வேலுத்தம்பி’ படத்திற்குப் பின் நடிப்புலகில் இருந்து முழுமையாக விலகினார். கிறித்துவ மதபோதகராக பணி செய்து வருகிறார்.
ராமு பாத்திரத்திற்கு நேரெதிரான குணாம்சங்களுடன் ‘டோண்ட் கேர்’ மனோபாவம் கொண்ட கல்லூரி மாணவன் பாபுவாக நடித்திருப்பார் முத்துராமன்.
தோழியின் வாழ்வு தலைகீழாக மாறிப்போனதை கண்டு வருந்தும் தோழியாக காஞ்சனா வந்து போயிருப்பார்.
இவர்கள் தவிர்த்து டி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன், மேஜர் சுந்தர்ராஜன் தொடங்கி சுருளிராஜன், செந்தாமரை, பீலி சிவம், காந்திமதி என்று ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் இதில் நடித்திருப்பார்கள்.
இவர்களில் இரண்டு பேரின் இருப்பு இன்றைய தலைமுறையையும் கவரும். முதலாமவர் நாகேஷ்.
வில்லத்தனம் கலந்த எடுபிடியாக அவர் செய்யும் சேட்டைகளும் பேசும் வசனங்களும் சிரிப்புடன் கோபத்தை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
போலவே, வெள்ளந்தியான ஒரு நடுத்தர வயது தாயின் மனநிலையைத் துல்லியமாக உணர்த்துவார் எஸ்.என்.லட்சுமி. இந்த படம் வெளியான காலகட்டத்தில் ஏவிஎம் ராஜனுக்கும் அவருக்கும் இடையே பெரிதாக வயது வித்தியாசம் இருந்திருக்காது.
ஆனால், அவரைத் தனது மகன் என்று விளிக்கும்போது நமக்கு ஏற்புடையதாகவே தோன்றும். அதற்குக் காரணம், அவரது தேர்ந்த உடல்மொழியுடன் கூடிய நடிப்பு.
நாடகத்திலிருந்து வந்த சினிமா!
கேரள பீபுள்’ஸ் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் நாடகமாக நடத்தப்பட்ட ‘துலாபாரம்’ சுடச்சுட தோப்பில் பாஸி கதை வசனத்தில் மலையாளத்தில் திரைப்படமாகவும் உருவாகி வெற்றி வாகை சூடியது.
அன்றைய காலகட்டத்தில் கேரளத்தில் நிகழ்ந்த தொழிலாளர் போராட்டங்களை தழுவி அமைந்த இப்படம் பெருவெற்றியைப் பெற்றது.
படம் முழுக்கவே ‘பிளாஷ்பேக்’ வடிவில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. காதலித்த பாபுவை விட்டு விலகி, தோழி வத்சலாவின் சொல்லையும் மீறி, ராமுவை விஜயா கல்யாணம் செய்வது இக்கதையில் சர்ச்சையைக் கிளப்பும் இடம். அக்காட்சிகள் மட்டும் தொடச்சியாக நிகழ்வது போல படமாக்கப்பட்டிருக்கும்.
விஜயாவின் முடிவில் தவறேதும் இல்லை என்று படம் பார்த்த தாய்மார்களே ஒப்புக்கொள்ளும் வண்ணம் அவரது பாத்திரமும் அக்காட்சிகளும் வடிவமைக்கப்பட்டிருந்ததே ‘துலாபாரம்’ வெற்றிக்கான முதல் காரணம்.
விஜயா ஏன் தனியாக வாழ்வை மேற்கொள்ளும் வண்ணம் ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவில்லை அல்லது தோழி வத்சலாவின் தயவை நாடவில்லை என்பதற்கான விளக்கங்களும் தெளிவாகத் தரப்பட்டிருக்கும்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது வலியுறுத்தப்பட்ட காலகட்டத்தில், ஒரு பெண் காதலித்தவரை விடுத்து இன்னொருவரை திருமணம் செய்வது சாதாரண விஷயமல்ல. அதற்கேற்ப, அதில் வசனங்களை வாரி இறைத்திருப்பார் வசனகர்த்தா மல்லியம் ராஜகோபால்.
இது போதாதென்று வர்க்க இடைவெளியையும் வறுமையும் வெளிப்படுத்தும் வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்கு ஒரு உதாரணம், ’உங்க பங்களாவும் என் குடிசையும் பக்கத்துல பக்கத்துல இருந்தாலும் ரெண்டும் வெவ்வேற உலகம்’ என்று ஏவிஎம் ராஜன் சாரதாவிடம் சொல்வது.
சீரியசான ஒரு கதையில் சிரிப்பூட்டும் இடங்கள் அதிகம் வாய்க்காது. அதனாலேயே, நாகேஷ் மற்றும் பாலையா பேசுமிடங்களை பயன்படுத்தியிருப்பார்.
