(2006-ல் கலைஞர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும்.)
கேள்வி: இத்தனை வருடப் பொது வாழ்க்கையில் இன்னமும் உங்களின் நிறைவேறாத ஆசை என்ன?
கலைஞர் பதில் : (சிரித்துவிட்டு) எல்லோரும் நல்லவரே என்ற நிலை எப்போது வரும் என்பதுதான் என்னுடைய நிறைவேறாத ஆசை!
கேள்வி: பிரதமர் முதல் பில்கேட்ஸ் வரை உங்களைச் சந்தித்துவிட்டுப் போகிறார்கள். நீங்கள் சந்திக்க விரும்பி, இன்னும் சந்திக்க முடியாத நபர் என யாராவது உண்டா?
கலைஞர் பதில்: ஒரே ஒருவர் உண்டு. அமெரிக்காவிற்கு சவால்விட்டுச் செயல்படும் தலைவர். இப்போதுகூட ஒரு தவறான பிரச்சாரத்தினால் அவர் சீரியஸாக இருக்கிறார் என்று சொன்னாங்களே அவர்தான்!
கேள்வி : யார் ஒசாமா பின்லேடனா?
கலைஞர் பதில் : (பெரிதாகச் சிரிக்கிறார்) நீங்க வேற ஒரு துருவத்துக்குப் போயிட்டீங்க. நான் சொல்ல வந்தது ஃபிடல் காஸ்ட்ரோ!
கேள்வி: ஏன் அரசியலுக்கு வந்தோம் என எப்போதாவது நினைத்ததுண்டா?
கலைஞர் பதில் : இல்லவே இல்லை! சிறுவயதில், திருவாரூரில் நானும் என் நண்பன் தென்னனும் கமலாலயக் குளத்துக்குக் குளிக்கப் போவோம். அந்தக் குளத்தின் நடுவில் சின்னதா ஒரு கோயில் இருக்கும்.
ஒரு நாள் விளையாட்டா, “அந்தக் கோயில் வரை நீந்திப் போவோம்”னு ரெண்டு பேரும் நீந்த ஆரம்பிச்சோம். கரையில் இருந்து பார்த்தா, பக்கத்தில் தெரிஞ்ச அந்தக் கோயில், நாங்கள் நீந்த ஆரம்பிச்ச பிறகு பார்த்தால், நெடுந்தொலைவில் இருந்தது.
பாதி தூரம் நீந்தினதுமே கை கால்கள் சோர்ந்து, மூச்சு வாங்கியது. “முடியலைடா வேணாம், நாம மறுபடி கரைக்குப் போயிருவோம்” என்றான் தென்னன்.
அப்போ நான் சொன்னது இன்னமும் நினைவிருக்கு… “தென்னா, நாம இப்போ ரெண்டு பக்கத்துக்கும் நடுவில் இருக்கோம். கரைக்குத் திரும்பி போறதும், கோயிலுக்குப் போறதும் கிட்டத்தட்ட ஒரே தூரம்தான்.
தெம்பா நீந்திப்போனா, கோயிலுக்கு நிச்சயமாய் போயிடலாம். அங்கு போயி அதில் ஏறி உட்கார்ந்து கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்”னு தைரியம் சொல்லி, விடாது நீச்சலடிச்சு குளத்தின் நடுவில் இருக்கிற கோயிலில் ஏறிட்டோம்.
“சரியாத்தான் சொன்னேன்”னு சிரிச்சான் தென்னன். சாதிச்ச சந்தோஷம் இருக்கே, அது எப்பவும் ரெண்டு மடங்கு தெம்பு தரும். அது குளம், இது களம்… அவ்ளோதான் வித்தியாசம்!
– நன்றி: மை.பா. நாராயணனின் ‘சந்திப்பு’ நூலிலிருந்து…