அது போலவே, ‘இந்த கதாநாயகிகளே இப்படித்தான், அனுபவிக்குறது பூரா அவங்க அவஸ்தைப்படறது நாங்க’ என்று காஞ்சனா பேசும் வசனம் கிட்டத்தட்ட ‘இம்சை அரசனில்’ வி.எஸ்.ராகவன் சொல்லும் ‘இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்வது’ என்பதற்கு முன்னோடியாக அமைந்திருக்கும்.
அபாரமான ஒளிப்பதிவு!
நீதிமன்றம் நோக்கி மக்கள் செல்வதில் இருந்து ‘துலாபாரம்’ திரைக்கதை தொடங்குகிறது. இதிலுள்ள நீதிமன்றக் காட்சிகளும் வழக்கமாகத் திரைப்படங்களில் வருவது போன்றிருக்கிறது.
ஆனால், காட்சிக் கோணங்கள் அமையப் பெற்ற விதமே இது சாதாரண படைப்பல்ல என்ற எண்ணத்தை விதைக்கும்.
அக்காட்சியில் சாரதாவின் முகத்தைக் காட்டாமல், சுவரில் விழும் அவரது நிழல் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
‘அவரா இவர்’ என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில், அதனைத் தொடர்ந்து வரும் ‘வாடி தோழி கதாநாயகி’ பாடலில் காஞ்சனா, பானுமதி, சாரதாவின் அழகில் காமச்சுவை ததும்பும்.
அதன் பிறகு கல்லூரி வாயில், சாலைகள், ஏரிக்கரை, கடற்கரை பகுதி, பனை மரங்கள் நிறைந்த புறநகர்ப்பகுதி என்று அந்தக்கால சென்னை திரையில் காட்டப்பட்டிருக்கும்.
‘சிரிப்போ இல்லை நடிப்போ’ பாடலின் தொடக்கத்திலும் முடிவிலும் நடனமாடுபவர்களின் நிழல்கள் தரையில் நீண்டிருப்பதைக் காண முடியும்.
இடைப்பட்ட வரிகளில் காலின் கீழே நிழல் விழும் அளவுக்கு மதிய வெயிலில் பாடல் படம்பிடிக்கப்பட்டிருக்கும்.
அந்த எண்ணம் சிறிதளவும் நம்மை அயர்வுக்குள்ளாக்காது. இத்தனைக்கும் சூரிய ஒளிக்கு நேரே கேமிரா கோணங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
அது போலவே, ’காற்றினிலே’ பாடலில் ஒரு மீனவனை ‘லோ ஆங்கிள் ஷாட்’டில் காட்டும்போது வானம் 3 பங்கும் நிலம் 1 பங்கும் இருக்கும் வகையில் காட்சியாக்கம் அமைந்திருப்பது கண்கொள்ளா அழகு.
இவையிரண்டுக்கும் நேரெதிராக ‘பூஞ்சிட்டு கன்னங்கள்’ பாடல் அரங்கினுள் இடப்பட்ட குடிசை செட்டுக்குள் அபாரமாக படம்பிடிக்கப்பட்டிருக்கும்.
ஒளிப்பதிவு இயக்குனர் பி.என்.சுந்தரம் திறமையானவர் என்றாலும், இயக்குனரான வின்சென்ட்டும் நாடறிந்த ஒளிப்பதிவு மேதை என்பது இப்படத்தைப் பார்க்கும்போது நினைவுக்கு வரும்.
1968இல் ’துலாபாரம்’ டீம் மீண்டும் இணைந்து ‘நதி’ எனும் மலையாளப் படம் தந்தது. துலாபாரத்தில் நடித்த பிரேம் நசீர், சாரதா, மது காம்பினேஷனில் வெளியான இது வண்ணப்படமாக இருந்தது.
இதற்கும் ஒளிப்பதிவு செய்தார் பி.என்.சுந்தரம். கேரளத்தின் காயல் பகுதியில் ஒரு படகுப் பயணத்தை ஒட்டி இக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
ஐம்பதுகள் தொடங்கி தொண்ணூறுகளின் இறுதி வரை வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் ஒருசேர வலம் வந்தவர் ஏ.வின்சென்ட்.
அழகான காட்சியமைப்புகள் மட்டுமல்லாமல் பரீட்சார்த்த முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு பல ஒளிப்பதிவாளர்களை தனது ஏகலைவர்களாக மாற்றிய பெருமையும் இவருக்குண்டு. அதே நேரத்தில், இவர் இயக்கிய முப்பத்தி சொச்சம் படங்களில் பலவற்றில் வேறு ஒளிப்பதிவாளர்களைப் பயன்படுத்தினார்.
பி.பாஸ்கரராவ், ராமு காரியத், ஸ்ரீதர் உள்ளிட்ட ‘கிளாசிக்’ இயக்குனர்கள் தொடங்கி கே.ராகவேந்திர ராவ் உள்ளிட்ட கமர்ஷியல் இயக்குனர்கள் வரை பலர் உடன் கைகோர்த்து விதவிதமான படைப்புகளைத் தந்த பெருமையும் இவருக்குண்டு.
இவரது மகன்கள் ஜெயனன், அஜயன் இருவருமே வெற்றிகரமான ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்கின்றனர்.
தேவராஜனின் நம்பிக்கை!
கே.வி.மகாதேவனின் சீடராக இருந்து மலையாளத் திரையுலகில் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டவர் பி.தேவராஜன்.
‘துலாபாரம்’ படத்தில் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப மெட்டமைத்து ஆறு பாடல்களைத் தந்தார்.
’காற்றினிலே பெரும் காற்றினிலே’ பாடல் திரைக்கதையில் ஆங்காங்கே இடம்பெற்றாலும் முழுக்க சோகச்சுவை ததும்பச் செய்யும். இதனைப் பாடியவர் ஜேசுதாஸ்.
மீதமுள்ள ஐந்தில் நான்கு பாடல்களைப் பாடினார் டி.எம்.சவுந்தரராஜன். ’சிரிப்போ இல்லை நடிப்போ’ பாடலும் சரி, ‘சங்கம் வளர்த்த தமிழ்’ பாடலும் சரி, கேட்டவுடன் மனதில் துள்ளல் எழும்.
’துடிக்கும் ரத்தம் பேசட்டும்’ என்ற வரிகளே எழுச்சிக்கான பாடல் அது என்பதைச் சொல்லிவிடும்.
‘பூஞ்சிட்டு கன்னங்கள்’ பாடல் இன்றளவும் ஏழைக் குடும்பங்களின் தினசரி வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. துயரங்களுக்கு நடுவே இன்பத்தின் கீற்றை காணும் நெகிழ்ச்சி அப்பாடலில் இழையோடும்.
இப்பாடலை பி.சுசீலா பாடியதற்கும் முதல் பாடலான ‘வாடி தோழி கதாநாயகி’யை பாடியதற்கும் நிறைய வித்தியாசங்களை காண முடியும்.
இதுவே கதையோட்டத்திற்கும் கதாபாத்திர வடிவமைப்பிற்கும் ஏற்ப பாடல்கள் உச்சரிக்கப்பட வேண்டுமென்பதில் அவர் காட்டிய மெனக்கெடலை காட்டுகிறது.
தேவராஜன் உதவியாளராக பணியாற்றியவர் ஏ.கே.சேகர். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை. தேவராஜன் வெற்றிப் பயணத்தில் இவருக்கும் கணிசமான பங்குண்டு.
அழுகை அவமானமா?!
நவரசங்களில் சோகத்திற்கும் இடமுண்டு. அதனாலேயே, அறுபதுகளில் வெளியான பல படங்களில் சோக காட்சிகளுக்கு தனியிடம் தரப்பட்டிருக்கும். எம்ஜிஆர் தவிர்த்து பிற நடிகர்களின் படங்களில் அச்சுவை மேலோங்கியிருப்பதை காணலாம்.
என் தங்கை, நாடோடி போன்ற படங்கள் தோல்வியுற்ற காரணத்தாலும், தன் ரசிகர்களின் வேண்டுகோளாலும் முடிந்த அளவுக்கு மென்மையான சோகத்தை எம்ஜிஆரின் படங்கள் வெளிப்படுத்தின.
சிவாஜி படங்களில் சோகம் நிரம்பியவற்றை வரிசைப்படுத்தினால் கணிசமானவை தேறும். திரையில் அழுகையை வெளிப்படுத்துவதை விதவிதமாக நடித்து காண்பித்தவர் அவர்.
அன்றிருந்த குணசித்திர நடிகர்களில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, சகஸ்ரநாமம், டி.எஸ்.பாலையா, ராஜம்மா, கண்ணாம்பாள் உட்பட பல கலைஞர்கள் நம்மை அழுகைக்கடலில் ஆழ்த்தும் திறன் படைத்தவர்கள்.
அதன்பிறகு நாகேஷ், மனோரமா போன்ற நகைச்சுவைக் கலைஞர்களும் கூட அதனை மிகச்சீரிய வகையில் திரையில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அந்த சோகச்சுவையை முழுக்க கொண்ட கதைகள் வெளியாக வகை செய்தது ‘துலாபாரம்’. வறுமையின் பிடியினால் பெற்ற குழந்தைகளையே கொன்ற நல்லதங்காளின் இன்னொரு வடிவம்தான் இக்கதை.
கேரளத்தில் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தேறிய நாட்களை பிரதிபலித்த இத்திரைப்படம், அத்தகைய வாழ்க்கையை கரிசனத்துடன் பார்க்கச் செய்த வகையிலும் முக்கியமாகிப் போனது.
அன்றைய மக்கள் வாழ்வின் துயரங்களில் இருந்து விடுபட திரையரங்கு சென்று அழுது தீர்த்தனர். கண்ணீரில் கரைந்துவிட்ட சோகங்களை கால்களின் அடியில் விட்டுவிட்டு வீடு திரும்பினர்.
இன்றைய மக்களோ திரையரங்குகளில் குதித்து கும்மாளமிட்டுவிட்டு, வீட்டுக்குள் புகுந்தவுடன் சத்தம் வெளிவராமல் மவுனமாக அழுது புலம்புகின்றனர்.
அழுகையை அவமானமாக எண்ணி, நிரந்தரமாக தம்மை சோகத்தினுள் புதைத்துக் கொள்கின்றனர்; நடமாடும் பிணங்களாகவே திரிகின்றனர்.
அதிலிருந்து விடுபடவாவது நாம் சோகச் சுவையைத் திரையில் கண்ணார காண வேண்டும். ’துலாபாரம்’ போன்ற படங்கள் அப்படி நம்மை கதறச் செய்தவை; கண்ணீரின் வழியே நம் சோகங்களை கரைக்கும் வல்லமை தந்தவை.
‘துலாபாரம்’ வரிசையில் மறுமுறை பார்க்கத் துணியாத படங்கள் பல தமிழில் உண்டு. அதற்குக் காரணம், அத்திரைக்கதை காட்டும் உலகம் நம்பகத் தன்மையுடன் விளங்குவதுதான்.
வெறுமனே சோகச்சுவை நிறைந்த கதைக்காக மட்டுமல்லாமல் இன்றிருக்கும் திரைப்பட உழைப்புக்குச் சவால் விடுக்கும் வகையில் நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பேருழைப்பை கொட்டிய படைப்பாகவும் இது திகழ்கிறது.
இன்று முழுக்க முழுக்க சோகத்தை பிழியும் படங்கள் வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவென்றாலும், அச்சுவையை முதன்மைப்படுத்திய ‘பீல்குட்’ வகையறா திரைக்கதைகள் அதிகளவில் வெளிவரவும் அவை வெற்றி பெறவும் வழியமைக்க வேண்டும்.
அதுவே ‘துலாபாரம்’ தந்த இயக்குனர் வின்சென்ட் மற்றும் குழுவினருக்கு அடுத்தடுத்த தலைமுறை செலுத்தும் மரியாதையாக அமையும்!
படத்தின் பெயர்: துலாபாரம்
கதை: தோப்பில் பாஸி
வசனம்: மல்லியம் ராஜகோபால்
இசை: தேவராஜன்
பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்
எடிட்டிங்: ஜி.வெங்கட்ராமன்
கலை: கங்கா
உடைகள்: து.கோவிந்தராஜன்
ஒப்பனை: கிருஷ்ணராஜ், பத்மநாபன், எம்.ராமசாமி, ஏ.பெரியசாமி, மாணிக்கம், எம்.எஸ்.நாராயணன், சொக்கலிங்கம், தங்கப்பன், கிருஷ்ணன்
ஸ்டில்ஸ்: ஆர்.என்.நாகராஜ ராவ்
சண்டைப்பயிற்சி: ஜூடோ கே.கே.ரத்தினம்
நடன அமைப்பு: பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், தங்கப்பன், சுந்தரம்
ஒளிப்பதிவு இயக்குனர்: பி.என்.சுந்தரம் & ஏ.வெங்கட்
பாடல்கள் ஒலிப்பதிவு: ஜே.ஜே.மாணிக்கம், ஏ.எம்.சுவாமிநாதன்
வசன ஒலிப்பதிவு: எம்.டி.ராஜாராம்
பிராசஸிங்: டி.ராமசாமி
ஸ்டூடியோ: ஏவிஎம் ஸ்டூடியோஸ்
தயாரிப்பு: விநாயகா சுப்ரியா கம்பைன்ஸ் – ராமண்ணா
இயக்கம்: வின்சென்ட்..
நடிப்பு: ஏவிஎம் ராஜன், சாரதா, காஞ்சனா, முத்துராமன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், வி.எஸ்.ராகவன், மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன், பீலிசிவம், பானுமதி, எஸ்.என்.லட்சுமி, காந்திமதி மற்றும் பலர்.
-உதய் பாடகலிங்கம்